அஷ்ஷைக் பளீல் (நளீமி)
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவைப் பெற்றுக்கொள்வதற்கான முற்சியாக விவசாயம் காணப்படுகிறது. அத்துடன் ஆடைக்குத் தேவையான பருத்தி, கட்டுமான பணிகளுக்கு தேவையான மரங்கள், மருத்துவப் பொருட்கள், வாசனை திரவியங்கள் என ஏராளமான விஷயங்களுக்கு விவசாயமே மூலாதாரம்.
பொருளாதார சுபீட்சத்தையும் தேசிய உற்பத்தி உயர்வையும் உணவில் சுயதேவைப் பூர்த்தியையும் எதிர்பார்க்கும் ஒரு சமூகம் விவசாயத்தில் கட்டாயமாக ஈடுபாடு காட்ட வேண்டும்.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விவசாயம் ஒரு பர்ளு கிஃபாயாவாகும். அத்துறையில் தேவையான எண்ணிக்கையினர் சம்பந்தப்பட்டு விவசாய உற்பத்திகளில் ஈடுபட்டு சமுதாயத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யாத போது சமுதாயத்தில் உள்ள அனைவரும் பாவிகளாவர்.
இஸ்லாமிய சட்டப் பகுதியில் நிலத்தை வாடகைக்கு விடுதல், மரங்களை வாடகைக்கு விடுதல் என்ற இரு பகுதிகளுடன் தொடர்பான சட்டங்கள் உள்ளன. உதாரணமாக ஸஹீஹுல் புகாரியில் வேளாண்மையும் நிலக் குத்தகையும், நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல் (முஸாக்காத்)ஆகிய இரு தலைப்புக்களிலும் பல ஹதீஸ்கள் முறையே 41,42 பாடங்களில் பதியப்பட்டுள்ளன. நபித்தோழர்களிற் சிலர் விவசாயிகளாகவும் வேறு சிலர் வியாபாரிகளாகவும் இருந்தார்கள்.
உலகில் வந்த முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் பல நபிமார்கள் விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக யூஸுஃப் (அலை) அவர்கள் மிகவும் பஞ்சத்தில் இருந்த எகிப்து நாட்டை முறையான விவசாய கட்டமைப்பின் மூலம் சீர்ப்படுத்தி, பொருளாதார ரீதியாக மிகப்பெரும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தார்கள்.
மனித வாழ்வு பூமியில் நிலைக்க வேண்டுமாயின் விவசாய மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்காக அந்த பூமியிலும் புவிமேற்பரப்பிலும் வளிமண்டலத்திலும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வளங்களை மனிதர்கள் உச்ச அளவில் பயன்படுத்துவது அவசியமாகும். இதற்கு இமாரத்துல் அர்ள்(பூமியை வளப்படுத்தல்) என்ற சொல்லை அல்லாஹ் குர்ஆனில்(61:11) பயன்படுத்தியுள்ளான்.
ஸாலிஹ்(அலை) அவர்கள் தனது சமூகத்தை நோக்கி “எனது சமூகமே நீங்கள் அல்லாஹ்வுக்கு இபாதத் செய்யுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் கிடையாது. அவன் தான் உங்களை பூமியிலிருந்து உருவாக்கினான். அதில் உங்களை வாழவைத்து, அதனை வளப்படுத்தும் படியும் கேட்டுக்கொண்டான்” என்று கூறினான். இங்கு வந்துள்ள ‘இஸ்தஃமரகும்’ என்ற சொற்பிரயோகம் நீங்கள் பலவிதமான கட்டடங்களை அமைப்பதிலும் விதைப்பது, நாட்டுவது போன்றவற்றிலும் ஈடுபடவேண்டும் என்று உங்களை பணித்திருக்கிறான் என இமாம்களான பகவீ, ஸஅதீ போன்றோர் விளக்கம் சொல்கிறார்கள். பூமியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்கும் விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் விரும்பியதை அறுவடை செய்வதற்கு அதன் பலன்களை பயன்படுத்துவதற்குமான வசதிகளை அல்லாஹ் செய்து கொடுத்திருப்பதாக இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.
பூமிக்குள் மறைந்துள்ள வளங்களை வெளிக் கொண்டு வருவதோடு புவி மேற்பரப்பில் உள்ளவற்றை இமாரத் பணிக்காக அவன் பயன்படுத்த வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளான்.
