ஆஇஷ் உஸ்மான்
இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இலங்கை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பிற நாடுகளின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இலங்கைக்கு டொலர் இன்மையால் இறக்குமதி தடைப்பட்டுள்ளதுடன் எரிபொருள் பெற்றுக்கொள்வதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. எனவே, டொலரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் பல்வேறு மட்டத்திலும் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கு டொலரை பெற்றுக்கொள்வதற்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீதின் உதவியை அரசாங்கம் நாடியிருப்பதாக அறியமுடிகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிக்குப் பொறுப்பாக கடந்த மே மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முஸ்லிம் நாடுகளுடன் தொடர்பை பேணும், அந்நாடுகளின் செல்வாக்கை பெற்ற முஸ்லிம் தலைவர்கள் இந்நாட்டில் இருக்கின்ற நிலையில் பிறிதொரு நாட்டின் முன்னாள் தலைவரொருவர் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கின்றமையானது இராஜதந்திர ரீதியில் சரியானதாக இருந்தாலும் பன்மைத்துவ நாடு என்ற வகையில் நாம் தோல்வியையே கண்டிருக்கின்றோம். குறிப்பாக கோத்தாபய அரசாங்கத்தின் கொள்கை காரணமாக இந்நாட்டு முஸ்லிம்கள் அவர்களுடன் இணைந்து பயணிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அத்தோடு, இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு இல்லை என்பது புலனாகிறது. அதுமாத்திரமன்றி முஸ்லிம் நாடுகளுடன் தொடர்பைப் பேணக்கூடிய தலைமைகளை இந்த அரசாங்கம் அணுகத் தவறியுள்ளமை மற்றும் அவர்களின் ஒத்தாசையை பெற்றுக்கொள்ள முயற்சிக்காமை வருத்தமளிக்கிறது. இது அரசாங்கத்தின் பிற்போக்குத் தனத்தையே காட்டுகிறது.
இனி விடயத்திற்கு வருவோம், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீட் அஹமட் தன்னிடம் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருக்கும் கருத்துகள் இன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட கலாநிதி ஹர்ஷ, “கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹம்மட் நஷீடை சந்திக்கக் கிடைத்தது. ‘அரசாங்கத்தினால் எனக்கொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள நிலைவரத்தை அவசர நிலைமையாகக் கருத்திற் கொண்டு டொலரையும் எரிபொருளையும் பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.’ அதற்கமைய சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானிடம் தான் தொலைபேசியில் உரையாடி இலங்கைக்கு உதவுமாறு கோரியதாகத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பின் சல்மான் , ‘குறைந்தபட்சம் அவர்களிடம் ஸ்திரமானதொரு திட்டம் காணப்படுகிறதா?’ என்று தன்னிடம் கேள்வியெழுப்பியதாகவும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்” என்று பொதுவெளியில் கூறியுள்ளார்.
‘இலங்கை எனது நாடு அல்ல. நானும் ஒரு உதவியாகவே இதனை செய்கின்றேன்.’ என்று சவூதி இளவரசருக்கு பதிலளித்துள்ளார் அஹமட் நஷீட்.
மேலும், “அதே போன்று ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேசிய போது , ‘இலங்கையில் விற்பதற்கு ஏதேனுமிருந்தால் அந்த பட்டியலை அனுப்புங்கள். அதன் பின்னர் ஆராயலாம்’ என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் என்னிடம் கூறினார்”. என்றும் ஹர்ஷ டி சில்வா எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்த விடயங்களையே நான் இப்போது குறிப்பிடுகின்றேன். குறைந்தபட்சம் சவூதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எமது அரசாங்கத்தில் எவரும் இல்லை. வெளிநாடுகளிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் ஒப்பந்தத்தை வேறொரு நாட்டு தலைவரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. உலகில் எந்த நாடு எமக்கு உதவத் தயாராக உள்ளது? எதிர்பாராத விதமாக இந்தியாவும் எமக்கு உதவ மறுத்தால் என்ன செய்வது? என்று கேள்வியெழுப்பியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.
இது இவ்வாறிருக்க, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ள கருத்தை மறுத்திருக்கும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், பல நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மொஹமட் நஷீட், ‘ஹர்ஷ டி சில்வா எனது நீண்டகால நண்பர் என்பதுடன், நாங்கள் அடிக்கடி சந்திப்போம். நான் அவருடன் இருப்பதை எப்போதும் விரும்புவேன். இருப்பினும் இந்தச் செய்தி சரியானதல்ல. குறிப்பிடத்தக்க பல நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பதுடன், அவற்றின் உதவிகள் விரைவில் வந்து சேரவிருக்கின்றது’ என்று தெரிவித்துள்ளார் நஷீட் அஹமட்.
‘என் நண்பர் மொஹம்மட் நஷீட்டுடன் சில வாரங்களுக்கு முன்பு பேசிய விடயகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். எவ்வாறாயினும், பல நாடுகள் இலங்கைக்கு உதவ ஆர்வமாக உள்ளன என அவர் இப்போது நம்பிக்கையுடன் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீடின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ளார்.
எது எவ்வாறிருப்பினும் கோத்தாபய அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளே நாடு பாதாளத்துக்குச் செல்ல காரணமாயிற்று. குறிப்பாக, ஆட்சிபீடம் ஏறுவதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்புவதற்காக ராஜபக்ஷாக்கள் கடும்போக்குவாதிகளை போஷித்து அவர்கள் மூலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். அத்தோடு, கோத்தா அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய பின்னர் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான செயற்படுகளை மத்திய கிழக்கு வளைகுடா நாடுகள் அறிந்திருந்தன. குறிப்பாக ஜனாஸா எரிப்பு விடயத்தில் வளைகுடா நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தன. அத்தோடு, அவர்களின் கோரிக்கைகளை கோத்தா அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இதனால், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்திருந்தன.
மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை வலுப்பெறச் செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காமையே இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது திண்ணம்.- Vidivelli