எம்.எப்.எம்.பஸீர்
சிங்கள தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கான காசோலை கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக் கிழமை தனக்கு கிடைக்கப் பெற்றதனை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் ‘விடிவெள்ளி’யிடம் உறுதிப்படுத்தினார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளர் கே.சி.எம்.முதன்னாயக்கவின் கையொப்பத்துடன் 337496 எனும் இலக்கத்தை உடைய காசோலை ஊடாக இந்த சம்பள நிலுவை செலுத்தப்பட்டுள்ளது. 2 மில்லியன் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதம் ( 2675816.48) இவ்வாறு நிலுவை சம்பளக் கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மக்கள் வங்கியில் உள்ள கணக்கிலிருந்து இந்த நிலுவை செலுத்தப்பட்டுள்ளது.
சம்பளத்தை பெறுவதற்கான போராட்டம்:
முன்னதாக எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குள் வைத்தியர் ஷாபியின் சம்பள, கொடுப்பனவு நிலுவைகளை பூரணமாக செலுத்தி முடிப்பதாக சுகாதார அமைச்சு மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் ஊடாக கடந்த 07ஆம் திகதி அறிவித்தது.
சட்டவிரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தனக்கு, வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்தாணை ( ரிட்) கடந்த 7 ஆம் மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.
அரச நிர்வாக அமைச்சின் உறுதி :
இதற்கு முன்னர் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போது அரச நிர்வாக அமைச்சின் நிறுவனங்கள் தொடர்பிலான பணிப்பளர் நாயகத்தின் கடிதம் ஒன்றினை மன்றில் முன்னிலைப்படுத்தி, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரசன்னமான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன வைத்தியர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில், அவருக்கு செலுத்தப்படவேண்டிய அடிப்படை சம்பளம், கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தார்.
சுகாதார அமைச்சின் உறுதி :
இந் நிலையிலேயே, கடந்த 7 ஆம் திகதி மனு பரிசீலனைக்கு வந்த போது, குறித்த அடிப்படை சம்பளம், கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றை ஜூலை 10 ஆம் திகதிக்குள் முழுமையாக செலுத்துவதாக சுகாதார அமைச்சின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
வைத்தியர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த எழுத்தாணை மனுவில், குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ, அவ்வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ். வீரபண்டார, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன்போது போது, மனுதாரரான வைத்தியர் ஷாபி சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க, தனது சேவை பெறுநருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடிப்படை ஒழுக்காற்று விசாரணைகள், தற்போதைய குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ ஊடாக முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைப்பதாக கூறினார். குறித்த பணிப்பாளர் பக்கச்சார்பான நபர் எனவும், அவர் தொடர்பில் அரச சேவை ஆணைக் குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க குறிப்பிட்டிருந்தார்.
எனினும் 7 ஆம் திகதி பரிசீலனைகளின் போது, வைத்தியர் சந்தன கெந்தன் கமுவ முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ள வைத்தியர் ஷாபிக்கு ஆட்சேபனை இல்லை என சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.
அதற்கமைய, மனுவின் ஊடாக கோரப்பட்ட நிவாரணங்கள் கிடைத்துள்ளதன் பின்னணியில், இந்த ரிட் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள வைத்தியர் சாபி சிஹாப்தீன் தரப்பு கோரிய நிலையில், வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்தது.
அடிப்படையற்ற குற்றச்சாட்டு :
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக தான் சேவையாற்றியதாகவும், இதன்போது சட்ட விரோத கருத்தடை தொடர்பில் ஆதாரமற்ற, இன ரீதியிலான வெறுக்கத்தக்க பிரசாரங்களை மையப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தான் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். மகப்பேற்றுத் துறையில் நிபுணர்கள் பலரும், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அறிவியல் ரீதியாக சாத்தியமற்றவை எனவும் பொய்யானவை எனவும் ஆதாரபூர்வமாக விளக்கியும், தன் மீதான பொய்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சுமத்தப்பட்டதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான நிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தாபன விதிக் கோவையின் 20 (2) ஆம் பிரிவின் படி, கட்டாய விடுமுறையில் உள்ளவருக்கு சம்பளம் வழங்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்த மனுதாரரான வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அவற்றை செலுத்த உடனடியாக பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிடைத்த பணத்தை ஸதகா செய்த வைத்தியர் ஷாபி :
இந் நிலையில், தனக்கு கிடைக்கப் பெற்ற சம்பளம், கொடுப்பனவு நிலுவைகளை அத்தியவசிய மருந்து கொள்வனவுக்காக சுகாதார அமைச்சுக்கே வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலருக்கு வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் இது குறித்து சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில் நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானியுடன் கலந்துரையாடியுள்ள வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், தனக்கு கிடைக்கப் பெற்ற நிலுவை சம்பளம், கொடுப்பனவில் அத்தியவசிய மருந்து பொருட்களை கொள்வனவு செய்து ‘ஸதகா’ ( தான தர்மம்) செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் மருந்துகள் :
இதற்காக இந்திய மருந்து நிறுவனம் ஒன்றுடன் பேசப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் அந்த மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பின்னர், அவற்றை சுகாதார அமைச்சிடம் நேரில் கையளிக்க வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வைத்தியர் ஷாபி கூறுவது என்ன?
