கோத்தாவின் 50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை

மாலை தீவுக்கு தப்பிச் சென்றார்; விமா­னப்­படை சிறப்பு விமா­னத்தில் பயணம்; அங்­கி­ருந்து டுபாய் செல்ல திட்டம்

0 396

எம்.எப்.எம்.பஸீர்

மக்­களின் ஆத­ரவை இழந்­துள்ள நிலையில், பதவி வில­கு­மாறு மக்கள் வலி­யு­றுத்தும் பின்­ன­ணியில் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, தனது மனைவி மற்றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ருடன் நாட்­டி­லி­ருந்து நேற்று (13) அதி­காலை இர­க­சி­ய­மாக வெளி­யே­றினார்.

விமா­னப்­ப­டையின் அன்­டனோ 32 ( ஏ.என். 32) ரக விமா­னத்தில் மாலை தீவின் தலை­ந­க­ரான மாலே­வுக்கு அவர் பாது­காப்­பாக வெளி­யே­றி­ய­தாக விமா­னப்­படை ஊடகப் பணிப்­பாளர் விங் கொமாண்டர் துஷான் விஜே­சிங்க அறிக்கை ஊடாக உறுதி செய்தார். அதன்­படி கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் சுமார் 50 மணி நேரம் தனது சொந்த நாட்டின் மக்கள் முன் தோன்ற முடி­யாது தலை­ம­றை­வாக, கடலிலும் முப்­படை முகாம்­க­ளுக்குள் காலத்தை கழித்த ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின், தலை­ம­றைவு வாழ்வு நிறை­வுக்கு வந்­துள்­ளது.

9 ஆம் திகதி போராட்டம் :
கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ – பிர­தமர் ரணில் (தற்­போ­தைய பதில் ஜனா­தி­பதி) ஆகி­யோரை பதவி விலக வலி­யு­றுத்தி பல இலட்சம் மக்கள் கோட்டை ஜனா­தி­பதி மாளிகை, ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் கொள்­ளு­பிட்டி அலரி மாளி­கையை சுற்றி வளைத்து போராட்டத்தை ஆரம்­பித்­தனர்.

மாளி­கை­யி­லி­ருந்த ஜனா­தி­பதி :
போராட்டம் அன்­றைய தினம் காலை ஆரம்­பிக்­கப்­படும் போதும் ஜனா­தி­ப­தி­பதி கோட்­டா­பய ஜனா­தி­பதி மாளி­கையில் இருந்­துள்ளார். அன்­றைய தினம் முற்­பகல் 10.30 மணிக்கும் நண்­பகல் 12.00 மணிக்கும் இடை­யி­லேயே அவர் ஜனா­தி­பதி மாளி­கையை கைவிட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்றார்.

பர­வ­வி­டப்­பட்ட வதந்­தியும் பாது­காப்பு உக்­தியும் :
ஆனால், ஜூலை 9 ஆம் திக­திக்கு முன்னர், அதா­வது 8 ஆம் திக­தியே ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­ப­தியின் பாது­காப்­புக்கு பொறுப்­பாக இருந்த மேஜர் ஜெனரல் ஒருவர் பத்­த­ர­முல்லை – அங்­கு­ரே­கொட முப்­படை தலை­மை­ய­கத்­துக்கு சென்று, ஜனா­தி­பதி கோட்­டா­ப­யவை பாது­காப்­புக்­காக அங்கு அழைத்து வந்­துள்­ள­தாக தகவல் ஒன்­றினை பரவச் செய்து அனை­வரின் கவ­னத்­தையும் திசை திருப்ப செய்­துள்ளார்.

அவ்­வாறு இருக்­கை­யி­லேயே, ஜனா­தி­பதி மாளி­கைக்கு செல்லும் செத்தம் வீதி, வங்கு மாவத்தை உள்­ளிட்ட அனைத்து வீதி­களும் நிரந்­தர வீதித் தடை­களைக் கொண்டு மூடப்­பட்டு, இரா­ணுவம் பொலிஸ், பொலிஸ் அதி­ரடிப் படை­யி­னரின் பாது­காப்பு போடப்­பட்­டது.

இரா­ணு­வத்தை நம்­பிய பொலிஸ் மா அதிபர், பாது­காப்பு செயலர் :
பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுக்கு அனுப்­பிய கடிதம் மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­னகோன், பாது­காப்பு செயலர் ஜெனரல் கமல் குண­ரத்ன ஆகி­யோரின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய, அமைதிப் போராட்­டத்தை கலைக்க இரா­ணுவம் 9 ஆம் திகதி அழைக்­கப்­பட்­டுள்­ளது.

