எம்.எல்.எம்.மன்சூர்
இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை செயற்பட்ட கடந்த 44 வருட காலத்தில் பதவி வகித்த மிகவும் பலம் வாய்ந்த ஜனாதிபதி என்ற பெருமையையும், மிகவும் பலவீனமான ஜனாதிபதி என்ற பெருமையையும் ஒரே நேரத்தில் தட்டிச் செல்கிறார் கோட்டாபய ராஜபக்ச. அதேபோல, ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என்ற விதத்திலும் வரலாறு அவரை நினைவு கூரும்.
2019 நவம்பர் மாதத்தில் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற தருணத்தில் பெருவாரியான சிங்கள மக்கள் அந்தப் பேரெழுச்சியை அளவு கடந்த பெருமித உணர்வுடன் கொண்டாடி வரவேற்றார்கள். ‘வருக!… மா மன்னரே! வாழி நீடு…’ என்று வாழ்த்துரைத்து, பன்னீர் தெளித்து அவரை வரவேற்ற அதே மக்கள் இப்பொழுது ‘நீர் போய் தொலைந்தால் போதும் இனி’ என்று வசைபாடி, பகிரங்கமாக அவருக்கு சாபமிடும் அளவுக்கு தலைகீழாக மாறியிருக்கிறது நிலைமை.
ராஜபக்ச வழிபாட்டில் ஊறித் திளைத்துப் போயிருந்த சிங்கள கூட்டு உளவியலை, ஒட்டுமொத்தமாக ராஜபக்சாக்களை நிராகரித்தொதுக்கும் எதிர் திசைக்கு நகர்த்திச் சென்ற காரணிகள் எவை? இரண்டு வருடங்களுக்கு முன்னர் எவரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாத இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி? இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியவர்கள் யார்?
நம்பவே முடியாத விதத்திலான அதிரடி மாற்றங்களுடன் இணைந்த விதத்தில் வேக வேகமாக காட்சிகள் மாறி வரும் இலங்கையின் இன்றைய அரசியல் களம் குறித்த கேள்வி – பதில் வடிவிலான ஒரு பார்வை.
அரசாங்கத்துக்கு எதிரான கோல்பேஸ் திடல் போராட்டக் களத்துக்கு ‘அறகல பூமிய’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா?
சிங்கள மொழியில் ஒரு போராட்டத்தைக் குறிப்பதற்கு ‘சட்டன’ மற்றும் ‘அறகலய’ என இரண்டு சொற்கள் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு நுட்பமான வித்தியாசமிருக்கிறது. 1930 களின் பின்னர் லங்கா சமசமாஜக் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகள் பிரபல்யப்படுத்திய ‘அறகலய’ என்ற சொல் நிரந்தர இயல்பிலான ஒரு போராட்டத்தைக் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்படுகிறது (உதாரணம்: சத்தியத்துக்கும், அசத்தியத்துக்கும் இடையிலான போராட்டம்).
குறிப்பாக 2010 இன் பின்னர் இலங்கை அரசியல் சமூகத்தில் (Polity) பாரியளவிலான ஊழல், முறைகேடுகள், இனத் துவேஷம், மத வெறி என்பன ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. ‘எங்கள் மீது எவரும் கை வைக்க முடியாது’ என்ற ஆணவத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், மகா சங்கத்தினரின் ஒரு பிரிவினரும் இலங்கையில் அண்மைய வருடங்களில் நிகழ்த்தி வந்திருக்கும் அராஜகச் செயல்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்திருப்பதற்கான அத்தாட்சிகள்.
பல சந்தர்ப்பங்களில் ஆள் பார்த்து, இடம் பார்த்து சட்டம் அமுல் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ‘எம்மை யாரும் தண்டிக்க முடியாது‘ என்ற எண்ணத்தில் பல தரப்புக்கள் பகிரங்கமாகக் குற்றச் செயல்களை நிகழ்த்தும் வழக்கம் (Immunity) நாட்டில் வேரூன்றி வருகிறது. கடந்த மே 9 ஆம் திகதி பொல்லுகளுடனும், ஆயுதங்களுடனும் கோல்பேஸ் திடலுக்குள் பிரவேசித்த நபர்கள் இந்த எண்ணத்தினாலேயே தூண்டப்பட்டிருந்தார்கள். ஒரு ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரையில் இவை மிகவும் ஆபத்தான போக்குகள்.
