நாட்டு சட்டத்தை கவனத்திற்கொண்டு உழ்ஹிய்யாவை நிறைவேற்றுங்கள்
பிற சமூகத்தை தூண்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் உலமா சபை கோரிக்கை
(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் சட்டத்தை கவனத்திற் கொண்டு உரிய முறையில் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்தோடு, நாட்டின் மரபை பேணி போயா தினத்தில் உழ்ஹியா நிறைவேற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும், பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது என்றும் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ள இச்சூழ்நிலையில் உழ்ஹிய்யா இறைச்சியை பகிர்ந்தளிக்கும் போது, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் மேலதிக சதகாவாக கொடுப்பதற்கு முடியுமான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உலமா சபை வேண்டியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வெளியிடப்பட்டுள்ள உழ்ஹிய்யா வழிகாட்டலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலமா சபையின் பதில் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம்.ஏ.ஸி.எம். பாழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
- எப்பிரதேசங்களில் மாடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவது சிரமமாக உள்ளதோ, அப்பிரதேசங்களில் ஆடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றிக் கொள்ளவும்.
- நம் நாட்டின் சட்டத்தை கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
- அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும், அனுமதி பெற்றதை விட கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையையும் கொடுப்பது கூடாது. - குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்களை அகற்றும் போது சுகாதார விதிமுறைகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.
பல்லின மக்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது. - நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று உழ்ஹிய்யா நிறைவேற்றுவதை கண்டிப்பாக தவிர்ந்துக் கொள்வதோடு, ஏனைய நாட்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
- உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் அவற்றைப் பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிவாசல் இமாம்கள், கதீப்மார்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லின மக்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ள இச்சூழ்நிலையில் உழ்ஹிய்யா இறைச்சியை பகிர்ந்தளிக்கும் போது அவற்றை சமைத்துண்பதற்குத் தேவையான அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் மேலதிக சதகாவாக கொடுப்பதற்கு முடியுமான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜம்இய்யதுல் உலமாவினால் வலியுறுத்தி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். -Vidivelli