(றிப்தி அலி)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் எரிபொருள் உதவி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
மிக விரைவில் இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு கட்டியெழுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், எரிபொருள் உற்பத்தி செய்யும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மே 9ஆம் திகதி நாட்டின் பல பாகங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு பின்னர் முதற் தடவையாக ஊடகங்களில் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (28) தோன்றிய போதே, முன்னாள் அமைச்சர் இந்த அறிவிப்பினை மேற்கொண்டார்.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதியொருவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளவுள்ள முக்கியத்துவமிக்க இந்த விஜயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பினையும் மேற்கொள்ளவில்லை.
ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதுவராலயத்தின் உயர் அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வினவிய போது, “குறித்த விஜயம் தொடர்பில் எதுவும் தெரியாது எனவும், இது தொடர்பில் எந்தவித உத்தியோகபூர்வ தொடர்பாடலும் மேற்கொள்ளப்படவில்லை” என்றார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு நாடுகளுடன் இலங்கை அரசாங்கத்திலனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பேசுவார்த்தைகள் எதுவும் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli