(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருட ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை மேற்கொண்ட ஹஜ் முகவர் ஒருவர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஹஜ் பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளதாக மருதானை பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
உதவிப் பணிப்பாளர் ஒருவர் உட்பட நான்கு திணைக்கள அதிகாரிகளால் திணைக்களத்தின் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைவாக இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருதானை பொலிஸார் முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர் தற்போது தனது ஹஜ் யாத்திரிகர்களுடன் சவூதி அரேபியாவில் ஹஜ் கடமையில் ஈடுபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பேஸா விசா மற்றும் டொலர் கணக்கு ஆவணம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே ரகளையாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும், சம்பந்தப்பட்ட முகவர் ஹஜ் கடமையின் பின்பு நாடு திரும்பியதும் திணைக்களத்தினால் ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படவுள்ளதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், உரிய விசாரணையின் போது முறைப்பாடு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவரின் ஹஜ் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் கருத்து தெரிவிக்கையில்; வரலாற்றில் முதல் தடவையாக இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஹஜ் முகவர் ஹஜ் பிரிவின் அதிகாரிகள் மீது மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட முகவர் மீது திணைக்களம் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.- Vidivelli