நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. பிரகடனப்படுத்தப்படாத முடக்க நிலை ஒன்றுக்கு நாடு முகங்கொடுத்துள்ளது. எரிபொருள் நெருக்கடி உச்ச கட்டத்தை அடைந்துள்ளதால் அத்தியவசிய தேவைகளுக்குக் கூட வாகனங்களைப் பயன்படுத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது. கர்ப்பிணித் தாய்மார் கூட உரிய நேரத்தில் வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத நிர்க்கதி நிலை தோன்றியுள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பஸ் வண்டிகளில் மக்கள் பாதுகாப்பற்ற வகையில் பயணிப்பதைக் காண முடிகிறது. அடுத்த எரிபொருள் கப்பல் இம்மாத இறுதியிலேயே நாட்டை வந்தடையும் என அமைச்சர் கூறுகிறார். எனினும் அதுவும் நம்பிக்கை தருவதாக இல்லை.
இன்று நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனச் சிந்திக்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த மே மாத இறுதி வரை 2,88,645 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு முழுவதும் 3,82,506 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் மூன்று இலட்சத்தை அண்மித்த கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் தொடர்ந்தும் காத்திருப்பதை நாளாந்தம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் ஐந்து இலட்சத்தை அண்மித்தோர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை பல மடங்குகளாக அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 1,20,000க்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 வீத அதிகரிப்பு என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அது மாத்திரமன்றி, தினமும் கடல் வழியாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்கின்றவர்கள் அல்லது அதற்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிழக்கின் திருகோணமலை கடற்பரப்பிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்க முயன்ற 46 பேரும் வடக்கிலிருந்து இந்தியா நோக்கிப் பயணிக்க முற்பட்ட 7 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
நாட்டின் நிலைமைகளைப் பயன்படுத்தி ஆட்கடத்தல்காரர்கள் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு மக்களை அழைத்துச் செல்கின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பயணித்தவர்களில் முதன் முறையாக ஒருவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
அடைக்கலம் தேடி கணவருடன் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்று தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 70 வயதான பரமேஸ்வரி என்ற வயோதிப பெண் சில தினங்களுக்கு முன் மரணித்துள்ளார். ஆபத்தான கடல் வழிப் பயணத்தை மேற்கொண்ட நிலையில், நினைவிழந்து கரையொதுங்கிய இவரை தமிழ்நாட்டு பொலிசார் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். இந் நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இது கடந்த காலங்களில் சிரியாவிலிருந்து அகதிகளாகத் தப்பிச் சென்று கடலில் வைத்தே உயிரை விட்ட ஆயிரக் கணக்கான மக்களின் நிலைமை கண்முன் கொண்டு வருகிறது.
மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சுபீட்சமான தேசத்தைக் கட்டியெழுப்புவேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த கோத்தாபய ராஜபக்ச, தனது இரண்டரை வருட ஆட்சிக் காலத்தில் உருவாக்கியுள்ள சுபீட்சம் இதுதான். மக்கள் உயிர் வாழ முடியாத ஒரு தேசத்தைத்தான் அவர் பரிசளித்திருக்கிறார். இத்தனைக்கும் காரணமான ஜனாதிபதியை பதவி விலகக் கோரி மக்கள் நடாத்தும் போராட்டங்களை அவர் செவிமடுப்பதாக இல்லை. நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த அவரை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ‘கோட்டா வீட்டுக்குச் செல்’ எனக் கோஷமெழுப்பி விரட்டியடித்தனர்.
இவ்வாறான அவமானங்களைச் சந்தித்துக் கொண்டும் ஜனாதிபதிக் கதிரையில் தொடர்ந்திருக்க முனைவது ஆச்சரியம் தருவதாகவுள்ளது. மறுபுறம் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கவினாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர முடியவில்லை. ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தபாய விலகும்பட்சத்தில் மாத்திரமே இலங்கைக்கு உதவிகளை வழங்குவோம் என்ற நிலைப்பாட்டில் பல சர்வதேச நாடுகள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. ஆக மொத்தத்தில், கோத்தபாய வீட்டுக்குச் செல்வதே தீர்வு என்ற கட்டத்துக்கு நாடு வந்துள்ளது. இந்தத் தருணத்திலேனும் அவர் இராஜினாமாச் செய்து வீடு செல்ல வேண்டும். இன்றேல் எதிர்வரும் நாட்களில் மக்களின் விரக்தி மற்றொரு வன்முறையாக உருப்பெறலாம். அதன்பிற்பாடு நாட்டில் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்வது கூட முடியாத காரியமாகிவிடும். -Vidivelli