இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர்சர்மா, நபிகளாரை அவமதிக்கும் வகையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நூபுர் சர்மாவின் கருத்து தொடர்பில் முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, நூபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இந்நிலையில் நூபுர் சர்மாவை இடைநிறுத்தம் செய்த பாஜக, அவரது கருத்தை ஆதரித்துப் பேசிய கட்சியின் முக்கியஸ்தர் நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டும் நீக்கியது. கட்சி பொறுப்பாளர்கள், பொதுவில் கருத்துக்களை தெரிவிக்கும் போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் பாஜக அறிவுறுத்தியது. நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது டெல்லி பொலிஸாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் உத்தர பிரதேசம் சஹாரன்பூரில் உள்ள பள்ளிவாசல்களிலும் தொழுகைக்குப் பின் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தர பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமும் வன்முறையும்
உத்தர பிரதேசத்தில் கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளைத் தொடர்ந்து முஸ்லிம்களை இலக்கு வைத்த கைதுகள் மற்றும் அவர்களது வீடுகளை புல்டோசர்கள் கொண்டு தகர்க்கின்ற நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளன.
உத்தர பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃபிரோஸாபாத்தில் 13 பேர், அலிகரில் 3 பேர், ஹத்ராஸில் 50 பேர், மொராதாபாத்தில் 27 பேர், அம்பேத்கர் நகரில் 28 பேர், சஹாரன்பூரில் 64 பேர், ஜலோனில் 2 பேர், பிரயாக்ராஜில் 68 பேர் இதில் அடங்குவர்.
புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட
ஆர்ப்பாட்டக்காரர்களின் வீடுகள்
ஜூன் 3 சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, கான்பூரில் உள்ள மேம்பாட்டு ஆணையம் முகம்மது இஷ்தியாக் என்ற நபரின் கட்டடத்தின் மீது புல்டோசரை ஏற்ற உத்தரவிட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர் மூலம் அவரது கட்டிடம் இடித்தழிக்கப்பட்டது.
சஹரான்பூரிலும் புல்டோசர்
சஹரான்பூரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 64 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் நிர்வாகம் கூறி வருகிறது.
இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முஸம்மில் மற்றும் அப்துல் வக்கர் ஆகிய இருவரின் வீடுகளும்,மாநகரசபையால் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அஃப்ரீன் பாத்திமா வீடும் இடித்தழிப்பு
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் ஒன்றிய தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டையும் மாநில அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகம்மது ‘வெல்பயார் பார்ட்டி ஒப் இந்தியா’ என்ற கட்சியின் தலைவராவார்.
முகம்மது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துகளைக் கண்டித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு சதித்திட்டம் தீட்டியதாக ஜாவேத் மீது அரசு குற்றம்சாட்டுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜாவேதுக்கு, அவரது மகள் அஃப்ரீன் ஆலோசனை வழங்கியதாகவும் பொலிஸ் குற்றம்சாட்டுகிறது.
இந்தப் பின்னணியில் பிரயாக்ராஜ் மாநகராட்சி, அஃப்ரீன் பாத்திமாவுக்கு சனிக்கிழமை இரவு ஒரு நோட்டீசை அனுப்பியது. அதில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டை இடிக்க இருப்பதாகவும், எனவே, வீட்டை காலி செய்யும்படியும் அதில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி மறுதினம் புல்டோசர் கொண்டு அவரது வீடு முழுவதும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. உ.பி. அரசின் இந்த செயல், ‘சட்ட விரோதம்’ என்றும், ‘புல்டோசர் அரசியல் என்றும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
வெல்பயார் பார்ட்டி ஒப் இந்தியாவின் மாணவர் பிரிவான ஃப்ராட்டர்னிட்டி மூவ்மென்ட்டின் (சகோதரத்துவ இயக்கம்) தேசிய செயலாளராக இருக்கிறார் அஃப்ரீன் பாத்திமா.
இவர், 2021ஆம் ஆண்டு டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். படிக்கும்போது பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.
அதற்கு முன்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்லூரியில் படித்தபோது கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார்.
கர்நாடகாவில் எழுந்த ஹிஜாப் சர்ச்சை, புல்லிபாய் செயலி மூலம் முஸ்லிம் பெண்களை இணையத்தில் ஏலம் விட்ட சல்லி டீல் சர்ச்சை, குடியுரிமைத் திருத்தச்சட்டம் ஆகிய விவகாரங்களின் போது போராட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டவர் அஃப்ரீன் பாத்திமா. அவரும் அவரது சகோதரி சுமையாவும் சேர்ந்து பெண்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்கினர்.
