நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருவதை நாம் அறிவோம். பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதிகள் இன்மை, தொழிலின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் அன்றாடம் ஒரு வேளை உணவு உண்பதற்குக் கூட கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு உண்பதற்கு வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு கை கொடுக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமூக சமையலறைகள், வீட்டிலிருந்து ஒரு பார்சல், உண்போம் உணவளிப்போம், பசித்தவருக்கு உணவளிப்போம், பட்டினியற்ற நகரத்தை நோக்கி…. எனும் தலைப்புகளில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
சமூக சேவை அமைப்புகள், இளைஞர், யுவதிகள் என பலரும் ஒன்றிணைந்து இவ்வாறான திட்டங்களை கடந்த சில வாரங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
‘குரலற்றவர்களின் குரல் பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டில் நாட்டின் ஆறு இடங்களில் ‘சமூக சமையலறைகள்’ ( Community Kitchens) நிறுவப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராஜகிரிய, கடவத்த, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகள் இந்த சமையலறைகள் இயங்கி வருவதாக அமைப்பின் தலைவர் போதகர் மோசஸ் ஆகாஷ் குறிப்பிடுகிறார். தினமும் சராசரியாக 700 பேருக்கு இவ்வாறு உணவளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அதேபோன்று கொழும்பில் சர்வோதய மற்றும் Singularity Sri Lanka போன்ற அமைப்புகளும் கிராண்ட்பாஸ், பஞ்சிகாவத்தை போன்ற பிரதேசங்களில் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
மறுபுறும் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான உணவளிக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘வீட்டிலிருந்து ஒரு பார்சல்’ எனும் திட்டம் தற்போது அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில் போன்ற பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான பார்சல்கள் இப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகள் பல ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள Iconic Youths அமைப்பின் தலைவர் தில்ஷான் முகம்மட் கருத்து வெளியிடுகையில், “தினமும் சராசரியாக 300 பார்சல்களை இவ்வாறு விநியோகிக்கிறோம். மக்கள் வீடுகளில் தாம் சமைப்பதிலிருந்து ஒரு பார்சலை எம்மிடம் தருகிறார்கள். சிலர் பணமாகவும் வழங்குகிறார்கள். இவற்றைக் கொண்டு நாம் தேவையுடையவர்களை இனங்கண்டு அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று சாப்பாட்டு பார்சல்களைக் கையளிக்கிறோம். துரதிஷ்டவசமாக, எரிபொருள் நெருக்கடி காரணமாக தூரப் பிரதேசங்களுக்குச் சென்று தேவையுடையவர்களுக்கு வழங்கமுடியாதுள்ளது. பள்ளிவாசல் மஹல்லாக்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் பட்டியல் என்பவற்றிலிருந்து தேவையுடையவர்களை இனங்காண்கிறோம். இன்று உங்கள் வீட்டுக்கு சாப்பாடு கொண்டு தருவோம் என முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிக்கிறோம். குறிப்பாக தொழிலற்றவர்கள், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் போன்றவர்களுக்கு இதில் முன்னுரிமையளிக்கிறோம். இத்திட்டத்திற்கு மக்கள் தரும் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இதேபோன்றதொரு திட்டம் சம்மாந்துறை பிரதேசத்திலும் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “பசித்தோருக்கு உணவளிக்க கைகோர்ப்போம்” எனும் தலைப்பிலான இந்த திட்டத்தை சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சமூக சேவைகள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடு முன்னெடுக்கின்றனர். இதன் ஆரம்ப நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்திலும் ‘உண்போம் உணவளிப்போம்’ எனும் தலைப்பிலான ஒரு வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. YESDO இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியில் உணவு சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் தொடர்பில் இவ்வமைப்பின் செயலாளர் அஸாஹிம் கருத்து வெளியிடுகையில், முதல் நாளில் நாம் 250 பார்சல்களை சேகரித்து விநியோகித்துள்ளோம். சமைத்து பார்சல்களாக எம்மிடம் ஒப்படைக்கலாம்.
இன்றேல் ஒரு பார்சலுக்கு 300 ரூபா வீதம் பணத்தை எம்மிடம் ஒப்படைக்கலாம். நாம் கிராம சேவையாளர்கள் மூலமாக தேவையுடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு இந்த உணவுப் பார்சல்களை விநியோகிக்கிறோம். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என்றார். புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ‘உணவு வங்கி’ திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் பேஷ் இமாமிடம் தமது உதவிகளை மக்கள் கையளிக்க முடியும் என்றும் தேவையுடையவர்கள் பள்ளிவாசலை அணுகி உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உணவு விநியோகத் திட்டம் ஒன்றை பேருவளையிலுள்ள மருதானை சரிட்டி அமைப்பும் ஆரம்பித்துள்ளது. மருதானை மற்றும் சீனங்கோட்டை ஆகிய பகுதிகளில் உணவுப் பார்சல்களை சேகரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் கடந்த ஜுன் 16 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் நேற்று வரை 3000 இற்கும் மேற்பட்ட பார்சல்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் அமைப்பின் செயலாளர் ரூமி ஹாரிஸ் தெரிவித்தார்.
பேருவளை பிரதேசத்தில் மருதானையில் மாத்திரமன்றி வத்திராஜபுர, மஹகொட, மாளிகாஹேன, கொரகாதுவ உட்பட மேலும் பல கிராமங்களுக்கும் உணவுப் பார்சல்கள் விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பாக சிங்கள மக்கள் வாழும் மீனவக் கிராமங்களான பண்டாரவத்தை, பொன்னலகொட ஆகிய பிரதேசங்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
“ தினமும் ஒரு சகோதரர் 50 பார்சல்களை எம்மிடம் ஒப்படைக்கிறார். ஏனைய மக்கள் தமது வீடுகளில் சமைத்து 50 பார்சல்கள் வரை தருகிறார்கள். சிலர் எமக்கு வழங்கும் பணத்தில் சுமார் 100 முதல் 120 பார்சல்கள் வரை கொள்வனவு செய்கிறோம். தேவையுள்ளவர்களை நேரில் சந்தித்து அவர்களது உண்மையான குடும்ப நிலைவரத்தை அறிந்த பின்னரே உதவுகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அக்குறணை நகரிலும் Akurana Food Campaign Team இன் ஏற்பாட்டில் ‘பட்டினியற்ற நகரை நோக்கி’ எனும் தலைப்பிலான உணவு விநியோக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு இடங்களில் உணவுப் பொதிகள் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஒரு வார காலத்தில் சுமார் 1200க்கும் அதிகமான உணவுப் பொதிகள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான வேலைத்திட்டங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள் இவற்றை ஒருங்கிணைக்க முடியும். பிரதேச, இன, மத வேறுபாடின்றி மக்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு மக்களின் தேவையறிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டங்கள் பாராட்டுக்குரியவை. இதில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். எம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். மேற்படி வேலைத்திட்டங்களுக்கு நீங்களும் ஆதரவளிக்க விரும்பினால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
அக்கரைப்பற்று : 075331999
அட்டாளைச்சேனை : 0767620601
அக்குறணை : 0770202016
பேருவளை : 0767810699
காத்தான்குடி : 0776521555
சம்மாந்துறை : 0779930640