ஏ.ஆர்.ஏ.பரீல்
முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும், அரச சேவையிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு ‘இத்தா’ கால விடுமுறை ரத்துச் செய்யப்பட வேண்டும், முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் கலாசார ஆடைக்குத் தடை விதிக்க வேண்டும்…
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரும் “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரரின் சிபாரிசுகளே இவை.
“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக தான் நியமிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி ஞானசார தேரர் தனது இலக்கினை நிறைவேற்ற முயற்சித்துள்ளார் என்பதையே இந்தப் பரிந்துரைகள் காண்பிக்கின்றன.
கடந்த மாதம் 29 ஆம் திகதி ஞானசார தேரர் “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார். 43 பரிந்துரைகளை உள்ளடக்கிய குறிப்பிட்ட அறிக்கை 8 அத்தியாயங்களையும், இரண்டு பாகங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. இவ்வறிக்கை தொழில் வல்லுனர்கள், அரசு சாரா அமைப்புகள், மதக் குழுக்கள் பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் சட்டவல்லுனர்களிடமிருந்து நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்கு மூலங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1200 க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 23 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி நிறுவப்பட்டது. இச்செயலணி தொடர்பான விளக்கங்கள் 2251/30 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதன் பணிகள் 2022.02.28 ஆம் திகதி பூரணப்படுத்த வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்பு அதன் காலம் வர்த்தமானி மூலம் 2022.02.28ஆம் திகதியிலிருந்து 3 மாதகாலம் நீடிக்கப்பட்டது. இதனையடுத்து மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டது.
“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியில் தலைவர் உட்பட 13 பேர் அங்கம் வகித்தனர். இவர்களில் நால்வர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். என்றாலும் செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களில் முஸ்லிம் அங்கத்தவர்களான விரிவுரையாளர் மொஹமட் இன்திகாப், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், அஸீஸ் நிசார்தீன் ஆகிய மூவரும் பதவி விலகிக் கொண்டனர். காலி உலமா சபையின் தலைவரான மெளலவி மொஹமட் மாத்திரமே இறுதிவரை பதவியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனியார் சட்டத்தில் திருத்தங்கள்
தொடர்ந்து தசாப்தகாலமாக முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் நிலவி வந்த திருத்தங்கள் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் பரிந்துரைகளின் பின்பே வழங்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையை இங்கு கட்டாயம் நினைவுபடுத்தியே ஆக வேண்டும்.
2022.02.21 ஆம் திகதி அப்போதைய நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர்கள் சிலரின் பலத்த எதிர்ப்பினால் நிராகரிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அமைச்சரவைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமை வகித்திருந்தார்.
அன்று அப்போதைய நீதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சரவைப் பத்திரத்தில் இலங்கையில் முஸ்லிம்களின் பலதார மணம் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படவேண்டும். பலதார மணம் மலேசியா போன்ற நாடுகளில் அமுலில் இருக்கின்றது. காதிநீதிமன்ற முறைமையை இல்லாதொழிக்காது குடும்ப சமரசம் (Family Conciliate) என்ற பெயரில் இயங்கச் செய்ய வேண்டும். குடும்ப சமரசத்துக்கு ஆலோசனை சபை நியமிக்கப்படவேண்டும். இங்கு தீர்க்கப்படாத பிரச்சினைகள் மாவட்ட நீதிமன்றுக்கு அனுப்பப்படவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் குறிப்பிட்ட அமைச்சரவைப் பத்திரத்தை அப்போதைய அமைச்சர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். சரத் வீரசேகர இலங்கையில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு சட்டம் இருக்க முடியாது என வாதிட்டார்.
இந்தக் கடுமையான விவாதங்களுக்கு மத்தியில் அன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் பரிந்துரைகள் கிடைக்கும்வரை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் செய்வதில்லை எனத் தெரிவித்தார்.