கடும் கண்டனங்கள்
அஃப்ரீன் மற்றும் அவரது தந்தை ஜாவேத்தின் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உ.பி. அரசின் செயலை பலரும் கண்டித்து வருகிறார்கள்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தால் மனோஜ் ஜா இது பற்றிப் பேசும்போது,“இது சட்ட நடைமுறைகளை இடித்துத் தள்ளுவது போன்றது” என்று குறிப்பிட்டார். நிரூபிக்கப்படாத குற்றங்களுக்காக, ‘கும்பல் தண்டனை” என்ற முறையில் இப்படி வீடுகளை இடிப்பதற்கான ஊக்கத்தை ஹிட்லரின் நாஜி மாதிரியில் இருந்து எடுத்துக்கொண்டுள்ளனர். ஒரு தரப்பு இதனை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. புல்டோசர்கள் என்பவை அநீதியின் சின்னமாகியுள்ளன. இதனை தொடர அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் உத்தர பிரதேச அரசின் இந்த பகிரங்கமான விதிமீறலை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத்துறையே பொலிசாகவும், வழக்குரைஞராகவும், நீதிபதியாகவும் இருப்பதை அனுமதிக்க முடியாது என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் திரிணமூல் தேசியத் துணைத் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் உத்தரப் பிரதேச அரசின் செயல் அரசியல் அமைப்பை கேலிக்குள்ளாக்குவதால் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்குமாறு முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை முன் அறிவிப்பின்றி இடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தேசத்தின் மனச்சாட்சியை உலுக்குகின்றன. இது நீதிக்குப் புறம்பான தண்டனை என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிக்கைகள் போராடுவோர்களை சித்திரவதை செய்யலாம் என்ற தைரியத்தை காவல்துறைக்கு கொடுக்கிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பி. சுதர்ஷன் ரெட்டி, பி. கோபால கங்கா, ஏ.கே. கங்குலி உட்பட உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
முகம்மது ஜாவேதின் மகள் சுமையா பேட்டி
பிரயாக்ராஜில், தன்னார்வலர் முகமது ஜாவேதின் வீட்டின் மீது ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு அதிகார அமைப்பு புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டது. ஜூன் 10 நடந்த வன்முறைக்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நிர்வாகம் கூறுகிறது. அங்கு நடந்த விடயங்கள் குறித்து, அவருடைய மகள் சுமையா பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாங்கள் இந்த வீட்டில் 20 ஆண்டுகளாக வாழ்கிறோம். நான் இங்குதான் பிறந்தேன். நான் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு இந்த வீட்டைக் கட்டினார்கள். என் தந்தையை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள் என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். இதில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. நீங்கள் அவருடைய கடைசி ஃபேஸ்புக் பதிவை பார்த்தால், அதில் அவர் சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தியிருப்பார். அமைதி, பாதுகாப்பு குறித்துப் பேசும் ஒரு மனிதர், எப்போதும் நிர்வாகத்தோடு ஒத்துழைக்கும் ஒரு மனிதர், திடீரென்று இரவோடு இரவாக எப்படி வன்முறையின் முக்கிய மூளையாக மாறமுடியும்?
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் கூட்டத்தைச் சேர்க்க முயலவில்லை.
ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம் என்று தான் எனது தந்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில், நிர்வாகத்திடம் மனு கொடுங்கள், அரசியல் சாசன அடிப்படையில் எதிர்ப்பு தெரிவியுங்கள், இந்த மாதிரி சாலையில் ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை என்றுதான் அவர் எழுதியுள்ளார்.
தொழுகைக்குப் பிறகு பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லி, சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எங்கள் வீட்டுக்கு முதலில் சுமார் 8:30 மணியளவில் காவல்துறை வந்தது. பேச வேண்டுமென்று கூறி தந்தையை அவர்கள் அழைத்துப் போனார்கள். அவரும் எந்த எதிர்ப்பும் காட்டாமல், அவர்களுடன் ஒத்துழைத்தார். நான்கு மணிநேரத்திற்குப் பிறகு 12:30 மணிக்கு மேல், என்னையும் என் உம்மாவையும் பேசுவதற்காக என்று கூறி அழைத்துச் சென்றார்கள்.
இரண்டு இரவுகள் என்னையும் உம்மாவையும் காவல் நிலைத்தில் தடுத்து வைத்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம் என்று பொலிஸார் வந்து எம்மை மிரட்டினார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை எங்களை உறவினர் வீட்டில் எங்களைக் கொண்டுபோய் விட்டார்கள். அதிலிருந்து சில மணிநேரம் கழித்து புல்டோசர் மூலம் எங்களுடைய வீட்டை இடித்தார்கள் என்றார்.
உத்தர பிரதேச அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த பாகுபாடு, முகம்மது நபிகளாரை அவமதிக்கும் கருத்துக்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் மத்தியில் எழுந்துள்ள இந்தியா மீதான அதிருப்தியை மேலும் உக்கிரமடையவே செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.- Vidivelli