அல்குர்ஆனில் அல்லாஹ் விவசாயத்துடன் நேரடியாக சம்பந்தப்படும் கூறுகளான நிலங்கள், காற்று, மழை,ஆறுகள், மலைகள்,மகரந்த சேர்க்கை, நீர், பயிரிடல், முளைப்பித்தல், அறுவடை செய்தல் போன்றன பற்றியும் பழங்கள், தாவரங்கள் தோப்புக்கள், கீரை வகைகள் பற்றியும் பல நூற்றுக்கணக்கான இடங்களில் பிரஸ்தாபிக்கிறான். அவனது பேராற்றலுக்கான அடையாளங்களாகவும் மனிதர்களுக்கு வழங்கிய பாக்கியங்களாகவும் அவற்றை அவன் குறிப்பிடுகின்றான்.
80:24. எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
80:25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
80:26. பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
80:27. பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
80:28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
80:29. ஒலிவ் மரத்தையும், பேரீச்சையையும் –
80:30. அடர்ந்த தோட்டங்களையும்,
80:31. பழங்களையும், தீவனங்களையும்-
80:32 (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,(தரப்பட்டுள்ளன.)
23:18. மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
23:19. அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை, திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
23:20. இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
திராட்சை, அத்தி, ஈத்தம்பழம், போன்ற சுமார் 30க்கும் அதிகமான பழங்கள் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயம் தொடர்பாக அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் வந்துள்ள வசனங்களைப் பார்த்தால் அதன் சிறப்பு, உலகிலும் மறுமையிலும் கிடைக்கும் பலாபலன்கள் பற்றியெல்லாம் அவை பேசுகின்றன. இஸ்லாம் உடல் தேவைகளுக்கும் ஆத்மாவின் தேவைகளுக்கும் சமநிலை காண்பதன் அவசியத்தை அவற்றினூடாக உணரமுடிகிறது
விவசாயத்தில் மனிதனின் முயற்சி பற்றி பின்வரும் வசனம் கூறுகிறது:-
36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:35. அதன் பழவகைகளில் இருந்தும் அவர்களுடைய கைகள் செய்தவற்றில் இருந்தும் அவர்கள் உண்பதற்காக (இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறோம்) ஆகவே, அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
இங்கு வந்துள்ள ‘அவர்களது கைகள் செய்தவை’ என்ற சொற்றொடர் மனிதர்களது விவசாய உற்பத்தி முயற்சிகளை குறிக்கும். அது அவர்கள் தமது கைகளால் செய்யும் மரநடுகையாகும் என்பது இமாம் இப்னு அப்பாஸ், இமாம் தபரீ போன்றோரது கருத்தாகும்.
இவ்வசனத்தில் “அவர்கள் நன்றி செலுத்துவதில்லையா?” என்ற கேள்விக்கு வியாக்கியானம் கூறும் இமாம்கள் பிரபஞ்சத்தை சூழல் மாசடைதல் போன்ற அழிவு வேலைகளுக்கு பயன்படுத்தாமல் விவசாயம் போன்ற ஆக்க முயற்சிகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாகவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்ற கடமையை மனிதன் நிறைவேற்றியவனாவான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
67:15. அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழ வேண்டியிருக்கிறது.”
என்ற இந்த வசனத்திற்கு இமாம் குர்துபீ அவர்கள் தனதும் வேறு சிலரதும் வியாக்கியானங்களைத் தருகிறார்கள். அதில் பூமியை இவ்வாறு முரண்டு பிடிக்காத, கட்டுப்படக் கூடியதாக அல்லாஹ் அமைத்திருப்பதாகவும் பயிரிடுதல், வித்துக்களை நாட்டுதல், ஊற்றுக்களையும் ஆறுகளையும் ஓடச் செய்தல், கிணறுகளைத் தோண்டுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மனிதனுக்கு வசதி செய்து கொடுத்திருப்பதையே காட்டுகிறது என்ற விளக்கத்தையும் முன்வைக்கிறார்கள்.
விவசாயத்தை வலியுறுத்துகின்ற, போற்றிப் புகழ்கின்ற இதுபோன்ற வசனங்கள் அல்குர்ஆனில் வந்திருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்து இருக்க வேண்டும்.