இதுவரை காலமும் நாங்கள் பழக்கப்பட்டிருக்கும் சம்பிரதாயமான அரசாங்கக் கட்சி – எதிர்க்கட்சி அரசியல் மூலம் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்குகளை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்பது ‘அறகலய‘ செயற்பாட்டாளர்களின் வாதம். ஒட்டுமொத்த கட்டமைப்பு மாற்றமொன்றுக்கூடாக மட்டுமே அதனை சாதித்துக் கொள்ள முடியும் என அவர்கள் கருதுகிறார்கள். அதற்கென பல முனைகளிலும் தொடரான பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வெறுமனே ராஜபக்சாக்களை தேர்தலில் தோற்கடித்து, மற்றொரு கட்சியின் கையில் ஆட்சியை கையளிப்பதன் மூலம் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை. பழைய திருட்டுக் கும்பலின் இடத்தில் ஒரு புதிய திருட்டுக் கும்பல் வந்து உட்கார்ந்து விடும். கடந்த 74 வருட கால சரித்திரம் மீண்டும் மீண்டும் இதனையே நிரூபித்துக் காட்டியிருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.
ராஜபக்சாக்களை விரட்டியடிப்பதுடன் நின்று விடாமல், இனிமேல் இலங்கை அரசியலில் அத்தகைய தீய சக்திகள் தலை தூக்குவதற்கான வாய்ப்பை அறவே இல்லாதொழிக்க வேண்டும்; அந்தக் குறிக்கோளை இலக்காகக் கொண்டு இலங்கையர்கள் அனைவரும் கூட்டாக முன்னெடுக்க வேண்டிய தொடர் போராட்டங்களையே அவர்கள் ‘அறகலய’ எனக் குறிப்பிடுகிறார்கள்.
உண்மையில், இந்த ‘அறகலயவை‘ பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்?
இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? ஏதாவது மறைகரங்கள் இங்கு செயற்பட்டு வருகின்றனவா என்பது போன்ற கேள்விகள் இப்போதைக்கு முக்கியமில்லை. ஒன்றை மட்டும் சொல்லலாம். எந்தவொரு மக்கள் எழுச்சியையும் சரியான திசையில் நெறிப்படுத்திச் செல்வதற்கும், அதற்கான முன்னுரிமைகளை வகுத்துக் கொள்வதற்கும் ஒரு குழு இருந்து வருவது அவசியம். அந்தப் பணியை ஒரு சில சிறிய கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் முன்னெடுப்பதாகத் தெரிகிறது. அவர்கள் இப்பொழுது ‘நாங்கள் இன்னின்ன கட்சியின் ஆதரவாளர்கள்‘ என்று சொல்லிக் கொண்டால் அதனை எதிரிகள் தமக்குச் சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்னொரு விதத்தில் இந்தப் போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து வருகிறார்கள். அந்த நிலையில், அதனை ‘கட்சி சாராதது‘ என்று சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை.
இத்தகைய ஒரு போராட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தை இலங்கை அரசியலிலிருந்து முற்றாக அகற்ற முடியுமா?
