ஆதம் முஹம்மத் எனும் 52 வயதான பிரித்தானிய பிரஜை சுமார் ஒரு வருட கால நடைப் பயணத்தின் மூலம் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளார்.
2021 ஆகஸ்ட் 1 ஆம் திகதி பிரித்தானியாவின் வொல்வர்ஹாம்ப்டனிலுள்ள தனது இல்லத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஆதம், நெதர்லாந்து, ஜேர்மனி, செக் குடியரசு, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, துருக்கி, லெபனான், சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் ஊடாக கால்நடையாகப் பயணித்து 2022 ஜுன் 26 ஆம் திகதி மக்காவிலுள்ள ஆயிஷா பள்ளிவாசலை வந்தடைந்தார். இதற்கமைய இவர் 11 மாதங்களும் 26 நாட்களும் தினமும் சராசரியாக 17.8 கி.மீ. தூரம் நடந்துள்ளார்.
இந்தப் பயணத்திற்கான சிந்தனை தன்னுள் உதித்தது எப்படி என அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், கொரோனா முடக்க காலத்தில் நான் அதிகமதிகம் குர்ஆன் ஓதுவேன். ஒரு நாள் நான் தூக்கத்திலிருந்து விழித்த போது, மக்காவுக்கு கால்நடையாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் திடீரென உதித்தது. அந்த எண்ணத்தை என்னால் நிராகரிக்க முடியவில்லை. அன்றிலிருந்து அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டேன். பிரித்தானிய நிறுவனம் ஒன்றினதும் நலன்விரும்பி ஒருவரதும் ஆதரவுடன் சுமார் 2 மாதங்களாக இதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டேன். எனக்குத் தேவையான உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லவும் தேவையான இடங்களில் நின்று ஓய்வெடுக்கவும் வசதியாக ஒரு தள்ளு வண்டியை நானே தயாரித்தேன். அதில் சுமார் 250 கிலோ எடையுள்ள பொருட்களை வைக்க முடியும். நான் அதற்குள்ளே சமைத்து சாப்பிடுவேன், தூங்குவேன். தொடர்ச்சியான பயணம், காலநிலை மாற்றங்கள் என்பவற்றை விட வேறு தடங்கல்கள் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. சில நாடுகளில் பொலிசார் என்னை நிறுத்தி விசாரணைக்குட்படுத்தினார்கள். எனினும் எனது பயணம் தொடர்பில் அவர்கள் அறிந்து கொண்டதும் ஆச்சரியப்பட்டார்கள். என்னைத் தொடர்ந்து பயணிக்க அனுமதித்தார்கள். இந்தப் பயணம் நெடுகிலும் மக்கள் எனக்கு பல உதவிகளை வழங்கினார்கள். எனது தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு வருவது முதல் உணவு, தங்குமிடம் தருவது வரை பல உதவிகள் எனக்கு கிடைத்தன” என்றார்.
ஈராக்கிய, குர்திஷ் பிரஜையான ஆதம் முஹம்மத், தனது குடும்பத்துடன் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.- Vidivelli