அஷ்ஷெய்க்
எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் இவ்வருடம் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட போது அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
சொந்த உழைப்பில் இருபது லட்சத்திற்கு ஹஜ் செய்யும் ஹாஜிகளை விட்டு விட்டு சுரண்டலில் கோடிகளைப் பதுக்கியிருக்கும் அரசியல் வர்க்கத்தை கேள்விக்கு உட்படுத்தலாமே என்று சிலரும், படைத்தவன் உணவளிப்பான்; தகுதியுள்ளவர்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று வேறு சிலரும், உங்களது கண்களுக்கு ஹஜ்ஜுக்குச் செல்வோர் மட்டுமா தென்படுகிறார்களா? மேற்கத்திய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து உல்லாசப் பயணம் செய்வோரையும் ஏன் தடை செய்யக் கூடாது என்று வேறு சிலரும் கேட்கிறார்கள்.
இந்த கேள்விகளுக்குள் பல நியாயங்கள் மறைந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. எவருக்கும் கருத்துக் கூறும் சுதந்திரம் உள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பான இஸ்லாமியப் பார்வையையும் கவனத்தில் எடுத்து பொருத்தமான தீர்மானங்களுக்கு வர வேண்டும் என்பதே எமது அவா. எனவே, சில காரணங்களுக்காக ஹஜ்ஜுக்கான தடை விதிக்கப்படுவது அல்லது ஒருவர் மீது ஹஜ்ஜு கடமையாகியும் அதனை அவர் சில காரணங்களுக்காகச் செய்யாமல் தவிர்ந்து கொள்வது தொடர்பான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.
ஹஜ் கடமை இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அது கடமையான நிலையில் உள்ள ஒருவர் அதனை நிறைவேற்றாத போது அல்லாஹ்வின் வெறுப்புக்கு உள்ளாகும் பெரும்பாவியாக மாறுகிறார் என்பது மிகத் தெளிவான உண்மையாகும்.
ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமை என்பதிலும் அதற்குப் பின்னர் செய்யப்படும் ஒவ்வொரு ஹஜ்ஜும் உபரியான- சுன்னத்தான ஹஜ்ஜுகளே என்பதிலும் எவ்வித கருத்து பேதங்களும் இல்லை.
உடனடியாகவா பிற்படுத்தியா?
ஹஜ் கடமையான ஒருவர் உடனடியாக அதனைச் செய்ய வேண்டுமா அல்லது காலம் தாழ்த்திச் செய்ய முடியுமா என்பது தொடர்பாக அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகிறது. உடனடியாக அதனை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவர் :-
“யார் ஹஜ் செய்ய நாடுகிறாரோ அவர் அதனைத் துரிதப்படுத்தட்டும். ஏனெனில், அவர் நோயாளியாக மாறுவதற்கும் (பொருட்கள்) காணாமல் போவதற்கும், புதிய ஒரு தேவை உருவாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.” (ஸுனன் அபூதாவூத்- 1732)
“ஹஜ்ஜை அவசரப்படுத்துங்கள். உங்களில் ஒருவருக்கு எதிர்பாராமல் ஏதும் நடந்துவிடக் கூடும் என்று அவர் அறியமாட்டார்.” (முஸ்னத் அஹ்மத்- 2869)
ஆனால், கடமையான ஹஜ்ஜை காலம் தாழ்த்தி நிறைவேற்ற முடியும் என்று வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக, நபி(ஸல்)அவர்கள் ஹஜ் கடமையாக்கப்பட்ட அதே வருடத்தில் அல்லாமல் ஹிஜ்ரி பத்தாவது வருடத்தில் தான் அதனை நிறைவேற்றினார்கள். அன்னாரது மனைவிமார்களும் அதிகமான சஹாபாக்களும் அவர்களுடன் சென்றார்கள். உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றிருந்தால் நபியவர்கள் அதனை பிற்படுத்தியிருக்கமாட்டார்கள் என்று இந்த அறிஞர்கள் கூறியிருப்பதுடன், கடமையான ஹஜ்ஜை அவசரப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று கூறும் ஹதீஸ்கள் உடனடியாக நிறைவேற்றுவது கடமை என்ற கருத்தில் அல்லாமல் சுன்னத்து என்பதனைத் தான் காட்டும் என்றும் கூறுகிறார்கள். இமாம்களான அவ்ஸாஈ, தெளரீ, ஷாபிஈ போன்றோர் இக்கருத்தில் இருக்கிறார்கள்.