தற்போது செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியின் கைகளுக்குக் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதி என்ன செய்யப்போகிறார்-? நாடு பொருளாதார அரசியல் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் ஜனாதிபதியின் தீர்மானம் எவ்வாறு அமையப்போகிறது? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அரசாங்கம் எரிபொருள் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் அமைச்சர்கள் மத்திய கிழக்கு நாடுகளிடம் எரிபொருளுக்கு கையேந்தியுள்ள நிலையில் செயலணியின் முஸ்லிம்களைப் பழிவாங்கும் வகையிலான பரிந்துரைகள் அவசரமாக அமுல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.
இத்தா விடுமுறை
1951 ஆம் ஆண்டு நாட்டில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் அமுலுக்கு வந்த காலத்திலிருந்து அரச துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் இத்தா கால விடுமுறையை அனுபவித்து வருகின்றனர்.
தனது கணவர் உயிரிழக்கும் பட்சத்தில் அரச சேவையில் இருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு 4 மாதங்கள் 10 நாட்களுக்கு வழங்கப்படும் இத்தா விடுமுறை தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு மதவேறுபாடுகள், கணவர் அல்லது மனைவி என்ற வேறுபாடுகள் இன்றி ஒருமாத கால விடுமுறை வழங்கப்படவேண்டும் என “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி பரிந்துரை முன்வைத்துள்ளது. வருடமொன்றில் வழங்கப்படும் விடுமுறைகளில் இந்த விடுமுறை உள்வாங்கப்படவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணவர் மரணித்த பின்பு விதவையாகும் மனைவி தனது வீட்டில் தனிமையில் இத்தா இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. இந்த விடுமுறை நீக்கப்பட்டால் முஸ்லிம் பெண்கள் அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும். அத்தோடு சம்பளமற்ற விடுமுறை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
முகத்தை மூடி ஆடை அணிய தடை
பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் செயலணி பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரை முஸ்லிம் பெண்களை இலக்காகக் கொண்ட தடையாகும். இவ்வாறான பரிந்துரைகள் முஸ்லிம் சமூகத்தை பல்வேறு சிரமங்களுக்கு உட்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
காதிநீதிமன்றக் கட்டமைப்பு நீக்கப்பட்டால் முஸ்லிம் சமூகம் பொது சட்டத்தின் கீழேயே ஆளப்படும். முஸ்லிம்கள் இதுவரை காலம் அனுபவித்து வந்த உரிமைகளை இழந்து விடுவார்கள். குடும்ப பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் மாவட்ட நீதிமன்றங்களையே நாடவேண்டியேற்படும்.
ஏனைய முக்கிய பரிந்துரைகள்
• அரசியல் கட்சிகள், அரசியல் வாதிகளின் தேர்தலுக்குப் பயன்படுத்தும் நிதி எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து, கணக்காய்வு செய்வதற்குப் புதிய சட்டமொன்று எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட வேண்டும்.
• நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும்வரை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பொறுப்புகளை வழங்காத வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்படவேண்டும். குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக மக்களே தெரிவு செய்யும் பட்சத்தில் அவர்களை உறுப்பினர் பதவியில் மாத்திரம் இருக்க அனுமதி வழங்க முடியும்.
• அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்பான கணக்காய்வுகளை நடத்துவதற்கு கணக்காய்வு ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்படவேண்டும்.
• மதங்களின் சுதந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மதமாற்று நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
• மொழி, இனம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு கால அவகாசம் வழங்கியும் கட்சிகளின் பெயர்களை மாற்றாத பட்சத்தில் கட்சியை தடை செய்ய வேண்டும்.
• விற்பனை நிலையங்களில் ஹலால் பொருட்களுக்கு வேறு பிரிவொன்று அமைக்கப்பட வேண்டும்.
• நீதிமன்ற அவமதிப்பு குறித்த தண்டனைக்கான காலம் உள்ளிட்ட விடயங்களை நிர்ணயம் செய்யும் வகையிலான புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும்.
• கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (இலங்கையில் சில குழந்தைகள் மதம் சார்ந்த கல்வியை மாத்திரம் கற்பதைத் தவிர்த்து 16 வயது வரை கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய பாடசாலை கட்டாய கல்வி அவசியம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கட்டாய கல்விக்கு மேலதிகமாக வேறு கல்விகளை கற்க முடியும்.)
