கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கடந்த வாரக் கட்டுரை ரணில் விக்கிரமசிங்ஹ சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராய் வந்த பின்னணியை சுருக்கமாக விளக்கியது. அவருடைய நுழைவுக்கு வெளிநாட்டு சக்திகளும் அதிலும் குறிப்பாக இந்தியா பாடுபட்டது என்பதும் இப்போது தெரியவருகிறது. ஆனால் இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது ரணில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிறுவனத்தின் ஒரு சிப்பந்தியாகவே சில குறிப்பிட்ட பணிகளை மட்டும் செய்வதற்காக பிரதமர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மையெனத் தெரிகிறது. ஆனால் அவரோ அந்தப் பணிகளை நிறைவேற்றுவதுடன் அதற்கும் அப்பால் ஒரு படியேறி 21 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்ற ஒரு புதிய ரகளையை தோற்றுவித்துள்ளார். இந்த ரகளை அந்த நிறுவனத்தின் மேலிடத்துக்கு ஒரு தலையிடியை கொடுத்துள்ளது. ஆகையினால் அவர் எத்தனை நாட்களுக்கு இன்னும் அந்தப் பதவியில் இருப்பார் என்ற ஒரு சந்தேகம் எழுகின்றது. அவற்றைப்பற்றியே இக்கட்டுரை சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றது.
ரணிலுக்குக் கொடுக்கப்பட்ட பணி
மகிந்த ராஜபக்ச பிரதமராக இருக்கையில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் யாவரும் அறிந்தவையே. ஆனால் அவற்றைத் தீர்ப்பதற்காக சில ஆலோசனைகளை எதிர் அணியிலிருந்துகொண்டு முன்வைத்த நாடாளுமன்றப் பிரதிநிதிகளுள் ரணில் விக்கிரமசிங்ஹ முதன்மையானவர் என்பதை மறுக்க முடியாது. சர்வதேச நாணய நிதியின் உதவியை விரைவில் நாட வேண்டும், சீனேக நாடுகளின் ஒரு கூட்டணி ஒன்றுடன் தொடர்புகொண்டு டொலர் நாணயத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், அரசாங்கத்தின் செலவினங்களை குறைக்க வேண்டும், அநாவசியமான வரிச்சலுகைகளை நீக்க வேண்டும், வரி வசூலிப்பை அதிகரிக்க வேண்டும் ஆகிய யோசனைகளையும் இன்னும் பல பொருளாதாரம் சம்பந்தமான சிபார்சுகளையும் முன்வைத்து, அதேவேளை, புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வாதாடினார். ஆகவே பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்குப் பொருத்தமானவர் அவரே என்ற எண்ணம் ஜனாதிபதியின் உள்ளத்தில் படிப்படியாக வளரலாயிற்று. அதுவேதான் ராஜபக்சாக்களை ஆட்சியில் அமரவைத்த அந்த நிறுவனத்தின் காப்பாளர்களின் கருத்துமாக இருந்தது. இந்தக் கருத்து ஒற்றுமையே மகிந்தவின் ராஜினாமாவால் ஏற்பட்ட இடைவெளியை ரணிலைக் கொண்டு நிரப்பத் தூண்டிற்று. ஆகவே ரணிலுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே பணி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே.
அறப்போராளிகளின் கோரிக்கை
ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே வளர்ந்துவந்த அறப்போராட்டம் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கு அதன் அடிப்படை அமைப்பில் மாற்றம் வேண்டும் எனவும் அந்த அடிப்படை மாற்றம் அரசியல் அமைப்பையும் அதன் அடித்தளமாய் அமைந்துள்ள தத்துவ அமைப்பையும் கொண்டது. ஆதலால், அவைகளும் மாறவேண்டும் எனக் கோரினர். அந்தத் தத்துவம் எது?
கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டின் அரசியலை இயக்கிவந்த ஒரு கொள்கை சிங்கள பௌத்த பேரினவாதம். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருந்து ஜனநாயகத்தின் சாறினைப் பிழிந்தெறிந்துவிட்டு அதன் சக்கையை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டின் அரசாங்கங்களை நிர்ணயித்த ஒரே தத்துவம் இந்தப் பேரினவாதம். அதன் முக்கிய நோக்கங்களாக, இலங்கை சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, ஏனைய இனங்களெல்லாம் சிங்கள பௌத்த நாட்டின் குத்தகைக் குடிகளே, சிங்கள பௌத்தமே ஒரே நாடு- ஒரே சட்டம் -ஒரே மொழி -ஒரே மதம் என்றவாறு நாட்டை ஆளும், சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆளும் அரசே ஜனநாயக அரசு என்பனவாக அமைந்தன. இந்தக் கொள்கையும் அதன் அரசியல் பொருளாதார நடவடிக்கைகளும் சிறுபான்மை இனங்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை. அதன் விளைவுகளே 1956 இலிருந்து இற்றைவரை நடந்து முடிந்த இனக்கலவரங்களும் உள்நாட்டுப் போரும்.
இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கும் இழப்புகளுக்கும் அந்தக் கலவரங்களும் போரும் முக்கிய காரணங்கள் என்பதை சிங்கள பௌத்த இனவாத எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து மூடி மறைத்தனர். ஒவ்வொரு முறையும் பொருளாதார கஷ்டங்கள் ஏற்பட்டபோது அந்தப் பண்டிதர்கள் அக்கஷ்டங்களின் உடனடிக் காரணங்களை மட்டும் ஆராய்ந்தார்களே ஒழிய அவற்றுக்கான அடிப்படைக்காரணத்தை மூடியே மறைத்தனர். இன்றுகூட எத்தனை ஆய்வாளர்கள் அல்லது பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பௌத்த பேரினவாதத்தின் பொருளாதார அசிங்கங்களை அம்பலப்படுத்தி உள்ளனர்? சிங்கள பௌத்தம் என்ற ஒரு முகமூடியை அணிந்துகொண்டு நாட்டையே சூறையாடிவர்களுள் ராஜபக்ச ஆட்சியினர் முதன்மையானவர்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது. இன்று இலங்கையின் பொருளாதாரம் வங்குறோத்து அடைவதற்கு அவர்களது அலிபாபா ஆட்சியே காரணம் என்பதை மறுப்பவர் யாரோ?
இறுதியாக, ஏழு தசாப்தங்களின் பின்னர் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அசிங்கங்களையும் அவை ஏற்படுத்திய நஷ்டங்களையும் இன்றைய சிங்கள பௌத்த இளைஞர் சமுதாயம் உணர்ந்து விட்டதையே காலிமுகத்திடலில் ஆரம்பித்த அறப்போராட்டம் தெளிவுபடுத்துகிறது. எல்ேலாரையும் சிலகாலம் ஏமாற்றலாம், சிலரை எல்லாக் காலங்களும் ஏமாற்றலாம், ஆனால் எல்லாரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதையே இந்த இளைஞர் சமுதாயத்தின் விழிப்பு எடுத்துக் காட்டுகிறது. இது இலங்கையின் வரலாற்றில் ஒரு ஆரோக்கியமான திருப்பு முனை. இந்தச் சமுதாயத்தை வரலாறு பாராட்டப்போவது நிச்சயம். “கோத்தாவே போ”, “225 வேண்டாம்” என்பவையெல்லாம் அந்த சமுதாயம் கோரும் அடிப்படை மாற்றத் தேவையின் வெளிப்பாடுகளே.
ரணிலின் ரகளை
இளைஞர்களின் கோரிக்கைகளின் தாற்பரியத்தை ரணில் நன்கறிவார். அது ஜனாதிபதிக்கும் தெரியாமலில்லை. ஏனெனில் இவர்கள் இருவரும் ஓரளவுக்காவது உலக மாற்றங்களை உணர்ந்துள்ளனர். இன்றைய இளந் தலைமுறையினர் அவர்களின் பெற்றோர்கள் இளையோராய் இருந்த நிலைமையிலிருந்து முற்றாக வேறுபட்டவர்கள். உதாரணமாக, தங்களது கையடக்கத் தொலைபேசியின் ஒரு பொத்தானை அமுக்குவதன்மூலம் உலகையே ஒரு நொடியில் சுற்றிவந்து அங்கு நடைபெறும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் உணரும் வல்லமை படைத்தவர்கள் இன்றைய இளைஞர்கள். இவர்கள் காலாலே உலகை அளந்த சிவனைவிடவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பேன்.
புதிதாகப் பிரதமர் பதவி ஏற்ற ரணில் இளைஞர் சமுதாயத்தின் ஆதரவைப் பெறாமல் நீண்ட காலம் அப்பதவியில் இருக்க முடியாது என்பதையும் அறிவார். அறப்போராட்டத்தை அடக்க முனைந்ததாற்தானே மகிந்த பதவிதுறக்க வேண்டியதாயிற்று? ஆகவே அறப்போராட்டத்தை ஆதரிப்பதாக ரணில் ஒரு அறிக்கையை உடனே விடுத்தார். ஜனாதிபதியும் அதனை ஆமோதித்தார். அதனைச் செயலிற் காட்டுவதற்காகவே அரசியல் யாப்பில் 21ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி அந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்திடம் கையளிக்க ஒரு திட்டத்தை வகுத்தார். அது ஒரு மசோதாவாக இப்போது நாடாளுமன்றத்தின் விவாதத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே அவர் ஏற்படுத்தியுள்ள ரகளை. ஏன்?
