(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நஷ்டஈடும், வீடுகளும் வழங்கப்படுவதற்கு முன்பு கடந்த காலங்களில் அளுத்கம, ஜின்தோட்ட, திகன, மினுவங்கொட, அம்பாறை போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பனாகொட முகாம் குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் முழுமையாக நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதன்பின்பே மே மாதம் 9 திகதிய வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றில் மனுதாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மனு ஹில்மி அஹமட், சார்னி ஜயவர்தன, மொஹமட் பிஸ்ரி கஸ்ஸாலி, தஸ்லிமா தஹ்லான், மொஹமட் சாம் நவாஸ், சாந்தினி ஜயவர்தன மற்றும் அவன்தி சகபந்து ஆகியோரினால் தாக்கல் செய்யப்படவுள்ளது. குறிப்பிட்ட மனுவினை உச்சநீதிமன்றில் தாக்கல் செய்வதற்காக தகவல் அறியும் உரிமை மூலம் தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக ஹில்மி அஹமட் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் அளுத்கம ஜின்தோட்ட, திகன, மினுவாங்கொடை, அம்பாறை, பனாகொட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நஷ்ட ஈடு வழங்கப்பட்டுவிட்டதா? இல்லையாயின் இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படாதுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் எணண்ணிக்கை, நஷ்ட ஈட்டுத் தொகை என்பன தகவல் அறியும் உரிமை மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து கோரப்பட்டுள்ளன எனவும் ஹில்மி அஹமட் தெரிவித்தார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மே 9 ஆம் திகதி வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நஷ்டஈடும் வீடும் வழங்குவதாகக் கூறியிருக்கிறார். இதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் கடந்தகாலங்களில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்ட பின்பே அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை அரசியல்யாப்பின்படி இது விடயத்தில் மக்களை இன, மத ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ பிரித்துப் பார்க்க முடியாது. அனைவரும் இவ்விடயத்தில் சமமாக கருதப்பட வேண்டும் என சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார். அடிப்படை உரிமை மனு விரைவில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்ழுடும் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில் குறிப்பிட்ட எழுவரும் இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர்.
அளுத்கம, ஜின்தோட்ட, மினுவாங்கொட, திகன, அம்பாறை மற்றும் பனாகொட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்ட ஈடு வழங்கப்பட்டதன்பின்பே மே 9 ஆம் திகதிய வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் அவர்களது முறைப்பாடு அமைந்திருந்தது.- Vidivelli