ராஜபக்சாக்களை வீழ்த்துவதில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் முதன்மையான சவால், சாதாரண சிங்கள மக்களுக்கு மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ராஜபக்ச திருவுரு (Rajapakse Cult) வழிபாட்டை தகர்த்தெறிவது எப்படி என்பதை தெரிந்து கொள்வது. அது ஒரு சாதாரண காரியமல்ல. சமூகவியல் மற்றும் மானுடவியல் போன்ற துறைகளில் ‘Collective Memory’ என ஒரு சொல் புழக்கத்தில் இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த காலத்தில் தாம் சந்திக்க நேரிட்ட ஒரு பெரும் துயர நிகழ்வை அல்லது பேரதிர்ச்சியை கூட்டாக நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நினைவு தொடர்ந்து அவர்களை அலைக்கழித்து வருவதுடன், அவர்கள் எடுக்கும் அனைத்து முக்கியமான முடிவுகள் மீதும் அது செல்வாக்குச் செலுத்துகின்றது என்று கருதப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தினரும் இறந்த காலம் தொடர்பான கசப்பான, துயரார்ந்த அனுபவங்களுடன் கூடிய கூட்டு நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணம் 2009 மே முள்ளிவாய்க்கால் சமர். அது தமிழர்களினதும், சிங்களவர்களினதும் கூட்டு உளவியலில் நேர்மாறான சித்திரங்களை ஊன்றச் செய்திருக்கிறது. பிரபாகரனின் மரணத்தையும் உள்ளிட்ட விதத்தில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட செயலை ஒரு மாபெரும் துயர நிகழ்வாக தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
சிங்கள மக்கள் அதற்கு நேர் மாறான விதத்தில் தாம் வாழ்நாளில் சாதித்த மிகப் பெரிய வெற்றி ஒன்றாக அதனை கருதியதுடன், அந்த வெற்றியை ஈட்டித் தந்த ராஜபக்சாக்களை, எதிரிகளிடமிருந்து சிங்கள இனத்துக்கு விடுதலை பெற்றுத் தந்த கடவுளர்களாக பார்க்கத் தொடங்கினார்கள். ஏனென்றால், 1985 அநுராதபுரம் படுகொலைகள் தொடக்கம் இறுதியாக 2009 மார்ச் மாதம் அக்குரஸ்ஸயில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் வரையில் தென்னிலங்கையில் நிகழ்த்தப்பட்ட கொலைகள் எடுத்து வந்த அதிர்ச்சி மற்றும் அந்தக் கால கட்டம் நெடுகிலும் (குறிப்பாக சிங்கள) மக்கள் அனுபவித்து வந்த மரண பயம் என்பன அவர்களது மனதில் உறைந்து போயுள்ளன.
2010 இன் பின்னர் இடம் பெற்ற அனைத்து தேர்தல்களிலும் சிங்கள மக்கள் ராஜபக்சாக்களுக்கு வழங்கிய அமோக ஆதரவை இந்தப் பின்புலத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் கூட சிங்கள வாக்கு வங்கியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு நகர்வு ஏற்பட்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட 85%– -90 % ஆன சிறுபான்மைச் சமூக வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே சிறு வாக்கு எண்ணிக்கையில் அவர் தோல்வியடைந்திருந்தார் (உதாரணம்: மூதூர் தொகுதி தேர்தல் முடிவுகள் – மைத்திரிபால சிறிசேன 57, 532 வாக்குகள்; மஹிந்த ராஜபக்ச 7,132 வாக்குகள்).
2018 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ராஜபக்ச பிம்பம் சிங்கள மக்களின் உள்ளங்களில் எந்த அளவுக்கு வலுவான விதத்தில் வேரூன்றியிருந்தது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டின. 2019 ஏப்ரல் ஈஸ்டர் தாக்குதல்கள், முன்னரிலும் பார்க்க வலுவான விதத்திலான ராஜபக்சாக்களின் இரண்டாவது எழுச்சிக்கு வித்திட்டன.
ராஜபக்சாக்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் இவ்விதம் கட்டியெழுப்பப்பட்டிருந்த புனித பிம்பம் தகர்க்கப்பட்டது எப்படி?
‘கோட்டா கோ ஹோம்’ சுலோகம் திடீரென முன்வைக்கப்பட்டாலும் கூட இத்தகைய அதிரடியான ஒரு கோஷத்திற்கு மக்களின் ஆதரவை திரட்டிக்கொள்ளும் நோக்கில் சிங்கள சமூக ஊடகங்கள் கடந்த இரண்டு வருட காலமாக அவர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்தி வந்துள்ளன.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அவரை வைத்து வரையப்படும் கார்ட்டூன் ஒன்றை பிரசுரிப்பதற்குக் கூட கொழும்பின் முன்னணி சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தயக்கம் காட்டி வந்தன என்பது எல்லோரும் அறிந்த செய்தி. இலங்கை அரசியல் சமூகத்தில் ராஜபக்ச குடும்பம் எவரும் கை வைக்க முடியாத ஒரு ‘புனிதப் பசுவாக’ (Sacred Cow) கருதப்பட்டு வந்தது. அந்தப் பயத்தைப் போக்கி, ராஜபக்ச புனித பிம்பத்தை உடைத்து நொறுக்கியதில் சிங்கள சமூக ஊடக வெளியில் நட்சத்திர அந்தஸ்தை ஈட்டிக் கொண்டிருக்கும் நான்கு ஆண்களும், ஓர் இளம் பெண்ணும் வகித்து வந்திருக்கும் பாத்திரம் மிக மிக முக்கியமானது.