“இது உமக்கு அவசியமில்லாதது”
சிங்கள பௌத்த பேராதிக்கர் காவலாளர்களால் ரணிலுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே பணி பொருளாதாரத்தை கட்டியெழுப்புதலே. அதனைப்பற்றியே அவர் நாடாளுமன்றத்தில் அதிகமதிகம் பிரஸ்தாபித்ததாலேதான் அவரை பிரதமராக நியமித்தனர். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியை நிறுவியதன் நோக்கமே சிங்கள பௌத்த ஆட்சியை எத்தருணத்திலும் பாதுகாப்பதற்காகவே. கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வென்றபின் சம்பிரதாயப்படி நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதிகளின் முன்னிலையில் தனது சத்தியப்பிரமாணத்தை எடுக்காமல் பௌத்த புனித தலமான ருவன்வெலிசாயவில் பௌத்த குருமாரின் முன்னிலையில் எடுத்ததும், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாக அவர் உறுதிமொழி வழங்கியதும், தனது வெற்றிக்கு முழுக்காரணம் பௌத்த சிங்கள மக்களின் ஆதரவே எனப் பகிரங்கமாகவே அவர் கூறியதும் தனக்கும் தன் பதவிக்குப் பலமாகவும் பௌத்த சிங்கள பேரினவாத அமைப்பு அமைந்துள்ளதென்பதை உறுதிப்படுத்தவும் அதுவே இந்த நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் என்பதை எடுத்துக்காட்டவுமே. ஆகவே அதிலே தலையிடுவதற்கு ரணிலுக்கு பிரதமர் என்ற வகையில் அதிகாரம் இருந்தாலும் அதற்காக அவர் நியமிக்கப்படவில்லை. எனவேதான் அவர் கொண்டுவந்துள்ள மசோதாவுக்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை முறியடிப்பதற்கான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியும் அவர் பதவி விலகப் போவதில்லை என்றும் ஆனால் மீண்டும் ஒரு முறை அப்பதவிக்கு வேட்பாளராக நிற்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடாது என்ற ஒரு சரத்தும் அந்த மசோதாவில் உண்டு. இது ராஜபக்ச குடும்பத்தினருள் சிலரையும் இன்னும் சில மொட்டுக்கட்சிப் பிரதிநிதிகளையும் ஏன் ஜனாதிபதியையும்கூட பாதிக்கலாம். எனவே ஒரு புதிய ரகளையை ரணில் தோற்றுவித்துள்ளார். இது அவருக்கு அவசியமில்லாத வேலை என்பதே அக்கட்சியாளர்களின் நிலைப்பாடு. இதில் யார் வெற்றியடைவார் என்பதை எதிர்வரும் வாரங்கள் தீர்மானிக்கும்.
அறப்போரின் நிலை
அறப்போராட்டம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற ஒரு கவலை இப்போது எழுந்துள்ளதை உணர முடிகிறது. ஆனால் அதனை முன்னின்று நடத்திச்செல்ல ஒரு சிறந்த தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. இதுவரை அறப்போராளிகள் எந்த அரசியல் கட்சியின் சார்பிலும் போராடவில்லை. எனினும் சில அரசியல் தலைமைகள் அத்தலைமுறையினருடன் பரிச்சயமுள்ளவர்கள். அவர்களின் அபிலாஷைகளையும் அறிந்தவர்கள். ஆதலால் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அப்போராட்டத்துக்கு ஒரு புதிய மெருகு ஊட்ட வேண்டியுள்ளது. சிறுபான்மை இனங்களும் அதற்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். இருந்தபோதும் அந்தப் போராட்டத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட தற்போதைய இனவாத அமைப்புகள் உறுதிபூண்டுள்ளன. மே மாதம் முடக்கிவிடப்பட்ட வன்செயல்கள் தோல்வி அடைந்தாலும் அவர்களின் அடுத்த முயற்சி மிகவும் வலுவானதாக இருக்கும். அதற்கு அரசின் ஆதரவும் இருக்கும் என நம்ப இடமுண்டு. ஆனால் பொருளாதாரக் கஷ்டங்கள் எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமாகும் நிலையில் மக்களின் ஆதரவு போராளிகளுக்குப் பெருகும் என்பது நிச்சயம். ரணிலின் முயற்சிகளும் அதற்கு வழிவகுக்கும். – Vidivelli