ஹதீஸ்களில் விவசாயம் பற்றி
நபிகளார் (ஸல்) அவர்கள் விவசாயம் செய்வதன் முக்கியத்துவத்தை பல்வேறுபட்ட ஹதீஸ்களில் வலியுறுத்தியுள்ளார்கள்:-
“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டி அல்லது விதையை விதைத்து, விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” (நூற்கள்-:- புஹாரீ 2320, முஸ்லிம் 1553)
மேலும் ஒரு ஹதீஸில் “எந்தவொரு முஸ்லிமும் ஒரு மரத்தை நட்டினாலும் அதன் விளைச்சலில் இருந்து சாப்பிடப்பட்டால் அதுவும் அவருக்கு தர்மமாகும். அதிலிருந்து களவாடப்பாட்டாலும் அதுவும் அவருக்கு தர்மமாகும். காட்டு மிருகங்கள் அதிலிருந்து சாப்பிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாகும். பறவைகள் சாப்பிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாகும். அவரது பயிர்களில் ஏதாவது ஒன்றை ஒருவர் குறைத்துவிட்டாலும் அதுவும் அவருக்கு தர்மமாகும்.(ஸஹீஹ் முஸ்லிம்:1552)
எடுத்துக்காட்டாக, பேரீச்சம்பழ மரத்திலிருந்து ஒரு திருடன் திருடினால், இந்த திருடனது திருட்டு பற்றி அந்த விவசாயி அறிந்திருக்காவிட்டாலும், அவருக்கு அதற்கான வெகுமதி கிடைக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த திருட்டை அவருக்கு மறுமை நாள் வரை தர்மமாக எல்லாம் வல்ல இறைவன் எழுதுகிறான்.
அதுபோலவே ஒரு செடியை பூமியில் உள்ள மிருகங்களும், பூச்சிகளும் தின்றால் அதன் உரிமையாளருக்கு தர்மம் கிடைக்கும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள்:-
”யாரிடமாவது ஒரு நிலம் இருந்தால் அவர் அதில் பயிர்செய்யட்டும். அவ்வாறு பயிர்செய்ய முடியாமல் அவர் பலவீனப்பட்டவராக இருந்தால் தனது சகோதர முஸ்லிமுக்கு அதனை வழங்கட்டும்” என்றார்கள்.
”யார் ஒரு நிலத்தை உயிர்ப்பிக்கிறாரோ (பயிர்ச்செய்கைக்கு பொருத்தமற்ற நிலையில் உள்ள -பயன்படுதப்படாமல் உள்ள ஒரு பூமியை பயிர்ச் செய்கைக்கு உகந்தாக மாற்றுகிறாரோ) அவருக்கு அதில் கூலி – (அல்லாஹ்வின் வெகுமதி) கிடைக்கும். அதிலிருந்து யாரோ ஒரு மனிதனோ அல்லது உயிரினங்களோ சாப்பிட்டால் அது அவருக்கு ஸதகாவாக அமையும்.”(ஸுனன் நஸாயீ)
”உங்களில் ஒருவரது கையில் ஒரு மரத்தின் கிளை (நட்டுவதற்கு தயாரான நிலையில்) இருக்கும் போது மறுமை நாள் வந்து விட்டது என்று வைத்துக் கொண்டால் மறுமை நாள் வர முன்னர் அவரால் அந்தக் கிளையை நாட்ட முடிந்தால் அதனை அவர் நாட்டட்டும்” என நபி (ஸல்) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் விவசாயத்துறையினருக்கு அற்புதமான உற்சாகத்தைத் தருகிறது. அடுத்த நிமிடம் உலகம் அழியப்போவது நிச்சயமான சூழலிலும் கூட உற்பத்தி முயற்சிகளைக் கைவிடக்கூடாது என்பதையும் விளைவுகள் பற்றி அவநம்பிக்கை நிலவும் சூழலிலும் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் அதன் கூலியை அல்லாஹ் தருவான் என்பதையும் இது காட்டுகிறது.
மேற்கூறப்பட்ட விளக்கத்திலிருந்து சில கருத்துக்களைப் பெற முடியும்:
1.விவசாயம் செய்வது அல்லாஹ்வின் ஆசீர்வாதத்தையும் மகத்தான கூலியையும் பெற்றுத்தரும் ‘இபாதத்’ ஆகும். அது ‘இமாரதுல் அர்ள்’ எனப்படும் பூமியை வளப்படுத்தும் மகத்தான பணியுமாகும்.
2. அதில் நபிமார்கள், ஸஹாபாக்கள் என்போர் ஈடுபட்டு தமது ஜீவனோபாயத்தை தேடியிருக்கிறார்கள்.
3. இஸ்லாமிய சட்டப் பகுதியில் அது தொடர்பான சட்டங்கள் உள்ளன.
4. விவசாய முயற்சிகளில் ஈடுபடுவது ‘ஃபர்ளு கிபாயா’ மட்டுமன்றி மனிதர்களது அடிப்படைத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்வதற்கான மூலமுமாகும்.
5. விவசாயத்தில் ஈடுபடும் ஒருவர் தனது இறைவனின் கட்டளைக்கு அடிபணிகிறார்; அவனது நற்கூலியைப் பெறுகிறார்; உலக மாந்தர்களதும் தான் வசிக்கும் நாட்டு மக்களதும் ஏன் உலக மாந்தர்களதும் உணவுத் தேவையின் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்பட பங்களிப்பு செய்கிறார்.
அல்லாஹ் எமது முயற்சிகளை அங்கீகரிப்பானாக!- Vidivelli