இந் நிலையில், தான் கைது செய்யப்பட்டது முதல் இது வரையிலான அனைத்து விடயங்களையும் முன்னிறுத்தி வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சமூகத்துக்கும், நாட்டுக்கும் இரு செய்திகளை கூற விரும்புவதாக ‘விடிவெள்ளி’யுடனான கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.
நாட்டில் இதன் பிறகு ஒரு அரச ஊழியருக்கோ, வைத்தியருக்கோ ஏன் சாதாரண மனிதர் ஒருவருக்கோ தனக்கு நடந்ததைப் போன்று ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்பது தனது முதல் செய்தி என வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் குறிப்பிட்டார்.
அடுத்து இனவாதம், மதவாதம் உள்ளிட்ட பேதங்களை மறந்து அனைத்து மக்களும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது தனது இரண்டாவது செய்தி என அவர் குறிப்பிட்டார்.
மனைவியின் துணையும் ஊக்கமளிப்பும்:
வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்டதிலிருந்து, அவர் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியிலும் சரி அதன் பின்னரான காலப்பகுதியிலும் சரி இதுவரை அவரது மனைவி வைத்தியர் இமாராவின் வகிபாகம் மிக முக்கியமானது என்பதுடன் போற்றத்தக்கதுமாகும். அதே போல், இங்கு வைத்தியர் ஷாபி, தனது நிலுவைச் சம்பளத்தை ஸதகா செய்ய எடுத்த தீர்மானத்திலும் அவரது மனைவி வைத்தியர் இமாராவின் ஊக்கமளிப்பு இன்றியமையாதது.
நிலுவைச் சம்பளத்தை ஸதகா செய்ய தான் எடுத்த தீர்மானத்தினை, தனது மனைவி எப்போதும் போல பக்கபலமாக இருந்து ஊக்கமளித்து, அதனை கண்டிப்பாக செய்யுமாறு ஆலோசனையளித்ததாக இது குறித்து வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் ‘விடிவெள்ளி’யுடனான கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.
விளம்பரம் தேடவில்லை :
தனது சம்பள நிலுவையை அத்தியவசிய மருந்து கொள்வனவுக்கு வழங்க தீர்மானித்துள்ள வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், அதனூடாக தான் எந்த பிரபல்யத்தையுமோ அல்லது விளம்பரத்தையுமோ எதிர்பார்க்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
தனக்கு தற்போதும் போதுமான பிரபல்யம் இருப்பதாக சுட்டிக்காட்டும் அவர், தனக்கு எவ்வாறான இன்னல்கள் வந்த போதும் தன்னைக் கைவிடாத இறைவனுக்காக, இவ்வாறு அந்த பணத்தில் மருந்து வாங்கி ஸதகா செய்வதாக குறிப்பிட்டார். தனது இம்மை, மறுமை வாழ்வின் விடிவுக்காக அதனைத் தான் செய்வதாக அவர் கூறினார். எனினும் இந்த ஸதகாவை வெளிப்படையாக செய்ய காரணம், நாட்டின் தற்போதைய நிலையில், இவ்வாறான பணிகளுக்கு ஏனையோரையும் ஊக்குவிப்பது ஒன்றே நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் நம்பிக்கை வீண் போகாது:
இந் நிலையில், தன் மீதான பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதும், மக்கள் வைத்தியர் ஷாபி நல்லவர் என நம்பியதாகவும், அதனாலேயே அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனக்காக நோன்பு பிடித்து பிரார்த்தனை செய்ததாகவும் நன்றியோடு நினைவு கூறும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், அந்த நம்பிக்கையை தான் என்றும் பாதுகாக்க தவறப் போவதில்லை என்றும் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டார்.