எனவே, நியாயமான காரணம் இருப்பின் ஹஜ்ஜை தாமதப்படுத்தி நிறைவேற்ற முடியும் என்பதை இது காட்டுகிறது.
தவிர்ந்து கொள்வதும் தடை விதிப்பதும்
இது இப்படியிருக்க, ஹஜ் கடமையான ஒருவர் அதனை நிறைவேற்றாமல் தானாக தவிர்ந்து கொள்வதற்கும் சிலபோது ஆட்சியாளர்கள் ஹஜ் செய்வதற்கு தடை போடுவதற்கும் பல நியாயங்களை இஸ்லாமிய சட்டப் பரப்பில் காண முடிகிறது. இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
தொற்றுநோய்கள், யுத்தங்கள், இயற்கை அனர்த்தங்கள், கொள்ளையர்களது அட்டகாசங்கள் போன்ற இடையூறுகள் வரலாற்றில் இருந்த பொழுதெல்லாம் ஹஜ் கடமை இடைநிறுத்தப்பட்டது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
1. ஆபத்து ஏற்படும் என்ற பயம்
ஹஜ் செய்யவிருக்கும் ஒருவரோ பலரோ தாம் ஆபத்தான சூழ்நிலைக்கு உள்ளாகலாம் என்ற அனுமானம் வலுக்கும் பட்சத்தில் அதனைச் செய்யாமல் இருக்க முடியும் என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் இருப்பதாக ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த இமாம் ஜுவைனி தனது ‘அல்ஙியாதீ’ எனப்படும் நூலில் கூறுகிறார்.
2. வெள்ளப் பெருக்கு
தைகிரீஸ் நதி பெருக்கெடுத்ததன் காரணமாக பக்தாதிலும் இராக்கிலும் இருந்த பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. எனவே, அவ்வருடம் ஈராக்கிலிருந்து எவரும் ஹஜ்ஜு செய்யவில்லை என இமாம்களான இப்னுல் அதீர் (மரணம்: கி.பி1233) இப்னுல் ஜவ்ஸீ ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
3. அரசியல் போர்கள்
மக்காவை அண்டிய பிரதேசங்களில் அரசியல் காரணங்களால் இடம்பெற்ற யுத்தங்களின் பொழுது மக்கள் முழுமையாக அல்லது பெரும்பாலும் ஹஜ்ஜு செய்ய முடியாத சூழ்நிலை காணப்பட்டது. கி.பி 714,1470 ஆகிய வருடங்கள் இதற்கு உதாரணங்களாகும்.
4. கொரோனா தொற்று
கடந்த இரண்டு வருடங்களாக உலகில் கொரோனா தொற்று இருந்ததன் காரணமாக ஹஜ்ஜை நிறைவேற்றுவது பாதுகாப்பானதல்ல என முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச மன்றமும் இன்னும் பல இஸ்லாமிய அறிஞர்களும் பத்வா வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கங்களும் தடையுத்தரவைப் பிறப்பித்தன. எனவே, ஹஜ்ஜை முதல் தடவையாக செய்வதற்கு தயாராக இருந்தவர்கள் கூட ஹஜ் செய்யவில்லை.
5. திருமணமா முதல் தடவையாக ஹஜ்ஜா?
ஒருவர் தான் உடனடியாக திருமணம் முடிக்காத போது துர்நடத்தையில் சம்பந்தப்பட்டு விடலாம் என்ற பயம் ஏற்பட்டு அதேவேளை ஹஜ்ஜும் கடமையாகி விட்டால் கையில் இருக்கின்ற பணத்தால் திருமணம் செய்ய வேண்டுமா அல்லது ஹஜ் செய்ய வேண்டுமா என்ற விவகாரத்தில் திருமணத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமிய அறிஞர்கள் பலரது கருத்தாகும். இமாம் இப்னு குதாமா இக்கருத்தை தனது ‘அல்முக்னீ’’யில் குறிப்பிடுவதுடன் துர்நடத்தையை தவிர்க்க முடியும் என்றிருந்தால் ஹஜ்ஜு செய்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இமாம் இப்னு தைமிய்யாவும் இக்கருத்தையே வலியுறுத்தியுள்ளார்.
