“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவரான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் செயலணியின் அறிக்கை நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அறிக்கை 43 சிபாரிசுகளை உள்ளடக்கியதாகவும் 8 அத்தியாயங்களையும் இரண்டு பாகங்களையும் கொண்டதாக அமைந்திருந்தது. இவ்வறிக்கை அரசசார்பற்ற அமைப்புகள், மதகுழுக்கள், பல்வேறு இனரீதியான மக்கள் பிரிவுகள், பல்கலைக்கழக சமூகம், சட்டத்துறையின் பிரபலங்கள் ஆகியோர்கள் உள்ளடங்களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 1200 பேருக்கும் மேற்பட்டவர்களின் வாக்கு மூலங்கள், சாட்சியங்கள் பெறப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அறிக்கையை அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” எனும் எண்ணக்கருவை அமுல்படுத்துவதற்காக பலதரப்பட்டவர்களின் கருத்துகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை கவனத்தில் கொண்டு அவற்றை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான வரைபொன்றினை உருவாக்குவதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்கு இச்செயலணி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மற்றும் 2021 நவம்பர் மாதம் 6 ஆம் திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இச்செயலணி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பேராசிரியர் சாந்தி நந்தன விஜேயசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் வீரவர்தனலாகே சுமேத மன்ஜுலை, டாக்டர் என்.ஜி.சுஜீவ பண்டிதரதன, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, சட்டத்தரணி டப்ளியூ.பி.ஜே.எம்.ஆர்.சஞ்சய பண்டாரமாரபே, ஆர்.எ.எரன்த குமார நவரதன,பானி வெவல, மெளலவி எம்.எ.எஸ். மொஹமட் (பாரி) யோகேஸ்வரி பத்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் இச்செயலணியின் உறுப்பினர்களாக செயற்பட்டனர். ஜனாதிபதி சிரேஷ்ட உதவி செயலாளர் ஜீவன்தி சேனநாயக்க செயலணியின் செயலாளராக கடமையாற்றினார்.
அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி அநுர திசநாயக்க ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
அறிக்கையை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் சிபாரிசுகள் அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். -Vidivelli