உபுல் சாந்த சன்னஸ்கல, தர்ஷன ஹந்துன்கொட, அபிஷேகா பெர்னான்டோ, சேபால் அமரசிங்க மற்றும் சுதத்த திலகசிறி ஆகியோர் (பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும்) தமது யூ டியூப் சேனல்களுக்கு ஊடாக இவ்விதம் முன்னெடுத்த தீவிர ராஜபக்ச எதிர்ப்பு பிரசாரம், இலங்கையில் அண்மைக் காலத்தில் சமூக ஊடகங்களுக்கு ஊடாக முன்னெடுக்கப்பட்ட மிகவும் வெற்றிகரமான பிரசார இயக்கம் ஒன்றுக்கான சிறந்த உதாரணம்.
ராஜபக்சாக்கள் எந்த மரியாதைக்கும் லாயக்கற்ற ஒரு ‘திருட்டுக் கும்பல்’ (பட்ட ஹொரு) என்ற கோஷத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே சீராக முன்வைத்து வந்தார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் பல தடவைகள் ‘பட்ட ஹொரு‘ என்ற வார்த்தை உச்சரிக்கப்பட்டது.
ராஜபக்சாக்களை அம்பலப்படுத்தும் அதே வேளையில், அவர்களுடைய முதன்மை ஆதரவுத் தளத்தை பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகள், புத்த பிக்குகள் அத்துடன் ஹிரு, தெரண, மவ்பிம போன்ற ஊடகங்களின் முதலாளிகள் போன்றவர்கள் மீதும் அவர்கள் மிகக் கடுமையான தாக்குதல்களை தொடுத்து, அந்த நபர்களின் மறுபக்கத்தை மக்களுக்கு எடுத்து காட்டினார்கள்.
குறிப்பாக, இன்றைய சிங்கள சமூகத்தில் ஒரு ‘Iconoclast’ ஆக (புனிதங்களை குலைப்பவராக) செயற்பட்டு வரும் கோடீஸ்வர டியூஷன் வாத்தியாரான உபுல் சாந்த சன்னஸ்கல நன்கு பிரபல்யமான தனது யூ டியூப் சேனலில் ஞானசார தேரர், அத்துரலியே ரதன தேரர் ஆகியோரையும் உள்ளிட்ட அரச ஆதரவு பிக்குகள் மீது முன் வைத்து வந்த கடுமையான விமர்சனங்கள் சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து நிலவி வந்த மாயைகளை களைவதற்கு பெரிதும் பங்களிப்புச் செய்திருந்தன.
‘இந்தப் பிக்குகளை நாங்கள் துளியும் கண்ணியப்படுத்தத் தேவையில்லை‘ என்ற செய்தியை மீண்டும் மீண்டும் அவர் சிங்கள மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். ‘பிக்ஷ பரிச்சேதய‘ என்ற நூலிலும் (2012) இலங்கைச் சமூகத்தில் புத்த பிக்குகள் வகித்து வரும் பாத்திரம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் பதிவு செய்திருக்கிறார்.