ஊர­டங்­குக்கு பொலிஸ் மா அதி­ப­ருக்கு அழுத்தம் :
இவ்­வா­றான நிலையில், ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி மாளி­கையில் 9 ஆம் திக­தி­யாகும் போதும் தங்­கி­யி­ருந்­த­மை­யினால், 8 ஆம் திகதி இரவு முதல் கொழும்பின் பல பகு­தி­க­ளுக்கு ஊர­டங்கு பிறப்­பிக்க பொலிஸ் மா அதி­ப­ருக்கு உயர் மட்ட அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் பலர் அதனை செய்ய வேண்டாம் என பொலிஸ் மா அதி­ப­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­துடன் மேல் மட்ட அழுத்­தத்தால் அந்த ஊர­டங்கு அமுல் செய்­யப்­பட்­டது.

காலையில் பொலிஸ் மா அதி­பரைச் சந்­தித்த ஜனா­தி­பதி :
இந் நிலையில், போராட்ட தின­மான ஜூலை 9 ஆம் திகதி காலை 6.30 மணி­யாகும் போதும் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி மாளி­கையில் இருந்­துள்ளார். அதற்­கான ஆதாரம் அப்­போது பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவை அவர் அங்கு வைத்து சந்­தித்­துள்­ள­மை­யாகும்.

ஜாலி­ய­வுடன் சென்ற பொலிஸ் மா அதிபர் :
பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, ஜூலை 9 ஆம் திகதி ஜனா­தி­பதி மாளி­கைக்கு ஜனா­தி­ப­தியை சந்­திக்க செல்லும் போது, அவ­ருக்கு மிக விசு­வா­ச­மான பொலிஸ் திணைக்­க­ளத்தின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஜாலிய சேனா­ரத்­னவும் உடன் சென்­றுள்ளார்.

இதன்­போது நடந்த கலந்­து­ரை­யா­டலில், ஆர்ப்­பாட்டக்காரர்­களை பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ருவர் எனவும் கண்ணீர் புகை மற்றும் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யேனும் அதனை அவர்கள் செய்வர் எனவும் ஜனா­தி­பதி நம்­பிக்­கை­யுடன் இருந்­துள்ளார்.

தரைப் படையை நம்­பாமல் கடற்­ப­டை­யிடம் தஞ்சம் புகுந்த கோட்டா:
இந் நிலையில் ஜனா­தி­பதி மாளி­கையின் பாது­காப்பு ஜூலை 9 ஆம் திக­தி­யாகும் போதும் இலங்கை தரைப் படையின் மேஜர் ஜெனரல் ஒரு­வரின் கீழ் இருந்­தது. அன்­றைய தினம் முற்­பகல் வேளையில், மாளி­கையை போராட்டக் காரர்கள் இலட்சக் கணக்கில் முற்­று­கை­யிட ஜனா­தி­பதி தரைப் படையின் மீதுள்ள நம்­பிக்­கையை இழந்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது,
அதன்படி உட­ன­டி­யாக கடற்­படை தள­ப­தியை ஜனா­தி­பதி மாளி­கைக்கு அழைத்­துள்ளார்.

கடற்­படை தள­ப­தி­யுடன் ஒரே காரில் தப்­பி­யோட்டம் :
இந் நிலையில் ஜூலை 9 ஆம் திகதி முற்­பகல் 10. 30 மணிக்கும் நண்­பகல் 12.00 மணிக்கும் இடையே ஜனா­தி­பதி மாளி­கையின் முன்­பாக உள்ள மணிக்­கூட்டு கோபு­ரத்தை அண்­மித்த பிர­தான வாயில் திசை­யி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக கண்ணீர்ப் புகைப் பிர­யோகம் பாது­காப்பு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதன் போதே ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து ஜனா­தி­பதி கோட்டா, கடற்­படை தள­ப­தியின் காரில் அங்­கி­ருந்து தப்பி, கடற்­படை தள­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ தங்கு விடு­திக்கு (ஜனா­தி­பதி மாளி­கையை ஒட்­டி­ய­தாக கடற்­படை தலை­மை­ய­கத்தில் உள்­ளது) சென்­றுள்ளார். அங்கு இரு­வரும் தேநீர் அருந்­தி­யுள்­ளனர்.

