(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக வாக்குறுதியளித்தே கோத்தாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்தார். ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அவர் பதவிக்கு வந்து மக்களை அநாதைகளாக்கிவிட்டார். பெளத்த மதத்தலைவர்களுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நாட்டுக்காக முன்நின்றார்கள். ஏனைய மதத் தலைவர்களும் அவர்களுடன் இணைந்து நாமனைவரும் இலங்கையர் என்ற உணர்வினை வெளிப்படுத்தினோம். இப்போது நாம் புதிய சுதந்திரமொன்றை பெற்றுக்கொண்டுள்ளோம் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார்.
செங்கடகல பிரகடனம் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு கூறினார். நிகழ்வில் அனைத்து மதத்தலைவர்கள் உட்பட பெரும்திரளானோர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில் தற்போதைய பிரதமர் ஓர் பொம்மை பிரதமராகும். நாம் இப்போது அரசியல் அமைப்பின் படி எவ்வாறு செயற்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எமது செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அரகலய (போராட்டம்) காரர்களை நாம் மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். வன்முறைகளில் ஈடுபடவேண்டாம். ஜனாதிபதி மாளிகையில் உள்ள சொத்துக்கள் ஜனாதிபதியினதுடையதல்ல. அது மக்களின் சொத்துக்கள். இது நாட்டின் சொத்து. நாமனைவரும் ஒன்றிணைந்து எமது நாட்டை செளபாக்கியம் நிறைந்த நாடாக கட்டியெழுப்புவோம். நாங்கள் ஒன்றாக கரம் கோர்ப்போம் என்றார்.