இந்த ஐவரும், சிங்கள சமூக ஊடகங்களில் முனைப்புடன் செயற்பட்டு வரும் இன்னும் பல தீவிர ராஜபக்ச எதிர்ப்பாளர்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வாதங்களின் சாராம்சத்தை பின்வரும் விதத்தில் தொகுத்துக் கூறலாம் :
‘பௌத்த மதத்திற்கும் இந்த ஆட்களுக்குமிடையில் துளியும் சம்பந்தமில்லை. மத வெறியைத் தூண்டி, மக்களை மடையர்களாக்கி, தமது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் படு அயோக்கியர்கள் இவர்கள்.‘
வரலாறு காணாத விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு என்பன (குறிப்பாக சிங்கள) மக்களுக்கு மத்தியில் உருவாக்கிய விரக்தியும், ஆவேசமும் இறுதியில் இந்த வெடிப்பை துரிதப்படுத்தின. இந்தப் பின்னணியில், ‘கோட்டா கோ ஹோம்‘ போன்ற தீவிரமான ஒரு கோஷத்திற்கு ஆதரவளிக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்பட்டார்கள்.
இந்த ‘அறகலயவை‘ ஒரு பெரும் வரலாற்றுத் திருப்பம் என்று வர்ணிக்க முடியுமா?
நிச்சயமாக அப்படி வர்ணிக்கலாம். சுதந்திர இலங்கை அதன் 74 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக இப்படியான ஒரு மக்கள் எழுச்சியை சந்திக்கிறது. ‘நமது நாட்டில் இப்படியான ஒரு மாற்றம் நிகழ்வதற்கு அறவே சாத்தியமில்லை’ என்றே கடந்த ஏப்ரல் மாதம் வரையில் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
இதற்கு முன்னர் 1987 -–1989 காலப் பிரிவில் (அப்போது தலைமறைவாக செயற்பட்ட) JVP ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனவை இலக்கு வைத்து இதே மாதிரியான ஒரு அறகலயவை நடத்தியது. அவர்கள் அப்போது முன்வைத்த சுலோகம் ‘ஜே ஆர் மரமு‘ (ஜே ஆரை தீர்த்துக் கட்டுவோம்) என்பது. இறுதியில், அன்றைய ஜேவிபி இன் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்படுவதுடன் இணைந்த விதத்தில் அது முடிவுக்கு வந்தது. ஜே. ஆர். தனது இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்து, 1988 டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றுச் சென்றார்.
ஆனால், இந்தத் தடவை நாட்டு நிலவரம் ஒரு பெரும் மக்கள் எழுச்சிக்கு உசிதமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கும் காரணத்தினால் இந்த ‘அறகலய‘ முக்கியமான பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.
அது ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது நாட்களுக்குள்ளேயே ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய மூன்று தூண்களில் இரண்டு தூண்கள் சரிந்திருக்கின்றன. 21 ஆவது யாப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரேயே ஜனாதிபதி பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கிறார். அத்துடன், ஊழல் மற்றும் வன்முறை அரசியல் என்பவற்றுக்குப் பெயர் போன பல முன்னாள் அமைச்சர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.
சட்டத்தை தமது கைகளில் எடுத்து, மத வெறியைத் தூண்டி, சிறுபான்மைச் சமூகங்களை மிரட்டுவதை தமது முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்த ஒரு சில முன்னணி பிக்குகள் உள்ளிட்ட பலர் பதுங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.
மற்றொரு முக்கியமான சாதனை ‘அறகலய‘ சாதாரண பிரஜைகளிடம் ஏற்படுத்தியிருக்கும் அதீத நம்பிக்கையும், துணிச்சலும்.
அடிமட்ட இலங்கைப் பிரஜைகள் மத்தியில் அதிகார பீடம் குறித்து நிலவி வந்த மரியாதை கலந்த அச்சத்தை அது போக்கியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின் போது பொது மக்கள் – குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் – பொலிஸ், இராணுவம் போன்ற பாதுகாப்பு தரப்பினரை எதிர்கொண்ட விதம், அவர்களுடைய உடல் மொழி மற்றும் அவர்கள் வெளிப்படுத்திக் காட்டிய தார்மீக கோபம் ஆகிய அனைத்துமே அண்மைக் கால இலங்கை வரலாற்றில் முன்னுதாரணங்கள் இல்லாத நிகழ்வுகள்.
முதல் தடவையாக ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் மக்கள் சக்திக்கு முன்னால் மண்டியிட்டிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டு காலம் (அரசின் மறைமுக அனுசரணையுடன்) சிங்கள வலதுசாரிகளும், மதத் தீவிரவாதிகளும் அபகரித்து வைத்திருந்த பொது வெளி இப்பொழுது சாதாரண மக்களின் கைகளுக்கு வந்திருக்கிறது.