கப்­பலில் கொழும்பை விட்டு ஓட்டம் :
இந் நிலையில் கடற்­படை தள­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ அறை­யி­லி­ருந்து, கடற்­படை தலை­மை­ய­க­மான – கோட்டை ரங்­கள முகா­மி­லி­ருந்து சிது­ரல, கஜ­பாகு ஆகிய கப்­பல்கள் திரு­கோ­ண­ம­லையை நோக்கி பய­ணத்தை ஆரம்­பித்த நிலையில், அதில் ஜனா­தி­பதி கோட்­டா­பய திரு­கோ­ண­ம­லையின் கடற்­படை பொறுப்­பி­லுள்ள தீவு நோக்கி சென்­றுள்ளார்.

பல பொருட்­களும் எடுத்து செல்­லப்­பட்­டன :
இதன்­போது ஜனா­தி­பதி கப்­ப­லுக்குள் இருக்க, ஜனா­தி­பதி மாளி­கையின் முக்­கிய அதி­கா­ரிகள் ஜனா­தி­ப­தியின் பல ஆவ­ணங்கள், பொருட்­க­ளுடன் துறை­முகம் ஊடாக குறித்த கப்­பலில் ஏறி­யுள்­ளனர். அந்த வீடி­யோக்­களே சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யாகி இருந்­தன.

திரு­ம­லை­யி­லி­ருந்து கட்­டு­நா­யக்­க­வுக்கு :
இந் நிலையில் திரு­கோணமலைக்கு சென்ற ஜனா­தி­பதி கோட்டா, அங்கு கடற்­படை முகா­முக்குள் இருந்­துள்­ள­துடன் மறு நாள் அதா­வது ஜூலை 10 ஆம் திகதி விமா­னப்­ப­டையின் பெல் ரக ஹெலி­கப்­டரில் அங்­கி­ருந்து கட்­டு­நா­யக்க விமா­னப்­படை தளத்­துக்கு சென்­றுள்ளார்.

9 ஆம் திக­தியே தயார் செய்­யப்­பட்ட தங்கும் இடம் :
சமூக வலைத் தளங்­களில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்குள் கடும் இரா­ணுவ பாது­காப்­புடன் ஒரு வாகன தொட­ரணி செல்லும் வீடியோ வெளி­யாகி இருந்­தது. அது ராஜ­ப­க்ஷக்கள் வெளி­நாடு செல்லும் வீடியோ எனவும் கூறப்­பட்­டது. எனினும் அது அவ்­வா­றான வீடியோ அல்ல. எனினும் ராஜ­ப­க்ஷக்­க­ளுடன் தொடர்­பு­பட்ட வீடி­யோவே அது.
இந்­தியா சென்­றி­ருந்த பாது­காப்பு படை­களின் தலைமை அதி­கா­ரி­யான ஜெனரல் சவேந்ர சில்வா, ஜூலை 9 ஆம் திக­தியே நாடு திரும்­பினார். இந் நிலையில் அவ­ரது வாகனத் தொட­ர­ணி­யுடன் இணைந்­த­தாக முப்­படை தள­ப­திகள், கட்­டு­நா­யக்க விமா­னப்­படை தலை­மை­ய­கத்தில் ஜனா­தி­பதி கோட்­டாவின் பாது­காப்­புக்­காக சென்ற வாகன தொட­ர­ணியே அது என தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அங்கு ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் சில உடை­மை­களும் எடுத்து செல்­லப்­பட்­ட­தாக அறிய முடி­கி­றது.
இவ்­வா­றான நிலை­யி­லேயே ஜூலை 10 ஆம் திகதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ கட்­டு­நா­யக்க விமா­னப்­படை முகா­முக்கு வந்து அங்கு தங்­கி­யி­ருந்­துள்ளார்.

டுபாய் செல்லும் முயற்சி தோல்வி ;
இந் நிலை­யி­லேயே ஜூலை 10 ஆம் திகதி கோட்டா டுபாய் நோக்கி பய­ணிக்க இரு முறை எத்­த­னித்­துள்ளார். அப்­போது கட­மை­யி­லி­ருந்த குடி­வ­ரவு அதி­கா­ரிகள், அவரை பொது மக்­க­ளோடு வரி­சையில் வந்து முறைப்­படி விமா­னத்தில் செல்ல முடியும் என அறி­வித்த நிலையில், பொது மக்கள் முன் தோன்ற அவ­ருக்கு இருந்த அச்­சத்­தினால் அவரால் அப்­போது வெளி­நாடு செல்ல முடி­யாமல் போயுள்­ளது.

