(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை கருத்திற் கொண்டு இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என ஹஜ் முகவர்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தாலும், அரசு இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு அமைச்சர் அனுமதி வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் மற்றும் ஹஜ் முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வருடம் இலங்கைக்கு சவூதி ஹஜ் அமைச்சு 1585 கோட்டா வழங்கியுள்ளது. ஹஜ் யாத்திரிகர்களுக்கு தலா ஒரு குறிப்பிட்ட தொகை டொலர் இலங்கையின் மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் ஹஜ், உம்ரா முகவர்கள் சங்கத்தின் பிரதித்தலைவர் அஹமட் நிஜார் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுக்கும் முகவர்கள் தங்களது பதிவுக் கட்டணமாக ஒருவர் தலா ஒரு இலட்சம் ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குச் செலுத்த வேண்டும்.அத்தோடு ஹஜ் யாத்திரிகர்களுக்கான கட்டணமாக தலா 4000 ரூபா சேவைக் கட்டணம் திணைக்களத்துக்கு செலுத்தப்படவேண்டும்.
இவ்வருட ஹஜ் கட்டணம் சுமார் 25 இலட்சமாக அமையும். இதேவேளை ஹஜ் முகவர்கள் சவூதியில் வழங்கும் சேவைகள் தங்குமிட வசதிகளுக்கேற்ப கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படும். அத்தோடு முகவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 15 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட 15 முகவர்களுடன் ஏனைய ஹஜ் முகவர்கள் இணைந்து ஹஜ் பயண ஏற்பாடுகளில் ஈடுபட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஹஜ் முகவர்கள் தொடர்பில் இறுத்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.
இதேவேளை கொன்ஸியூலர் சேவைகளை ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸியூலர் காரியாலயம் வழமை போன்று வழங்கவுள்ளது.
ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்கள் புத்தசாசன மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சிலும் இலங்கை மத்திய வங்கியிலும் இடம்பெற்றன.
ஹஜ் முகவர்கள் தாங்கள் அழைத்துச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை உட்பட விபரங்களை நாளை வெள்ளிக்கிழமை திணைக்களத்திடம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் தாமதியாது முகவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.- Vidivelli