2019 இன் பின்னர் வீரியமாக முன்னெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச செயல்திட்டத்தின் அத்திவாரத் தூண்கள் ஒவ்வொன்றையும் இந்த யூ டியூப் பரப்புரையாளர்கள் ஆட்டம் காணச் செய்தார்கள். கோல்பேஸ் போராளிகள் இப்பொழுது அவற்றை முற்றிலும் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ச இன்னமும் (பெயரளவு) ஜனாதிபதியாக இருந்து வந்தாலும் கூட, இலங்கை அரசியலில் ராஜபக்ச யுகம் அநேகமாக முடிவுக்கு வந்திருக்கின்றது.
”ஆட்சியாளர்களே! இந்தத் தடவை நீங்கள் ஒரு பிழையான தலைமுறையினருடன் மோதுவதற்கு முன்வந்திருக்கிறீர்கள்…” என்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் பதாகை வாசகம் ஆட்சியாளர்களுக்கு மட்டுமன்றி எதிர்க்கட்சியினருக்கும் ஒரு வலுவான செய்தியை விடுக்கிறது. கிட்டத்தட்ட 66 ஆண்டுகளுக்கு முன்னர் அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்து எந்த கோல்பேஸ் திடலில் இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரம் துவக்கி வைக்கப்பட்டதோ அதே கோல்பேஸ் திடலில் அது கடந்த மே 9 ஆம் திகதி அது முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் எழுச்சியின் கூட்டு வலிமையைப் பார்த்து முதல் தடவையாக பொலிசாரும், இராணுவத்தினரும் பயப்படத் தொடங்கியிருக்கிறார்கள். உயரதிகாரிகள் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தமது கடமையை உணர்ந்த நிலையில், இப்பொழுது உஷார் அடைந்திருக்கிறார்கள். சாதாரண பொதுமக்களும் கூட அதிகாரிகளிடம் விரல் நீட்டி, கேள்விகளைக் கேட்கக் கூடிய துணிச்சலைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கோட்டாபய ராஜபக்சவின் முதன்மை ஆதரவுத் தளமாக இருந்து வரும் சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியில் இப்பொழுது ஒரு மனமாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதலாமா?
ஆம். அரசாங்கத்தின் வெறித்தனமான சிறுபான்மை எதிர்ப்பு அரசியல் நகர்வுகளை ஆசீர்வதித்து, அவற்றை மௌனமாக ரசித்துக் கொண்டிருந்த சிங்கள சமூகம் இப்பொழுது தனது கண்ணோட்டத்தை முழுமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட இலங்கையின் பாரம்பரிய நட்பு நாடுகள் இலங்கையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் நிலையை அவர்கள் கவலையுடன் நோக்குகிறார்கள். நமது நாடு சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட முடியும் என்ற பேரச்சம் (குறிப்பாக சிங்கள) மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கின்றது. ‘சர்வதேச சமூகத்தைப் பொருட்படுத்தவே தேவையில்லை‘ என்ற விதத்தில் உரக்கக் கோஷமிட்டு, தம்மை உஷார் மடையர்களாக வைத்திருந்த விமல் வீரவன்ச போன்றவர்கள் மீதும் சிங்கள மக்கள் கடும் வெறுப்பை உமிழ்கிறார்கள்.
டாக்டர் ஷாபி தொடர்பான புரளியைக் கிளப்பி, சிங்கள ஊடகங்களின் பக்கபலத்துடன் அதனை முன்னெடுத்துச் சென்ற நபர்களுக்கும் சிங்கள மக்கள் கடும் வசை சொற்களுடன் சாபமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் அரசியல்வாதிகள், சட்டத்தை தமது கைகளில் எடுக்கும் அரசியல் அடியாட்கள், பௌத்த மத விழுமியங்களை இழிவுபடுத்தும் பிக்குகள், கடமையைச் செய்யத் தவறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச உயரதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் மக்கள் வலுவான ஒரு செய்தியை விடுத்திருக்கிறார்கள்.
