குர்ஆன் இறக்குமதியின்போது ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை

முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் அன்ஸார்

0 347

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
புனித குர்ஆன் பிர­தி­க­ளையும், தமிழ் மொழி­யி­லான இஸ்­லா­மிய நூல்­க­ளையும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதில் ஏற்­படும் தாம­தங்­களைத் தவிர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ள­தாக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

2019 ஆம் ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்பு செயற்­பட்ட பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்­புக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு என்­ப­ன­வற்றில் அளிக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் குர்ஆன் பிர­திகள் குர்ஆன் மொழி­பெ­யர்ப்­புகள், மற்றும் இஸ்­லா­மிய புத்­த­கங்­களில் தீவி­ர­வாத கருத்­துக்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­தன. இவற்றின் இறக்­கு­ம­திகள் கண்­கா­ணிக்­கப்­ப­ட­வேண்டும் என சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இதற்­கென 2019 ஆம் ஆண்டு ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவில் உல­மாக்­களும் உள்­ள­டங்­கி­யுள்­ளனர்.

இது தொடர்பில் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; இறக்­கு­மதி செய்­யப்­படும் குர்ஆன் பிர­திகள் மற்றும் இஸ்­லா­மிய நூல்­களில் தீவி­ர­வாத, அடிப்­ப­டை­வாத கருத்­துகள் உள்­ள­டங்­கி­யுள்­ள­னவா என்­பதை குறிப்­பிட்ட குழு ஆராய்ந்து புத்த சாசனம், மத மற்றும் கலா­சார அமைச்சு மற்றும் பாது­காப்பு அமைச்­சுக்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் தீவி­ர­வாத கருத்­துக்கள் இல்லை என்­பது உறுதி செய்­யப்­பட்ட பின்பே இறக்­கு­மதி செய்­யப்­பட்ட குர்ஆன் பிர­திகள் மற்றும் இஸ்­லா­மிய நூல்கள் பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டன. இதனால் இறக்­கு­ம­தி­யா­ளர்கள் தாம­தங்­க­ளையும் பல்­வேறு சிர­மங்­க­ளையும் அனு­ப­வித்து வரு­கி­றார்கள்.

இந்­நி­லை­மையைத் தவிர்ப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் நூல் இறக்­கு­ம­தி­யா­ளர்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு முன்­பாக அந்­நூலின் அல்­லது குர்­ஆனின் இரு பிர­தி­களை மாத்­திரம் வெளி­நாட்­டி­லி­ருந்து தரு­வித்து திணைக்­க­ளத்தில் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரி­யுள்­ளது. அவ்­வாறு ஒப்­ப­டைக்­கப்­படும் மாதிரி நூல் அல்­லது குர்ஆன் திணைக்­க­ளத்தின் மார்க்க நிபு­ணர்கள் குழு மூலம் ஆய்வு செய்­யப்­படும், தீவி­ர­வாத கருத்­துகள் இல்­லை­யெனில் பாது­காப்பு அமைச்சு மற்றும் கலா­சார அமைச்சு ஊடாக அனு­மதி வழங்­கப்­படும். இதன் பின்பு இறக்­கு­ம­தி­யாளர் இறக்­கு­மதி செய்ய முடியும். இது தாம­தங்­க­ளையும் சிர­மங்­க­ளையும் தவிர்ப்­ப­தற்­காக அமையும் என்றார்.

நாட்டில் குர்­ஆ­னுக்குத் தட்­டுப்­பாடு
வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் குர்­ஆ­னுக்கு இவ்­வா­றான நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தாலும், இவ்­வா­றான நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தாலும் நாட்டில் தற்­போது குர்­ஆ­னுக்குத் தட்­டுப்­பாடு நில­வு­வ­தாக இஸ்­லா­மிய புத்­தக நிலைய உரி­மை­யா­ளரும், இறக்­கு­ம­தி­யா­ள­ரு­மான எஸ்.எஸ்.ஏ.ஹில்மி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

திணைக்­கள பணிப்­பாளர் தெரி­விப்­ப­து­போன்று வெளி­நாட்­டி­லி­ருந்து முதலில் மாதி­ரி­குர்ஆன் பிர­திகள், இஸ்­லா­மிய நூல்­களை தரு­விப்­பது பரி­சீ­ல­னைக்­காக ஒப்­ப­டைத்­தாலும் இறக்­கு­ம­திக்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு பல மாதங்கள் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

அத்­தோடு அனு­மதி பெறப்­பட்டு ஏற்­க­னவே இறக்குமதி செய்யப்பட்ட குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை விற்றுத்தீர்ந்த பின்பு மீண்டும் இறக்குமதி செய்வதென்றால் மீண்டும் குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றியே இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

தட்டுப்பாடு நிலவும் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை இலங்கையில் அச்சிடுவதென்றால் இன்றைய நிலையில் பெரும் செலவீனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.