ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்றைய தினம் சபாநாயகர் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் 37(1) அத்தியாயத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றும் வண்ணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதை தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசியல் வரலாற்றில் 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஷ கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு அப்போதைய பிரதமர் டி.பி.விஜேதுங்க ஒரு சில மணித்தியாலங்களில் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆதனை தொடர்ந்து 1993.05.07ஆம் திகதி அரசியலமைப்பின் 40ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் டி.பி.விஜேதுங்க இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli