உலக முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் விதத்தில் இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கருத்து வெளியிட்டிருப்பதானது இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
பா.ஜ.க செய்தி தொடர்பாளரான நூபுர் சர்மா, சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர், முஹம்மது நபி (ஸல்) அவர் தொடர்பில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான கருத்தை, கட்சியின் டில்லி ஊடகப் பிரிவைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து பாரிய கண்டனக் குரல்கள் வெடித்ததுடன் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பல இடங்களில் கலவரமும் மூண்டது. இதனைத் தொடர்ந்து நூபுர் சர்மாவை, இடைநிறுத்தம் செய்தும், நவீன் குமார் ஜிண்டாலை கட்சியில் இருந்து நீக்கியும் பா.ஜ.க நடவடிக்கை எடுத்தது. மேலும், இது தொடர்பாக ஒரு விளக்க அறிக்கையையும் பா.ஜ.க, வெளியிட்டது.
‘பா.ஜ.க, அனைத்து மதங்களையும், அவற்றின் நம்பிக்கையையும் மதிக்கிறது. மதம் சார்ந்தவர்களை அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது. மதத்தைப் பற்றி அவதூறாக பேசுவோரை, பா.ஜ.க, ஒருபோதும் ஊக்குவிக்காது” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த சம்பவத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதுவர்களை அழைத்தும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தன.
குவைட், கத்தார், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஈராக், பாகிஸ்தான், எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஜோர்தான், லிபியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகள் இவ்வாறு கண்டனம் தெரிவித்தன. முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான, ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும், இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அத்துடன் பல மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய உற்பத்திப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டன. குவைத் நாட்டிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய உற்பத்திப் பொருட்களை அகற்றும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
யார் இந்த நூபுர் சர்மா?
நூபுர் சர்மா ஒரு வழக்கறிஞர். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு லண்டனில் சட்ட மேற்படிப்பு படித்தார். 2008 இல் தான் அரசியலில் அடியெடுத்து வைத்தார். பா.ஜ.க. இளைஞரணித் தலைவரானார். பின்னர், 2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தன்னுடைய கருத்து உள்நோக்கத்துடன் கூறப்படவில்லை என்றும் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் நூபுர் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன் இச் சம்பவத்திற்குப் பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறி டெல்லி பொலிஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இதனிடையே, பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளும் வலுத்துள்ளன. திமுக சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவுச் செயலாளர் மஸ்தான் வெளியிட்ட அறிக்கையில், “நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை. அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவும் எதிர்ப்பு
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இக் கருத்துகளைக் கண்டித்துள்ளார். ‘முகம்மது நபிக்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கீழ்த்தரமான கருத்துக்களால், நமது மதிப்பிற்குரிய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை உலகத்தின் முன் மீண்டும் ஒருமுறை இழிவுபடுத்தியுள்ளது சங்பரிவார். மேலும் மதவெறி சக்திகளுக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.
பொலிஸ் அழைப்பாணை
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை ஜூன் 22 இல் ஆஜராகுமாறு மும்பை பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது.
அல் கைதா எச்சரிக்கை
இதனிடையே முகம்மது நபியை ‘அவமதிக்கும்’ யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் எனவும், அல் கைதாவின் தெற்காசிய கிளை எச்சரித்துள்ளது.
இந்திய துணைக்கண்டத்தின் அல்-கய்தா என தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் இந்த குழு இதுதொடர்பாக உருது மற்றும் ஆங்கிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “சில தினங்களுக்கு முன்னர் இந்துத்துவாவின் பிரசாரகர்கள் முகம்மது நபி குறித்தும் அவருடைய மனைவி ஆயிஷா குறித்தும் இந்திய தொலைக்காட்சி ஒன்றில் அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசியுள்ளனர். இதற்கு பதிலடியாக துடுக்குத்தனமான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துகளை கூறும் உலகின் வாய்கள், குறிப்பாக இந்துத்துவ தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ள இந்தியாவில் கொலைகள் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என அல் கைதா எச்சரித்துள்ளது.
மேலும், முகம்மது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு “மன்னிப்பு வழங்கப்படாது. இத்தகைய விவகாரத்திற்கு கண்டன வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வருத்தத்தின் மூலமாகவோ எதிர்வினையாற்றப்படாது” எனவும் அவை வன்முறை தாக்குதல்கள் மற்றும் பதிலடியால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அல் கைதாவின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.
அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவு
பாஜக தலைமை மற்றும் இந்திய அரசின் தலைமை இருவரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டியிருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி செய்யவில்லையென்றால் அரபு நாடுகள் மற்றும் ஈரானுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உருவாகும் என அவர்கள் கூறுகின்றனர்.
குவைத், கத்தார், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்கம் வகிக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடனான (ஜிசிசி) இந்தியாவின் வர்த்தகம் 2021ஆம் ஆண்டில் 87 பில்லியன் டொலராக உள்ளது. இலட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கோடிக்கணக்கிலான பணத்தை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். இந்தியாவின் எரிபொருள் இறக்குமதிக்கான முக்கிய ஆதாரமாக இந்நாடுகள் உள்ளன.
குவைட், கத்தார், சவூதி
அரேபியா, பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஈராக், பாகிஸ்தான், எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,
இந்தோனேசியா, ஜோர்தான், லிபியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான, ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும், இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்திய பிரதமராக 2014இல் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து நரேந்திர மோடி இந்நாடுகளுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்துவருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலும், ஜிசிசியுடனான விரிவான ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளமை இந்தியாவின் எதிர்காலத்திற்கு பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அரபு நாடுகள் கோருவது போல இந்திய அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.- Vidivelli