சுன்னத்தான ஹஜ்ஜுக்கு முன்னர் வறுமை நிவாரணம்
சமூகத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற பொழுது சுன்னத்தான ஹஜ்ஜை விட்டுவிட்டு நிவாரண உதவிகளுக்கே ஹஜ்ஜுக்காக ஒதுக்கிய பணத்தை செலவழிக்க வேண்டும் என்பது இமாம் கஸ்ஸாலி (ரஹ்) போன்றவர்களது கருத்தாகும். இமாமவர்கள் தனது இஹ்யாவில் பின்வருமாறு எழுதுகிறார்கள்:- “சிலர் தமது பணத்தை ஹஜ்ஜுக்காக செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஒன்றுக்கு மேல் இன்னொன்றாக ஹஜ் செய்கிறார்கள். சிலபோது தமது அண்டை வீட்டாரை பசியில் விட்டுவிட்டுப் போகிறார்கள். எனவே, இமாம் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் ‘கடைசி காலத்தில் எவ்வித நியாயமுமின்றி ஹஜ் செய்வோரது தொகை அதிகரிக்கும். அவர்களுக்கு பயணம் இலகுவாகயிருக்கும். ஜீவனோபாயம் விஸ்தீரணமாக இருக்கும். ஒருவர் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் போது, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் தனது பக்கத்து வீட்டாருக்கு உபகாரம் செய்யமாட்டார்’ என்று கூறியிருப்பதாக இமாம் கஸ்ஸாலி எழுதுகிறார்.
பிஷ்ர் இப்னுல் ஹாரித் என்பவரிடம் ஒருவர் வந்து தான் ஹஜ் செய்வதற்கு உறுதிபூண்டுள்ளதாகக் கூறிவிட்டு, ‘நீங்கள் எனக்கு ஏதும் கட்டளையிடுகிறீர்களா?’ என்று கேட்டார். அப்போது பிஷ்ர், ‘அதற்காக எவ்வளவு பணத்தை தயார் செய்து வைத்திருக்கிறீர்?’ என்று கேட்ட போது அவர், ‘2000 திர்ஹம்’ என்று கூற, பிஷ்ர் ‘பற்றற்ற வாழ்க்கை அல்லது அல்லாஹ்வினுடைய வீட்டின் மீதான மோகம் அல்லது அல்லாஹ்வுடைய திருப்தி இவற்றில் எதனை எதிர்பார்த்து நீர் ஹஜ் செய்யப் போகிறீர்?’ என்று வினவிய போது, அவர் ‘அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்துத் தான் (ஹஜ்ஜு செய்யப் போகிறேன்)’ எனப் பதிலளித்தார். அதற்கு பிஷ்ர் ‘நீர் உமது வீட்டில் இருந்து கொண்டே அப்பணத்தின் மூலமாக அல்லாஹ்வின் திருப்தியை அடைய முடியும். அதாவது, கடன்காரர்கள் பத்துப் பேர் தமது கடனை அடைப்பதற்கு அந்த 2000 திர்ஹம்களை கொடுப்பீராக. குடும்பஸ்தன் ஒருவருக்கு அதனைக் கொடுத்து தனது குடும்பத்தின் தேவைகளை அவர் ஈடுசெய்ய உதவுவீராக. அனாதையைப் பராமரித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு கொடுத்து அவரை சந்தோஷப்படுத்துவீராக. முடிந்தால் இந்தப் பணத்தொகை அனைத்தையும் ஒரு தனிநபருக்குக் கொடுப்பீராக. ஏனெனில், முஸ்லிமின் உள்ளத்தில் சந்தோஷத்தைப் புகுத்துவது, துன்பப்படும் ஒருவருக்கு உதவி செய்வது, கஷ்டத்தைப் போக்குவது, பலவீனருக்கு உதவி செய்வது போன்ற நற்கருமங்களில் ஈடுபடுவதானது முதல் தடவைக்குப் பிறகு செய்யப்படுகின்ற 100 ஹஜ்ஜுகளை விடவும் சிறந்ததாகும்’ என்று கூறிவிட்டு, ‘இங்கிருந்து எழுந்து சென்று நாம் உமக்கு கூறியது போன்று அதனைச் செலவு செய்வீராக. அல்லது உமது உள்ளம் என்ன சொல்கிறது என்று எமக்குச் சொல்வீராக’ என்றார்கள்.