ஆனால், கோட்டாபய ராஜபக்சவை இன்னமும் வீட்டுக்கு அனுப்ப முடியவில்லையே?
கோட்டாபய ராஜபக்ச இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தாலும் கூட, இன்றைய கோட்டாபய 2019 இல் ருவன்வெலிசாயவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அந்த கோட்டாபய ராஜபக்ச அல்ல என்பதையும், எதிர்ப்புக்களை துச்சமாக மதித்து ‘ஒரே நாடு – ஒரே சட்டம்‘ செயலணிக்கு ஞானசார தேரரை தலைவராக நியமனம் செய்த அந்த கோட்டாபய ராஜபக்ச அல்ல என்ற விடயத்தையும் இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ச என்ற தனி மனிதனுடன் எவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆட்சித் தலைவர் என்ற முறையில் அவர் முன்னெடுத்த பல நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு பெருமளவுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவை என்ற அடிப்படையிலேயே அவரை விரட்டியடிக்க வேண்டுமென்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. இப்பொழுது அந்த செயல்திட்டம் பெருமளவுக்கு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
அவரை இந்த அளவுக்குப் பலவீனப்படுத்தியிருக்கும் சாதனையை, பதவி விலகச் செய்வதற்கு இணையான ஒரு சாதனையாகவே நோக்க வேண்டும். அத்தோடு ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பமும் முடக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் வரக் கூடிய தேர்தல் ஒன்றில் மூன்றாம் தலைமுறை ராஜபக்ச ஒருவர் வெற்றியீட்டினாலும் கூட, தனது குடும்பத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஒரு பெரும் அரசியல் சக்தியாக அவர் உருவெடுக்க முடியாது.
இனிமேல் இலங்கையில் ஒருபோதும் இனத் துவேஷம் மற்றும் மதவெறி என்பன தலைதூக்க முடியாது என்று சொல்லலாமா?
இல்லை; அப்படிச் சொல்ல முடியாது. இனவாத, மதவாத சிந்தனை கொண்ட நபர்களும், மற்றைய இனத்தவர்கள் மதத்தவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கும் நபர்களும் பெரும்பான்மைச் சமூகத்திலும், அதே போல சிறுபான்மைச் சமூகங்களிலும் இருந்து வருகிறார்கள்; இனிமேலும் அப்படி இருந்து வருவார்கள்.
ஆனால், 2012 இன் பின்னர் இலங்கையில் தோன்றிய மிக ஆபத்தான போக்கு நாட்டின் மைய நீரோட்ட அரசியலில் (Mainstream Politics) இந்தகைய நபர்கள் ஒரு பெரும் சக்தியாக எழுச்சியடைந்தமையாகும். சிங்கள ஊடகங்களும் அதற்கு கணிசமான அளவிலான பங்களிப்பை வழங்கியிருந்தன. ஆனால், ‘அறகலய‘ அந்த நிலைமையை தலைகீழாக மாற்றியமைத்திருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது.
இறுதியாக, கோல்பேஸ் போராட்டக் களம் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு விடுக்கும் செய்தி என்ன?
‘இனிமேல் இலங்கையில் இன அல்லது மத லேபிள்களை ஒட்டிக் கொண்ட அரசியல் கட்சிகள் இருந்து வரக் கூடாது‘ என்ற கோஷமும், ‘அரசியலிலிருந்து மதத்தைத் தூரப்படுத்தி, விலக்கி வைக்க வேண்டும்‘ என்ற கோஷமும் ‘அறகலய‘ நெடுகிலும் வலுவாக ஒலித்து வந்ததை பார்த்தோம். அது தொடர்பாக சிங்கள மக்களுக்கு மத்தியில் பரவலான ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது. பொதுபல சேனா போன்ற தீவிரவாத இயக்கங்கள் முழு நாட்டிற்கும் ஒரு சாபக்கேடாக இருந்து வருகின்றன என்ற விதத்திலும் அவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் (தமிழ்நாட்டைப் போலவே) மதம் ஒரு முதன்மையான பாத்திரத்தை வகித்து வரவில்லை. ஆனால், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலை வேறு. கிழக்கிலும், வன்னியிலும் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் கணிசமான அளவிலான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் SLMC மற்றும் ACMC போன்ற கட்சிகள் இந்தப் பின்னணியில் ஒரு புதிய சவாலை எதிர்கொண்டு வருகின்றன. தென்னிலங்கை அரசியலில் எழுச்சி கண்டு வரும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ற விதத்தில் அனுசரித்துச் சென்று, இன, மத லேபிள்களைக் களைந்து, தேசிய நீரோட்டத்துடன் எவ்வாறு சுமுகமாக இணைந்து கொள்ள முடியும் என்பது குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை அக்கட்சிகளுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.
