(ஏ.ஆர்.ஏ.பரீல்)
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்திற்கு வரும்போது அதனை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்திற்கு இன்னும் வரவில்லை என பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் என்பன பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்த வாரம் பாராளுமன்றுக்கு கொண்டுவரப்படவிருந்தது.
எனினும், அமைச்சரவை அனுமதியில் இழுபறி நிலை மற்றும் பொதுஜன பெரமுனவினரின் எதிர்ப்பு காரணமாக 21 ஆம் திருத்தம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படுவது தாமதமாகி வருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ்
இந்நிலையில் இது தொடர்பாக விடிவெள்ளிக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், 21 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதாக உறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஏமாற்றிவருகிறார். மூன்று திங்கட்கிழமை கடந்தும் 21 ஆவது திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. பிரதமர் பசில் ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்கு முனைகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் 21 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதாக கூறி அரசாங்கம் தொடர்ந்து காலத்தைக் கடத்தி வருகின்றமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
அத்தோடு, உத்தேசிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தாலே அது சிறுபான்மையினருக்கு அனுகூலமாக இருக்கும் என்பன உட்பட 21 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய பல விடயங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக சமர்ப்பித்துள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.
21ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டினை தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் அரசியல் யாப்பு சபைக்கு ஐவர் நியமிக்கப்படுவதுடன் அதில் ஒருவர் தமிழராகவும் மற்றுமொருவர் முஸ்ஸிமாகவும் இருக்க வேண்டும். அத்தோடு கட்சிமாறுதல் தடை செய்யப்படவேண்டும். மேலும் அரச நிர்வாக சேவைக்கு நியமனம் பெறுபவர்கள் நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இளைப்பாரிய இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படக்கூடாது.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் பிரதமரின் ஆலாசனையின் பேரிலே அது இடம் பெறவேண்டும். போன்ற விடயங்கள் 21 ஆவது திருத்த திருத்த சட்ட மூலத்தில் உள்வாங்கப்படவேண்டும். அத்தோடு 19 திருத்தச்சட்டத்தில் உள்ளடங்கியிருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனம் பெற வேண்டும் என எமது ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம் என்றார்.
தேசிய காங்கிரஸ்
இதனிடையே, அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் தேசிய காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டினை இதுவரை வெளியிடவில்லை. அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் 21 ஆம் திருத்தத்திற்கும் ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.- Vidivelli