பௌத்த சிங்கள மக்களின் காவலனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு பதவிக்கு வந்த முன்னாள் இராணுவ வீரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, மக்களின் போராட்டத்திற்கு முகங்கொடுக்க முடியாது கோழை போல நாட்டைவிட்டுத் தப்பியோடியிருக்கின்ற செய்தி அனைவருக்கும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.
கடந்த 90 நாட்களுக்கும் மேலாக காலி முகத்திடலில் இரவு பகல் பாராது மக்கள் போராடி வந்தபோதிலும் அதற்கு செவிசாய்க்காது, தொடர்ந்தும் அதிகாரக் கதிரையில் அமர்ந்திருந்த கோத்தபாயவுக்கு பாடம் புகட்டும் வகையில் மக்கள் கடந்த ஜுலை 9 ஆம் திகதி கொழும்புக்குப் படையெடுத்து ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியவற்றை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய கோத்தபாய, கடற்படையினரின் உதவியுடன் கடலில் தரித்திருந்ததாகவும் பின்னர் விமான நிலையமருகேயுள்ள விமானப் படை முகாமில் பாதுகாப்பாக மறைந்திருந்ததாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இந் நிலையில்தான் அவர் நேற்று அதிகாலை மாலைதீவுக்கு விமானப் படை விமானம் மூலமாக தப்பிச் சென்றிருக்கிறார். அங்கிருந்து டுபாய் அல்லது சிங்கப்பூருக்குச் சென்று தஞ்சமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்குச் செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.
அவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும் இப் பத்தி எழுதப்படும் வரை ( புதன் இரவு 9 மணி வரை) அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்யவில்லை. மாறாக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளதாகவே சபாநாயகர் ஊடாக அறிவித்திருக்கிறார். இவ்வளவு நடந்தும் அவர் தனது ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதையும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை நசுக்கிவிடலாம் என அவர் திட்டமிடுகிறார் என்பதையுமே நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வுகள் எச்சரிக்கின்றன.
பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவும் படைப்பலம் கொண்டு மக்கள் போராட்டத்தை நசுக்குவதற்கான முயற்சிகளை நேற்றைய தினம் எடுத்திருந்தார். போராட்டக் களத்துக்கு மேலாக ஹெலிகொப்டர்களைப் பறக்கவிட்டும் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசியும் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயன்றார். எனினும் அதுவும் பலனளிக்கவில்லை. ஈற்றில் மக்கள் பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றினர். இத் தருணத்தில் படையினரும் மக்கள் மீது பலத்தைப் பிரயோகிக்கத் துணியவில்லை. மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவோ பலத்தைப் பிரயோகிக்கவோ முடியாது என முப்படையினரும் பொலிசாரும் இணைந்து நேற்று கூட்டாக அறிவித்திருப்பது சற்று ஆறுதல் தருவதாக உள்ளது.
கோத்தபாய பதவி விலகினாலும் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடி, வாக்கெடுப்பு மூலமாக புதிய ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்யும் வரை பதில் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கப் போகிறார். இக் காலப்பகுதியில் அவர் என்ன காய்நகர்த்தல்களைச் செய்யப் போகிறார் என்பதையும் எதிர்வு கூற முடியாதுள்ளது. மறுபுறம் பாராளுமன்றம் கூடி யாரை புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப் போகிறது என்பதில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. இப்போதுள்ள நெருக்கடிகள் தீர வேண்டுமானால் போராட்டக்காரர்களின் அபிலாஷைகளுக்கு இணங்கிச் செல்லக் கூடிய ஒருவரே அப் பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். இதனை உறுதிப்படுத்த வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடப்பாடாகும்.
இதனிடையே, கோத்தா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால் போராட்டம் வென்றுவிட்டதாக நாம் கருதிவிட முடியாது. மாறாக நாட்டில் முழுமையானதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் வரை இப் போராட்டம் ஏதேனுமொரு வழியில் தொடர வேண்டும். அதுவரை உயிர்ப்புடன் இருக்க வேண்டும். நாட்டை இந்தளவு சீரழிவு நிலைமைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ராஜபக்சாக்கள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
கோத்தா முகங்கொடுத்துள்ள இந்த நிலைமை அவரது பாணியில் அரசியல் செய்ய முயலும் அனைவருக்கும் தகுந்த பாடமாகும். அவரும் அவரது சகாக்களும் கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இறைவன் வழங்கியுள்ள தண்டனையாகவும் இதனைக் கருதலாம். குறிப்பாக அவர் சிறுபான்மை சமூகங்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் கசப்பான வரலாற்றைக் கொண்டவை. பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் அவர் செய்த அராஜகங்களும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகளும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை. இன்று அவற்றுக்கான பலனை அவர் அனுபவிக்கிறார். இது இந்த நாட்டில் எந்தவொரு அப்பாவி சமூகத்தையும் அடக்கி ஒடுக்கிக் கொண்டு அரசியல் செய்ய முடியாது என்ற பாடத்தை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இனவாத சக்திகளுக்கும் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வளவும் நடந்துள்ள போதிலும் நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் விரைவில் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக இல்லை. நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. வன்முறைகள், பழிவாங்கல்கள் மூலம் ஒருபோதும் தீர்வைக் காண முடியாது. நாட்டின் எதிர்கால சுபீட்சத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் விட்டுக் கொடுப்புடன் ஒன்றுபட வேண்டும்.- Vidivelli