அது தவிர, (இயக்கங்களின் அடிப்படையில் மிக மோசமான விதத்தில் பிளவுண்டு போயிருக்கும்) ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் சமூகமும் முன்னுரிமை அடிப்படையில் கவனத்திலெடுத்து, உடனடியாக கையாள வேண்டிய ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக மத்ரசாக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் காதி நீதிமன்றங்கள் தொடர்பான சீர்திருத்தங்கள் போன்ற (ஏற்கனவே சிங்கள மதத் தீவிரவாதிகள் கையிலெடுத்திருக்கும்) விவகாரங்கள் தொடர்பாக ஒரு கருத்தொற்றுமை உருவாக்கப்பட வேண்டும். அது ஓர் இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை.
எனவே, அதற்கென முஸ்லிம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், நிதானமாக சிந்திக்கக் கூடிய புதிய தலைமுறை இளைஞர்களும் (கோல்பேஸ் ‘அறகலயவுக்கு‘ இணையான விதத்திலான) ஓர் ‘அறகலயவை‘ முஸ்லிம் சமூகத்துக்குள் முன்னெடுக்க வேண்டிய தருணம் இப்பொழுது வந்திருக்கின்றது.
அடுத்து வரவிருக்கும் தேர்தல்களின் போது இரு பிரதான கட்சிகளும், (மூன்றாவது அணியான) JVP யும் முன்வைக்கப் போகும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எவ்வாறு இருக்கப் போகின்றன?
“அனைவரையும் அரவணைத்துச் செல்லும், பொருளாதார வலிமை மிக்க, சுபீட்சமான ஓர் இலங்கை” (An Inclusive, Economically Viable, Prosperous Sri Lanka) என்ற வாசகமே எதிர்கால தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளும் மக்கள் முன்னால் வைக்கும் சுலோகமாக இருந்து வருதல் வேண்டும்.
துரித பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் கவர்ந்திழுப்பதற்கான வழிமுறைகள், (அடுத்து வரும் ஐந்து வருட காலப் பிரிவில் அரச துறையில் எத்தகைய விரிவாக்கமும் சாத்தியமில்லாத நிலையில்) தனியார் துறையில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை என்பவற்றுக்கே அநேகமாக எல்லா கட்சிகளும் முன்னுரிமை வழங்க வேண்டியிருக்கும்.
எந்த ஒரு கட்சியும் இனவாத, மதவாத அஜென்டாக்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு சூழல் அநேகமாக நிலவி வர மாட்டாது என்றே தோன்றுகிறது.
”அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சமூகம்” (Inclusive Society) என்ற மிக முக்கியமான வார்த்தையை வாய் தவறியும் கூட உச்சரிக்க மறுத்த, இலங்கை எதிர்கொண்டு வரும் பூகோள – அரசியல் யதார்த்தங்களை உதாசீனம் செய்த கோட்டாபய ராஜபக்ச, சர்வதேச ரீதியில் கைவிடப்பட்டிருக்கும், கொந்தளிப்புக்கள் சூழ்ந்த தேசமொன்றை இறுதியில் தனது ‘Legacy‘ ஆக விட்டுச் செல்லவிருக்கிறார்.
அடுத்து வரும் வருடங்களில் இலங்கையின் ஆட்சித் தலைவர்களாக வருவதற்கு கனவு கண்டு கொண்டிருக்கும் (சம்பிக ரணவக்கவையும் உள்ளிட்ட) அனைவரும் கோட்டாபய ராஜபக்சவின் பரிதாபகரமான வீழ்ச்சியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான படிப்பினை அதுவாகவே இருந்து வரும்.-Vidivelli