பஹ்ரைன் உதைபந்தாட்ட வீரரை நாடுகடத்த வேண்டாமென தாய்லாந்திடம் கோரிக்கை

0 657

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ள ஹகீம் அல்-அரைபியின் நண்பர்களும் ஆதரவாளர்களும் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தாய்லாந்திலிருந்து அவர் பிறந்த நாடாடான பஹ்ரைனுக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தினை அவர் எதிநோக்கியுள்ளார்.

முன்னதாக பஹ்ரைனின் தேசிய உதைபந்தாட்ட அணிக்காக விளையாடிய அல்-அரைபி கடந்த செவ்வாய்கிழமை பேங்கொக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பஹ்ரைன் அவ் வழக்கு தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்வதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் நீதிபதி மேலும் 60 நாட்கள் தடுப்புக் காவலை நீடித்தார்.

அவர்களை நிறுத்துங்கள் என கைவிலங்கிடப்பட்ட அல்-அரைபி நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து வரப்படும்போது ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கூறும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. நான் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவன், நான் பஹ்ரைனைச் சேர்ந்தவனல்ல, நான் எதுவும் செய்யவில்லை என 25 வயதான அவர் தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக இரவு பகலாக உதைபந்தாட்ட வீரரின் நண்பர்கள் குறிப்பாக அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் பஹ்ரைன் வம்சாவளி மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது நகரான மெல்பேனில் அமைந்துள்ள தாய்லாந்து துணைத் தூதரகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹக்கீம் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றமைக்கு காரணம் அவர் ஒரு தேசியரீதியில் பிரபலமான நபர் என்பதனாலாகும். இது தவிர அவரது சகோதரர் அரசியலில் தீவிர செயற்பாட்டில் இருப்பவர். எனவே அவர்கள் முழுக் குடும்பத்தையும் இலக்கு வைத்தள்ளனர் என அல்-அரைபியின் நண்பரான பஸ்ஸாம் தெரிவித்தர்.

பஹ்ரைனின் வேண்டுகோளுக்கு அமைவாக சர்வதேச பொலிஸாரினால் விடுக்கப்பட்ட சிப்பு அறிவித்தலுக்கு அமைவாகவே செயற்படுவதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 27 ஆந் திகதி தேனிலவுக்காக பேங்கோக்கிற்கு வருகைதந்தபோது அல்-அரைபி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

பிரதானமாக சுன்னி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பஹ்ரைனைவிட்டு ஷியா முஸ்லிமான உதைபந்தாட்ட வீரரான ஹகீம் அல்-அரைபி 2012 ஆண்டு தான் கைது செய்யப்பட்டபோது சித்திரவதை செய்யப்பட்டதாகத் தெரிவித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த வருடம் அவுஸ்திரேலியா அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கியது.

சித்திரவதை செய்யப்பட்டதனால் நாட்டைவிட்டு வெளியேறி அவரை மீண்டும் அதே நாட்டுக்கு நாடு கடத்தினால் அவர் அதேவிதமான நெருக்குதல்களை முகம்கொடுக்க வேண்டியேற்படும் என மனித உரிமைகளுக்கான ஆசியான் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஆசிய பசுபிக் அகதிகள் உரிமைகளுக்கான வலையமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் இவான் ஜோன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹகீம் அல்-அரைபியை பஹ்ரைனுக்கு திருப்பி அனுப்புதல் கொடூரமானது மாத்திரமல்ல மனிதாபிமானமற்ற செயற்பாடுமாகும். அது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினை மீறும் செயற்பாடாகவும் அமையும். தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தடுப்புக் காவலிலிருந்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். அதேபோன்று அவருக்கு எவ்வித இடைஞ்சல்களுமின்றி அவர் அவுஸ்திரேலியாவுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையமொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் ஆஜராகாத நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள அவர் சம்பவம் இடம்பெற்றபோது தான் உதைபந்தாட்டப்போட்டியொன்றில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

 

 

 

Leave A Reply

Your email address will not be published.