அமெரிக்க விசா கோரிக்கை நிரா­க­ரிப்பு:
இவ்­வா­றான நிலை­யி­லேயே, அமெ­ரிக்கா செல்­வ­தற்­காக ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ முன் வைத்த வீசா விண்­ணப்­பத்தை அமெ­ரிக்கா நிரா­க­ரித்­தது.
எனினும் இது குறித்து அமெ­ரிக்க தூத­ரகம் வெளி­யிட்ட தகவல் படி, வீசா குறித்த விட­யங்கள் அந் நாட்டு சட்­டப்­படி இர­க­சிய ஆவ­ணங்கள் என்­பதால் அது குறித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கருத்­து­வெ­ளி­யிட முடி­யாது என அறி­வித்­தது.

மத்­தளை ஊடாக தப்பிச் செல்ல முயற்சி :
இந் நிலையில் கட்­டு­நா­யக்க விமா­னப்­படை தளத்­தி­லி­ருந்து வீர­வில விமா­னப்­படை தளத்­துக்கு சென்று அங்­கி­ருந்து மத்­தளை விமான நிலையம் ஊடாக அங்­கி­ருந்து தனியார் ஜெட் விமா­னத்தில் செல்ல திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. எனினும் அந் நட­வ­டிக்­கையும் நேற்று முன் தினம் (12) சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

அதன்­படி கட்­டு­நா­யக்க விமானப் படை தளம் முதல் இரத்­ம­லானை விமா­னப்­படை தளம் வரை சென்­றுள்ள கோட்டா பின்னர் கட்­டு­நா­யக்­க­வுக்கே திரும்­பி­யுள்ளார்.

மாலைதீவுக்கு தப்­பிய கதை :
இவ்­வா­றான நிலை­யி­லேயே, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை ஒட்­டி­ய­தாக அமைந்­துள்ள விமா­னப்­படை தளத்தில் தனது மனைவி அயோமா ராஜ­பக்ஷ மற்றும் இரு பிர­தான பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுடன் தங்­கி­யி­ருந்த கோட்­டா­பய ராஜ­பக்ஷ மாலை தீவு நோக்கி இர­க­சி­ய­மாக நேற்று (13) அதி­காலை புறப்­பட்டுச் சென்­றுள்ளார்.

கோட்­டா­வுக்கு உதவிய ரணில் :
ஜூலை 12 ஆம் திகதி வரை கோட்டா நாட்­டி­லி­ருந்து வெளி­யேற எடுத்த முயற்­சிகள் தோல்­வி­ய­டைந்த நிலையில், நேற்று முன் தினம் (12) இரவு விஷேட தகவல் ஒன்­றினை அர­சாங்­கத்­துக்கும் பிர­த­ம­ருக்கும் அனுப்­பி­யுள்ள கோட்­டா­பய ராஜ­பக்ஷ, தான் நாட்­டி­லி­ருந்து பாது­காப்­பாக வெளி­யேறும் வரை பத­வியில் இருந்து விலகப் போவ­தில்லை என கூறி­யுள்ளார். இத­னை­ய­டுத்தே மாலை­தீ­வுக்கு தப்பிச் செல்­வ­தற்­கான வச­தி­களை பிர­தமர் (பதில் ஜனா­தி­பதி தற்­போது) ரணில் தலை­மை­யி­லான அர­சாங்கம் செய்து கொடுத்­துள்­ளது.

அதன்­ப­டியே பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தியின் பின்னர், விமா­னப்­படை தள­பதி (கோட்­டா­வுக்கு மிக நெருக்­க­மா­னவர்) எயார் மார்ஷல் சுதர்­ஷன பத்­தி­ரவின் கட்­ட­ளைக்கு அமைய, குறூப் கெப்டன் வெல­கெ­தர, விங் கொமாண்டர் மல்­லவ ஆரச்சி ஆகிய விமா­னிகள் என்­டனோ 32 ரக விமா­னத்தை செலுத்த கோட்டா மாலைதீவு நோக்கி தப்பிச் சென்றார்.

ஆவ­ணங்கள் அருகே சென்று சரிபார்ப்பு :
கட்­டு­நா­யக்க விமான நிலைய தக­வல்கள் பிர­காரம், என்­டனோ 32 விமானம் மாலை தீவு நோக்கி செல்ல முன்னர், விமானம் அருகே சென்­றுள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரிகள், சுங்க அதி­கா­ரிகள், ஆவ­ணங்­களை சரி­பார்த்து உறுதிப் படுத்­தி­யுள்­ளனர்.