அப்போது அவர்:- ‘(ஹஜ்ஜுப்) பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கிறது’ என்று கூறினார். அதற்கு பிஷ்ர் புன்னகைத்துக் கொண்டு அவர் பக்கம் திரும்பி, ‘அழுக்கான வியாபாரத்தின் மூலமாகவும் சந்தேகத்திற்கிடமான வழிகளாலும் சொத்து, செல்வங்கள் திரட்டப்பட்டால், உள்ளம் ஆசைப்படுவது போன்று தான் அந்தப் பணத்தை செலவழிக்கும் படி அது கூறும். அது ஸாலிஹான அமல்களை (போலியாக) வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்’ என்றார்கள்.(இஹ்யாஉ: 4/660)
எனவே, இஸ்லாமிய பிக்ஹில் ‘ஃபர்ள் கிபாயா’க்கள் என்பன சுன்னத்தான- நபிலான வணக்கங்களை விடவும் முற்படுத்தப்பட வேண்டியவையாகும்.
சுன்னத்தான ஹஜ்ஜுக்காகப் பலர் செல்வது பற்றிக் கூற வந்த அஷ்ஷைக் கர்ளாவி: ‘ஹஜ் காலப்பிரிவில் வசதிபடைத்த முஸ்லிம்களில் கணிசமான தொகையினர் சுன்னத்தான ஹஜ்ஜுகளைச் செய்வதில் கவனமெடுப்பதை நான் காண்கிறேன். இந்த ஸுன்னத்தான ஹஜ்ஜுகளுடன் ரமழான் காலத்தில் உம்ராக்களையும் அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். தமது செலவில் தம்மோடு இன்னும் பல ஏழைகளையும் அழைத்துச் செல்கிறார்கள்.’ என்கிறார். இஸ்லாமிய சமூகத்தில் பல வகையான வேலைத்திட்டங்களுக்கு இந்தப் பணத்தை செலவிடலாம் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.
சமுதாயத்தில் அனாதைகள், பட்டினியால் இறப்பவர்கள், முகாம்களில் வாடும் அகதிகள், தமது நோய்க்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அங்கலாய்க்கும் நோயாளிகள், அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான அறிவைக் கற்றுக் கொள்வதற்கு வசதி இல்லாமல் தவிக்கும் பிள்ளைகள், பெரியவர்கள், தொழில் வாய்ப்பில்லாதவர்கள், அல்லல்படும் கூட்டத்தினர் என அவர்களது பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய வேலைத்திட்டங்களுக்கும் இஸ்லாத்தை பாதுகாப்பதற்கும் பிரசாரம் செய்வதற்கும் பெரும் தொகை பணம் செலவு செய்யப்பட வேண்டிய நிலையில் சுன்னத்தான- நபிலான கருமங்களுக்காக செலவு செய்வோர் சம்பந்தமாகவே ‘பிக்ஹுல் அவ்லவிய்யாத்’ (இஸ்லாமிய சமூகத்தில் முன்னுரிமைப்படுத்தி நோக்க வேண்டிய அம்சங்கள்) என்ற பகுதி பற்றிய ஆய்வில் ஈடுபடுபவர்கள் அதிகமாகக் கரிசனை எடுக்கிறார்கள்.
பர்ளான ஹஜ்ஜா? பட்டினி நிவாரணமா?
ஒருவர் முதல் தடவையாக செய்யப்படும் பர்ளான ஹஜ்ஜைக் கூட செய்யாமல் உடனடியாகச் செய்யப்பட வேண்டிய, அதாவது முன்னுரிமைப்படுத்தப்படவேண்டிய கருமங்கள் இருக்கின்ற பொழுது அவற்றுக்காக அந்தப் பணத்தை செலவழிப்பதே நல்லது என்ற கருத்தில் பல பழைய கால, நவீனகால உலமாக்கள் இருக்கிறார்கள்.
பொஸ்னியா – ஹேர்ஸகோவினா பகுதியில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களின் பொழுது முஸ்லிம்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அச்சந்தர்ப்பத்தில் எதிரிகளை எதிர்கொள்வதற்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் பெருந்தொகைப் பணம் தேவைப்பட்டது. அந்த காலப் பிரிவில் அதாவது,1992 ஆம் ஆண்டு பிரபல இஸ்லாமிய சிந்தனையாளர் பஹ்மீ ஹுவைதீ அவர்கள் எகிப்தின் ‘அல்அஹ்ராம்’ பத்திரிகையிலே ஒரு கட்டுரை எழுதினார். அதிலே ‘பர்ளான (முதல்தடவை செய்யப்படும்) ஹஜ்ஜை விடவும் பொஸ்னியாவை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.
