நேபாள முஸ்லிம்களின் வாழ்வியல்!
காத்மண்டுவிலிருந்து றிப்தி அலி
தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சுமார் இரண்டு மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆரம்ப காலத்தில் காஷ்மீரிலிருந்தே நேபாளத்திற்கு முஸ்லிம்கள் வந்ததாக அந்நாட்டு வரலாறுகள் கூறுகின்றன.
பின்னர் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறியுள்ளனர். சுமார் 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்டுள்ள நேபாள முஸ்லிம்கள், அந்நாட்டு சனத்தொகையில் ஐந்து சதவீதமாகக் காணப்படுகின்றனர்.
நேபாளத்திலுள்ள ஏழு மாகாணங்களிலும் அதன் கீழுள்ள 77 மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நேபாளத்தின் தென் பகுதியிலேயே அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்கள் – நேபாளி, ஹிந்தி, உருது, நேவாரி, போஜ்புரி போன்ற பல மொழிகளைப் பேசுகின்றனர்.
நேபாளத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினத்தர்களாக வாழ்ந்தாலும் எந்தவித பிரச்சினைகளுமின்றியே வாழ்வதாக அங்குள்ள முஸ்லிம்களை சந்தித்த போது தெரிவித்தனர்.
விரும்பிய மதத்தினைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் காணப்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கையினைப் போன்று நேபாள முஸ்லிம்களும் தெஹீத், தப்லீக், சுன்னத் வல் ஜமாஅத் போன்ற பல கொள்கைகளை பின்பற்றுகின்றனர்.
இதனால், நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களிலும் வெவ்வேறு கொள்கைகள் பின்பற்றப்படுவதனை அவதானிக்க முடிந்தது. இதில் ஒரு பள்ளிவாசலை ‘காஷ்மீரி’பள்ளிவாசல் என்றும் மற்றையதை ‘நேபாளி’ பள்ளிவாசலென்றும் அழைக்கின்றனர்.
அது மாத்திரமல்லாமல், இலங்கையில் காணப்படுகின்ற காதி நீதிமன்றம், வக்பு சபை, ஜம்இய்யதுல் உலமா, பிறை தீர்மானித்தல் மற்றும் ஸகாத் நிதியம் போன்ற அனைத்து செயற்பாடுகளும் எந்தவித தடையுமின்றி நேபாளத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
நேபாளத்திலுள்ள பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இஸ்லாமிய பாடசாலைகள் செயற்படுகின்றன. இப்பாடசாலைகளில் மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் சமாந்தரமாக போதிக்கப்படுவதாக காத்மண்டுவிலுள்ள பள்ளிவாசலொன்றின் நிர்வாக சபை உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
எனினும், இந்தப் பாடசாலைகளில் தரம் எட்டு வரை மாத்திரமே கற்றல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அதன் பின்னர் அரசாங்க பாடசாலைகளில் இம்மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.
காத்மண்டு நகரிலுள்ள நேபாளி பள்ளிவாசலினால் நிர்வகிக்கப்படும் பாடசாலையில் 130 மாணவர்களும் 18 ஆசிரியர்களும் உள்ளனர். இப்பாடசாலையில் முஸ்லிமல்லாத ஆசிரியர்களும் கற்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவின் மேற்கு, தெற்கு, கிழக்கு எல்லைகள் நேபாளத்திற்கு அண்மையிலேயே காணப்படுகின்றன. நேபாளம் மலைகளினால் சூழப்பட்ட நாடாக காணப்பட்டாலும் இந்தியாவுடனான தரை வழி போக்குவரத்தினைக் கொண்டுள்ளது.
இதனால், உத்தர பிரதேஷ், பிகார்,மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து தரை மார்க்கமாக நேபாளத்திற்குள் நுழைய முடியும்.
அது மாத்திரமல்லாமல் இந்தியர்கள் எந்தவித விசாவுமின்றி நேபாளத்திற்குள் நுழைய முடியும். இதனால், இந்தியாவிலுள்ள பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களுக்கு நிதி சேகரிப்பதற்காக புனித ரமழான் மாதத்தில் பல இந்திய முஸ்லிம்கள் நேபாளம் வந்திருந்ததை காண முடிந்தது.
நேபாளத்தின் எல்லைப் பிரதேசங்களில் வாழ்கின்ற இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாதத்தில் நேபாளம் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபடுவது வழமையான செயற்படாகும் என நேபாள முஸ்லிம்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, நேபாளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்வதனால் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவது மிகவும் அரிதாகும். அது மாத்திரமல்லாமல், மீன் வகைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதனால் அதற்கும் அதிக கிராக்கி காணப்பட்டது.
இதற்கு மத்தியில், நேபாள உணவகங்களில் ஹலால் உணவினைப் பெற்றுக்கொள்வது என்பது சிரமமான காரியமாகும். “ஹலால் உணவு உண்டு” என உணவகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தாலும் அதனை நம்பி அந்த உணவகத்தில் உண்ண வேண்டாம் என நேபாளத்தில் நான் சந்தித்த ஒரு முஸ்லிம் தெரிவித்தார். அந்த விளம்பரப்படுத்தல் ஒரு சந்தைப்படுத்தல் யுக்தி எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையினைப் போன்று நேபாளமும் இராஜதந்திர ரீதியாக இந்தியாவுடன் மிக நெருங்கிச் செயற்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் இந்தியாவின் ஆதிக்கம் அங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேபாளத்திற்கு தேவையான எரிபொருள், குழாய்களின் ஊடாக இந்தியாவிலிருந்தே கொண்டு வரப்படுகின்றது.
இலங்கையில் இந்தியன் ஒயில் கம்பனி செயற்படுவது போன்று நேபாளத்திலும் இந்தியன் ஒயில் கம்பனி காணப்படுகின்றது. அத்துடன், நேபாளத்திற்கு தேவையான மின்சாரத்தில் 50 சதவீதமானவை இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நேபாளத்தின் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளிலேயே தொழில் புரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் பரவலிற்கு பின்னர் அங்கு தொழில் இழந்தமையினால் நாடு திரும்பியுள்ளனர்.
இதனால், இலங்கையினைப் போன்று நேபாளத்திலும் அமெரிக்க டொலர் சேமிப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையினைப் போன்ற பொருளாதார நெருக்கடி அங்கும் காணப்படுகின்றது.
“இலங்கையினைப் போன்ற நிலையொன்று நேபாளத்தில் ஏற்படுமா?” என அந்நாட்டு நிதி அமைச்சரிடம் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் அண்மையில் வினவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமல்லாமல், இலங்கையினைப் போன்று வாகனம் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதிக்கும் நேபாளத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினை ஒத்த நெருக்கடியொன்றினை நேபாளமும் எதிர்நோக்கியுள்ளதை இந்த விஜயத்தின் போது அவதானிக்க முடிந்தது.- Vidivelli