விமா­னப்­ப­டையின் விளக்கம் :
ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்‌ஸ நாட்­டி­லி­ருந்து வெளியே­றி­யமை தொடர்பில் இலங்கை விமா­னப்­படை அறிக்­கை­யொன்றை வெளியிட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி, அவ­ரது பாரியார் மற்றும் இரு மெய்ப்­பா­து­கா­வ­லர்­க­ளுடன் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து மாலை­தீவு நோக்கி பய­ணிப்­ப­தற்­காக தற்­போ­தைய அர­சாங்­கத்தின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க விமா­னப்­படை விமா­ன­மொன்று நேற்று (13) அதி­காலை வழங்­கப்­பட்­ட­தாக குறித்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளுக்கு இணங்க தற்­போ­தைய அர­சாங்­கத்தின் வேண்­டு­கோளின் அடிப்­ப­டையில், பாது­காப்பு அமைச்சின் பூரண அங்­கீ­கா­ரத்தின் கீழ் கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லுள்ள குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு, சுங்க மற்றும் ஏனைய அனைத்து சட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு ஜனா­தி­பதி, அவ­ரது பாரியார் மற்றும் இரு மெய்ப் ­பா­து­கா­வ­லர்­க­ளுடன் மாலை­தீ­விற்கு புறப்­ப­டு­வ­தற்­காக விமா­ன­மொன்று வழங்­கப்­பட்­ட­தாக குறித்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தியா உத­வி­யதா?
இதே­வேளை, ஜனா­தி­ப­தியின் இந்த பய­ணத்­திற்கு இந்­தி­யா­வினால் சலு­கைகள் வழங்­கப்­ப­டு­வ­தாக வெளியான தக­வல்­களை நிரா­க­ரிப்­ப­தாக இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் ட்விட்டர் தளத்தில் பதி­விட்­டுள்­ளது.

நாட்டு மக்­களின் அபி­லா­ஷைகளை நிறை­வேற்­று­வ­தற்­காக இந்­தியா தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்கும் என குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மாலை தீவில் வந்த குழப்­பமும்
நஷீடின் தலை­யீடும் :
எவ்­வா­றா­யினும் இலங்கை விமா­னப்­படை விமா­னத்தில் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ இருக்­கின்றார் என அறிந்த மாலைதீவு அதி­கா­ரிகள் விமா­னத்தை தரை இறக்க அனு­ம­தி­ய­ளிக்­கா­தி­ருந்­துள்­ளனர். இதனால் கோட்­டாவும் அவ­ரது மனைவி மற்றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களும் சுமார் ஒன்­றரை மணி நேரம் விமானத்தில் காத்திருந்துள்ளனர். எவ்வாறாயினும் மாலை தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட் விடயத்தில் தலையீடு செய்து தரை இறக்குவதற்கான வேலைகளைச் செய்துள்ளார்.

மாலைதீவில் எதிர்ப்பு :
இந் நிலையில் மாலைதீவில் அதிகாலை 3.30 மனியளவில் தரையிறங்கிய கோட்டா உள்ளிட்டோருக்கு விமான நிலையத்திலிருந்தே எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. மிக மோசமான வார்த்தைகளைக் கொண்டு அங்கிருந்த இலங்கையர்கள் கோட்டாவை திட்டித் தீர்த்தனர்.

கோட்டா தங்கியுள்ள இடம் :
ஏற்கனவே கடந்த மாதம் மாலை தீவு ஊடகங்கள், ராஜபக்ஷக்கள் மாலைத் தீவின் தீவுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் ஹோட்டலுடன் கூடிய வில்லாக்கள் அதில் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டன. அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டதாக நம்பப்படும் தீவு ஒன்றிலேயே கோட்டாபய குழுவினர் தங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

டுபாய் நோக்கி பயணிக்க திட்டம் :
எவ்வாறாயினும் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலை தீவின் ‘சொனேவா புசி’ எனும் தீவில் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் சில தினங்களில் டுபாய் செல்ல திட்டமிட்டுள்ளார். டுபாயில் அவர் தங்கும் பாதுகாப்பான இடத்தை, ஏற்கனவே அரச உளவுச் சேவை பிரதானி மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே ஏற்பாடு செய்துவிட்டு கடந்தவாரம் திரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.