(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்திரைக்காக சுமார் 4600 பேர் தலா 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தாலும் ஹஜ் கட்டண அதிகரிப்பின் காரணமாக இவ்வருடம் மக்கள் ஹஜ் கடமையில் ஆர்வம் குறைந்தவர்களாகவே இருக்கின்றனர்.
இவ்வருடம் இலங்கைக்கு 1585 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றும் 968 பேரே தங்கள் ஹஜ் பயணத்தை உறுதி செய்துள்ளனர்.ஹஜ் கட்டணம் இவ்வருடம் 20-–25 இலட்சத்துக்கு உட்பட்டதாக முகவர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து முதலாவது தொகுதி ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு எதிர்வரும் 1 ஆம் திகதி விமானம் பயணிக்கவுள்ளது. எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதிவரை ஹஜ் விமான சேவைகள் இடம்பெறும். ஜூலை 15 முதல் 20 ஆம் திகதிக்குள் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் கடமையை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ளனர் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்
ஹஜ் யாத்திரை தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் “ ஹஜ் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் சுபீட்சத்துக்காகவும் நெருக்கடி நிலைமையின் விடிவுக்காகவும் விசேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். நாடு நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக அனுமதி வழங்கிய அமைச்சருக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
ஹஜ் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவின் சட்ட விதிகளைப்பேணி தமது கடமைகளை முன்னெடுக்க வேண்டும். சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் இலங்கை ஹாஜிகளின் நலன்களைக் கவனிப்பார்கள்.
ஹஜ் முகவர்கள் தாம் அறவிடும் கட்டணங்களுக்கு அமைவாக யாத்திரிகர்களுக்கு சேவைகளை வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தமது யாத்திரைக்கான முகவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தெரிவு இவ்வருடம் ஹஜ் யாத்திரிகளிடமே வழங்கப்பட்டது என்றார்.- Vidivelli