எந்தவித காரணங்களையும் தெரிவிக்காது வக்பு சபையின் பணிகளை இடைநிறுத்தம் செய்யும் வகையில் புத்தசாசன அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர், முஸ்லிம் விவகாரங்களில் தொடரும் தேவையற்ற தலையீடுகளின் மற்றொரு அங்கமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது பதவியிலுள்ள வக்பு சபையின் பணிகளை இடைநிறுத்துவதாகக் குறிப்பிட்டு புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வக்பு சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. எனினும் அவ்வாறு இடைநிறுத்துவதற்கான எந்தவித காரணத்தையும் அமைச்சு மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்தவில்லை. இதனை முஸ்லிம் விவகாரங்களில் இடம்பெறும் அநாவசிய தலையீடாகவே கருத வேண்டியுள்ளது. வக்பு சபையை இவ்வாறு இடைநிறுத்துவதன் மூலம், முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஊடாக நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் புத்தசாசன அமைச்சுக்குச் செல்கிறது. வேறொரு சமயத்துக்குப் பொறுப்பான அமைச்சு, இன்னுமொரு சமயத்தின் வணக்கஸ்தலங்களை நிர்வகிப்பது தொடர்பில் அதிகாரத்தைக் கொண்டிருப்பதானது யதார்த்தத்திற்குப் புறம்பானதாகும்.
அண்மைக்காலமாக முஸ்லிம்களின் சமய, சமூக விவகாரங்களில் அநாவசிய தலையீடுகள் இடம்பெறுவதைக் காண்கிறோம். பலதார மணம் குறித்த நீதியமைச்சரின் அண்மைய கருத்து, முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள், அல் குர்ஆன் பிரதிகளை இறக்குமதி செய்வதிலுள்ள தடைகள் என பல விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான நெருக்குவாரங்கள் அதிகரிப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது. இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சிவில் தலைமைகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.- Vidivelli