• தேச வழமை சட்டம், முஸ்லிம் சட்டம், கண்டியர் சட்டம் ஆகியன முழுமையாக நீக்கப்பட்டு பொதுச்சட்டத்தின் கீழ் அச்சட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
• சாதியை வெளிப்படுத்தி ஊடகங்களில் விளம்பரம் பிரசுரிப்பது தடை செய்யப்பட வேண்டும்.
• கைதிகளுக்கான சுகாதாரம், இடவசதி, உணவு போன்ற விடயங்களை உறுதி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் கைதிகள் தொடர்பிலான சட்டத்தைப் பின்பற்றி சிறைச்சாலைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
• விஷேட தேவையுடையவர்களின் உரிமைகளுக்கான ஐ.நா. சபையின் சட்டத்திற்கு அமைவானதாக விஷேட தேவையுடையவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்பட வேண்டும். விஷேட தேவையுடையவர்களுக்கான தற்போது காணப்படுகின்ற பிரத்தியேக பாடசாலைகளை தவிர்த்து அவர்களை ஏனைய மாணவர்களுடன் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
• இந்நாட்டில் வதியும் சம்பிரதாய முஸ்லிம் பிரிவொன்று இஸ்லாத்திலிருந்தும் விலகிச் சென்றதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவிப்புச் செய்துள்ளது. 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி உலமா சபையினால் விடுக்கப்பட்டுள்ள இந்த சமய பத்வாவை அகற்றுமாறு உலமா சபைக்கு தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் மூலம் அறிவிக்க வேண்டும்.
• எந்தவோர் இஸ்லாமிய அறிஞர் அல்லது சமய அமைப்பு மூலம் பத்வா என்று கூறப்படும் சமய தீர்ப்பு அடிப்படைவாதத்துக்கு சார்பாக மற்றும் ஒற்றுமைக்கு குந்தகமாக வழங்கப்படுவதைத் தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
• ஹலால் சான்றிதழ் தொடர்பில் 2020 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பிலான மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
• சுயவிருப்பத்தின் கீழ் மதம் மாறிக் கொள்வதற்கு பிரஜைகளுக்குள்ள உரிமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் மதம் மாற்றப்படுவதை தடுக்கும் வகையிலான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
• சுகாதார தேவைகள் போன்ற நிலைமைகள் தவிர பொது இடங்களில் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை முழுமையாக மறைத்து ஆடை அணிவது சட்டரீதியாக தடை செய்யப்பட வேண்டும்.
• முஸ்லிம் விவாக ஏற்பாடுகளில் நிக்காஹ்வை நடாத்தி வைப்பதற்கான தேவையான அதிகாரங்கள் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
எனும் பரிந்துரைகள் உட்பட 43 பரிந்துரைகள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை, சமபாலின சமூகம், பெளத்த விகாரைகளுக்கு நம்பிக்கைப் பொறுப்பாளர் நியமனம், பாடசாலைக் கல்வி முறை, தொல்பொருள் பிரதேசங்களின் பாதுகாப்பு, யுத்தத்தின் பின்பு சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ், சிங்கள மற்றும் ஏனைய கைதிகளின் விடுதலை, தேர்தல் முறையில் திருத்தங்கள், அரசியல் கட்சிகளின் பதிவு போன்ற பல்வேறு மட்டங்களிலும் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்தே பல பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. தற்போதைய அமைச்சரவையில் நசீர் அஹமட் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு கைதூக்கியவர். 20ஆவது திருத்தம் முஸ்லிம் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவு காரணமாகவே நிறைவேறியது என்பதை முழு நாடும் அறியும்.
ஜனாதிபதியின் அதீத நிறைவேற்று அதிகாரத்தை ஆதரித்து ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர் நசீர் அஹமட் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும், காதிநீதிமன்றக் கட்டமைப்பினை இல்லாதொழிக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகளுக்கு எதிராக அமைச்சரவையில் குரல் கொடுப்பாரா?
நாடு இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சவால்களுக்கு மத்தியில் ஒரே நாடு ஒரே சட்டம் அமுலாக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.-Vidivelli