ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை 1000 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் உட்பட வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
அரசின் பக்தார் செய்தி முகமை வெளியிட்ட செய்தியில் 1000 பேர் இறந்ததாகவும், 1500 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் 7,000க்கும் மேலானவர்கள் அங்கு நிலநடுக்கம் காரணமாக இறந்துள்ளனர் என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தரவுகள் கூறுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.
“துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆப்கான் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளையும் அழித்துள்ளது.” என அரசு செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி நிறுவனங்கள்; தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.- Vidivelli