உறவினரின் முகநூல் பதிவு :
இதனிடையே டாக்டர் ஷாபிக்கு சம்பளப் பணம் மீளளிக்கப்பட்டமை மற்றும் அவர் அதனை மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய வழங்கவுள்ளமை தொடர்பில் அவரது உறவினர் இன்ஷாப் தீன் முகநூலில் எழுதியுள்ள பதிவு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டபோது அவரதும் அவரது மனைவி டாக்டர் இமாரா உட்பட அவர்களின் குடும்பத்தின் மனநிலை எப்படியிருந்திருக்கும். செய்யாத ஒரு தப்புக்காக அந்தக் குடும்பம் 3 வருடங்களுக்கு மேலாக ஒதுக்கப்பட்டு உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதென்பது அவ்வளவு எளிதான விடயமல்ல.
இந்தப் பிரச்சினை ஏற்பட்டபோது முழுக் குடும்பமும் அதிர்ச்சியில் இருந்தோம். இவ்வளவு நல்ல மனிதர் இப்படித் தாக்கப்படுகிறாரே என கவலையடைந்தோம்.
தனக்கு எதிராக மிகப் பெரிய சூழ்ச்சி ஒன்று நிகழ இருப்பதை அவர் அன்று எதிர்பார்க்கவில்லை. தனக்கு வைத்தியசாலையிலும் சரி, நகரிலும் சரி எதிரிகள் இருப்பது பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்தக் கோணத்தில் இது திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் இந்த சவாலுக்கு தைரியமாக முகங்கொடுத்தார்.
பிள்ளைகளோ குருநாகலையில் ஒரு பிரசித்தி பெற்ற சிங்கள மொழிப் பாடசாலையிலேயே கல்வி கற்றனர். வகுப்பில் இருப்பதுவோ ஓரிரு முஸ்லிம்கள். நகரில் தகப்பனுக்கு எதிராகப் போராட்டம். பாடசாலையில் ஆசிரியர்களும் சக மாணவர்களும் பெற்றோர்களும் இவர்களை நக்கல் செய்து ஒதுக்கினர். அந்தப் பிள்ளைகளின் மனநிலை எப்படியிருந்திருக்கும். பிறகு பிள்ளைகளை அங்கிருந்து விலக்கி கல்முனை சென்றார்கள். தெரன, ஹிரு மற்றும் ஏனைய சிங்கள ஊடகங்களில் மே 2019 இலிருந்து ஆகஸ்ட் 2020 வரை இவரின் பெயர் சொல்லப்படாத ஒரு செய்தி வந்திருக்காது. அந்த அளவிற்கு இந்தப் பிரச்சினையை சமூகமயப்படுத்தி சிங்கள மக்களை திசை திருப்பினர். ஆனால் இவ்வாறான எல்லா சந்தர்ப்பங்களிலும் பொறுமையாக இருந்தார்.
2019 நவம்பர் 17 ஆம் திகதி எனக்குக் கற்றுத் தந்த ஒரு விரிவுரையாளர் தனது முகநூல் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். “நான் இன்று கோட்டாபயவிற்கு எனது வாக்கினை இரண்டு காரணங்களுக்காக வழங்கினேன். ஒன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டி. இரண்டாவதாக ‘வந்த (கருத்தடை) ஷாபி’ தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக. ‘வந்த ஷாபி” என்றே அவர் எழுதியிருந்தார். படித்தவர்களையும் நம்ப வைத்த நாடகம் தான் இந்த ‘வந்த சிகிச்சை’.
பிறகு என்ன நடந்தது. அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி அவரது சம்பளப் பாக்கியையும் வழங்கும்படி உத்தரவிடப்பட்டது. பேரினவாதிகளுக்கு இது ஒரு பேரடியில்லையா? அத்தோடு நின்றுவிடாமல் நான் இந்த நாட்டை நேசிப்பவன் என்ற அடையாளத்தைக் காட்டி தனக்குக் கிடைக்கப் பெற்ற சம்பளப் பாக்கியினை குருநாகலை வைத்தியசாலையிற்கு அன்பளிப்புச் செய்தார். இனவாதிகளுக்கு இதைவிட வேறென்ன செருப்படி வேண்டும்.
எந்தளவிற்கு அவரின் கௌரவம் களங்கப்படுத்தப்பட்டதோ அந்த அளவிற்கு அவரின் குற்றமற்ற தன்மை ஊடகங்களினூடாக மக்கள் மயப்படுத்தப்படவில்லை. இன்னும் ஒரு குற்றவாளி என்றே சில மாற்று மதத்தினர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இவர் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் ஷாபி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டமை மற்றும் அவர் தனது சம்பளப் பாக்கியை மருந்துகள் கொள்வனவு செய்ய திருப்பியளித்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் பலத்த பாராட்டுக்களைத் தெரிவித்து வருவதுடன் டாக்டர் ஷாபி இதன் மூலம் இனவாதிகளுக்கு பலத்த பதிலடியைக் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.–Vidivelli