இந்த கருத்து சம்பந்தமாக ஷரீஅத்தின்- பிக்ஹின் நிலைப்பாடு என்ன என்று அஷ்ஷெய்க் கர்ளாவியிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர், ‘ஷரீஆவின் கண்ணோட்டத்தில் பஹ்மீ ஹுவைதியின் கருத்துக்கு ஒரு நியாயம் உண்டு. ‘பிற்படுத்தி நிறைவேற்ற முடியுமான கடமைகளை விடவும் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்’ என்பது ஷரீஅத்தின் நிலைப்பாடாகும்.
ஹஜ் கடமையை காலம் தாழ்த்தி நிறைவேற்ற முடியும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். ஆனால், பொஸ்னிய மக்களை பசி, குளிர், நோய், கூட்டுக் கொலை போன்ற ஆபத்துக்களில் இருந்து உடனடியாக மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.அதனை காலம் தாழ்த்த முடியாது. எனவே அது காலத்தின் தேவையாகும். ஹஜ் கடமையை மக்கா மதீனாவாசிகளும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் இருப்பவர்களும் நிறைவேற்றட்டும். அவர்களுக்கு அது அதிகமான செலவை ஏற்படுத்தமாட்டாது என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
ஹஜ் செய்வதற்கான தகுதிகளில்
‘இஸ்திதாஆ’வும் ஒன்று
அதேவேளை ஹஜ் கடமையாவதற்கு குர்ஆனில் – ஷரீஅத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று ‘இஸ்திதாஆ’- (சக்திபெற்றிருத்தல்) என்பதாகும்.
’மனிஸ்ததாஅ இலைஹி ஸபீலா’ ஹஜ்ஜுக்குப் போவதற்கு பாதை விடயத்தில் சக்தி பெற்றிருத்தல் என்று அதனை நாம் மொழிபெயர்த்தாலும் பயணத்துக்கான கட்டுச்சாதம், வாகனம் என்பவற்றைப் பெற்றிருப்பதையும் அது குறிக்கும்.
ஒருவர் (ஹஜ்ஜு செய்வதற்கு முன்னர்) தான் நிறைவேற்ற வேண்டிய கடன்களை நிறைவேற்ற வேண்டும். தான் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் வரைக்குமான காலப்பிரிவில் தான் செலவுசெய்வதற்கு கடமைப்பட்டுள்ளவர்களுக்கான இல்லிடம், ஆடை, தனக்கு தேவையான கால்நடைகள், தொழில் கருவிகள் போன்றன தேவையை விடவும் அதிகமாக இருக்க வேண்டும். சிறைக்கைதிகளாக இருப்போர், ஹஜ் செய்வதை விட்டும் தடுக்கும் ஆட்சியாளர்களுக்குப் பயப்படுவோர் போன்றோரும் ஹஜ்ஜிலிருந்து விலக்களிக்கப்படுவர் என்பது ஹனபீ மத்ஹபினருடைய கருத்தாகும். ஹஜ்ஜுக்குப் போக முன்னர் இவற்றை அவர் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத போது அவர் மீது ஹஜ் கடமையாகமாட்டாது. அதே வேளை நிறைவேற்ற வேண்டிய கடன்கள், கடமையான ஸகாத், நேர்ச்சைகள் என்பவற்றை அவர் நிறைவேற்றியிருப்பதும் ஹஜ் கடமையாவதற்கான மற்றொரு நிபந்தனையாகும்.
எனவே, ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த ஒருவர் மீது மட்டுமே ஹஜ் கடமையாகிறது. அது கடமையானாலும் அதனை அவர் நிறைவேற்றாமல் இருக்கலாம் என்பதற்கான சில நியாயங்களை இஸ்லாம் வகுத்துக் கூறியுள்ளது. சிலபோது அவர் ஹஜ் செய்வதில் இருந்து தானாகத் தவிர்ந்து கொள்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கும். வேறு சிலரைப் பொறுத்தவரையில் அவர்கள் ஹஜ் செய்வதை இஸ்லாமிய சட்டமே தடைசெய்யும். எனவே இவை விதிவிலக்கான சந்தர்ப்பங்களாகும்.
