(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்திரிகர்கள் 50 பேர் நேற்று முன்தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவிற்குப் பயணமாகினர்.
சவூதி அரேபியா ஜெத்தா விமான நிலையத்தைச் சென்றடைந்த முதற்தொகுதி ஹஜ் யாத்திரிகர்களை ஜெத்தா விமான நிலையத்தில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பக்கீர் ஹம்சா மற்றும் கொன்சீயூலர் நாயகம் பலாஹ் மெளலானா ஆகியோர் வரவேற்றனர்.
சவூதி அரேபிய ஹஜ், உம்ரா அமைச்சு இவ்வருடம் இலங்கைக்கு 1585 ஹஜ் கோட்டா வழங்கியபோதும் இலங்கையிலிருந்து இவ்வருடம் 960 யாத்திரிகர்களே தங்கள் பயணத்தை உறுதி செய்தனர். ஹஜ் விமானங்கள் தொடர்ந்து ஜூலை 3 ஆம் திகதி வரை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளன.
இவ்வருட ஹஜ் கட்டணம் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகமாக இருக்கின்றமையே யாத்திரிகர்களின் ஆர்வம் குறைவடைந்தமைக்கு காரணமாகும். இவ்வருட ஹஜ் கட்டணம் 20 முதல் 25 இலட்சம் ரூபாய்களாகும்.
இவ்வருட ஹஜ் யாத்திரைக்கான ஆகக்கூடிய வயதெல்லை 65 ஆகும். 65 வயதுக்குட்பட்டவர்களே ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருட இலங்கை யாத்திரிகர்களில் பெரும் எண்ணிக்கையானோர் சிரேஷ்ட பிரஜைகள் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.
ஹஜ் யாத்திரைக்கு சவூதி அரேபியா இவ்வருடம் உள்நாட்டு, வெளிநாட்டு யாத்திரிகர்கள் மொத்தம் ஒரு மில்லியன் பேருக்கே அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை யாத்திரிகர்களுக்கு கட்டார் எயார், ஓமான் எயார், ஜெஸீரா மற்றும் எயார் அரேபியா ஆகியன விமான சேவைகளை வழங்கியுள்ளன.
இலங்கை யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்து கொண்டு இம்மாத இறுதிப் பகுதியில் நாடு திரும்பவுள்ளனர்.-Vidivelli