(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.எம்.முஷாரப் தான் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியினால் நீக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார். தான் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டமை இயற்கை நீதிக்கு முரணானது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் யாப்புக்கு எதிராகவும் அதன் தீர்மானங்களுக்கு எதிராகவும் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு கட்சியினால் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. கட்சி மேற்கொண்ட ஒழுக்காற்று விசாரணையின் பின்பே அவர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அது பற்றி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டது.
குறித்த பதவி நீக்கம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கட்சியினால் அறிவிக்கப்பட்டு அத்திகதியிலிருந்து ஒரு மாதகாலத்துக்குள் அந்த நீக்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யும் உரிமை அவருக்கு அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டிசில்வா ஆஜராகியுள்ளார்.
முஷாரப் எம்.பி.கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் விடிவெள்ளி கருத்து வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
“இது ஒரு தனிப்பட்ட பழிவாங்கலாகும். நான் கட்சியில் இணைந்த காலத்திலிருந்து கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருந்தேன். விசுவாசமாகவே இருந்தேன். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே என்னை கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்ற நிலைப்பாடே இருந்தது.
ஒழுக்காற்று விசாரணை ஒரு கண் துடைப்பாகும். எமது கருத்தை சொல்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.எப்படியும் என்னை நீக்கவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலே இருந்தது. கட்சியின் உயர் பீடமே விசாரணைக்குழுவாக மாறி தீர்மானம் மேற்கொண்டு நான் நீக்கப்பட்டிருக்கிறேன்.நான் நீதிக்காக இறுதி வரை போராடுவேன் என்றார்.
இதே வேளை முஷாரப் எம்.பி தனது பதவிநீக்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருப்பது தொடர்பில் அகில இலங்கை காங்கிரஸின் பொதுச் செயலாளர் எஸ்.சுபைர்தீனிடம் விடிவெள்ளி கருத்து வினவிய போது குறிப்பிட்ட மனுவுக்கு எதிராக கட்சி உயர் நீதிமன்றில் விரைவில் மனுதாக்கல் செய்யவுள்ளது என்றார்.– Vidivelli