இலங்கைச் சூழலில் ஹஜ்
ஹஜ்ஜுக்காக நமது நாட்டிலிருந்து செல்வோரும் முகவர்களும் அண்ணளவாக 6 தொடக்கம் -8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நமது நாட்டை விட்டும் சவூதி அரேபியாவுக்கு கொண்டு செல்வதற்கான பொறி முறையை கண்டுகொள்ள வேண்டும். அந்தப் பொறிமுறையை கண்டு கொள்ளாத போது இம்முறை ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இம்முறை தலா ஒரு ஹாஜிக்கு சுமாராக ரூபா 20- முதல் 25 லட்சத்தும் இடைப்பட்ட தொகை செலவாகலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. அந்தவகையில் இம்முறை இங்கிருந்து 1585 பேர் ஹஜ்ஜுக்குச் செல்வதாயின் 317 தொடக்கம் 396.25 கோடி ரூபாய்கள் செலவாகும் என்றும் அது அண்ணளவாக 9 தொடக்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் கணிக்கப்பட முடியும்.
இது இப்படியிருக்க, நமது நாட்டு மக்கள் மிகப்பயங்கரமான பொருளாதார நெருக்கடியையும் பட்டினிச் சாவையும் எதிர்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் இந்நிலை மிகவும் மோசமடையலாம் என எதிர்வு கூறப்படுகிறது. எனவே, இவ்வளவு பெரும் தொகையை ஹஜ்ஜுக்காகச் செலவு செய்வது பொருத்தமாக அமையுமா என்ற கேள்வியும் எழுகிறது.
ஹஜ்ஜுக்காக செலவிட வேண்டியுள்ள இப்பாரிய பணத்தொகையை ஸதகாவாகவும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவும் பசி பட்டினியைப் போக்கவும் பயன்படுத்தலாமே என சிலர் அபிப்பிராயப்படுவதும் நியாயமாகும்.
தமது குழந்தைக்கு பால் மாவை வாங்கிக் கொடுக்க பண வசதியில்லாமல் ஒரு தாயும் தகப்பனும் புலம்பும் போது, நோயாளியான தனது தந்தைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் மருந்தை வாங்கிக் கொடுக்க பணமின்றி ஒரு மகன் அழுது புலம்பும் போது….இது போன்ற உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய நிலை உள்ளது.
எமது கண்முன்னே இருவர் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கடமையான தொழுகையாக இருப்பினும் அதனை விட்டுவிட்டு அச் சண்டையை தணிக்க முன்செல்வதே இஸ்லாம் எமக்கு காட்டித்தரும் அழகிய வழிகாட்டலாகும்.
அதனடிப்படையில் எமது நாட்டில் நிலவும் மிக அசாதாரண பொருளாதார நெருக்கடியின் மோசமான பின்விளைவின் எதிர்வு கூறல் அடிப்படையில் இவ்வருட ஹஜ்ஜை நிறைவேற்றாமல் அதனை பிற்போடுவதும் மிக பொருத்தமானதாக இருக்கக் கூடும். நிலமையை கருத்தில் கொண்டு ஹஜ்ஜுக்காக சேர்த்து வைத்த பணத்தில் ஒரு தொகையையோ அல்லது முழுவதுமாகவோ ஸதகா செய்வதாலும் பிஷ்ர் இப்னுல் ஹாரித், ஃபஹ்மி ஹுவைதீ போன்றவர்களது கருத்துக்கள் அடிப்படையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய முடியும்.
இருப்பினும் ஒருவர் தமது நிலைப்பாட்டை மற்றவர் மேல் திணிப்பது என்பதை விட வழிகாட்டல்களை வழங்குவதே சாலப் பொருத்தம். அதேநேரம் தாம் எதனை முற்படுத்த வேண்டும் என்பதனை மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில் நேர்மையாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டியது ஒவ்வொருவர் மீதும் கடமையாக மாறும் என்பதில் ஐயமில்லை.
வல்லவன் அல்லாஹ் எமக்கு நேர்வழியைக் காட்டுவதோடு அதனைப் பின்பற்றும் பாக்கியத்தையும் அருள்வானாக!
நாட்டின் வறுமையைப் போக்கி சுபீட்சமான எதிர்காலத்தைத் தருவானாக!. – Vidivelli