விமல் வீரவன்ச, வணக்கம் தோழரே!

0 486

எம்.எல்.எம். மன்சூர்

கடந்த மே 17 ஆம் திகதி நீங்கள் பாரா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­திய சுருக்­க­மான 12 நிமிட நேர உரை உங்கள் அர­சியல் வாழ்க்­கையில் நீங்கள் நிகழ்த்­திய முக்­கி­ய­மான உரை­களில் ஒன்று என்­பதில் சந்­தே­க­மில்லை. அச்­சந்­தர்ப்­பத்தில் உங்கள் குரலில் தொனித்த துய­ரத்­தையும், இய­லாமை உணர்­வையும் பார்த்த பொழுது, உங்­களைப் போன்ற ஒரு­வ­ருக்கே இந்­நாட்டில் இப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­பட முடி­யு­மானால், எத்­த­கைய அதி­கார பின்­பு­லங்­களும் இல்­லாத சாதா­ரண குடி­மக்கள் எந்த அள­வுக்கு பாது­காப்­பற்­ற­வர்­க­ளாக இருந்து வரு­கின்­றார்கள் என்ற அச்ச உணர்வே எமக்கு ஏற்­பட்­டது.

(நீங்கள் இப்­பொ­ழுது அர­சாங்­கத்­துக்கு வெளியில் இருப்­ப­தாக பாவனை செய்து கொண்­டி­ருந்த போதிலும்) ஜனா­தி­ப­திக்கு மிகவும் நெருக்­க­மா­னவர் என்­பது எல்­லோ­ருக்கும் தெரியும்; அத்­துடன் பொலிஸ், இரா­ணுவம் போன்ற அரசின் முக்­கி­ய­மான அங்­கங்­க­ளுடன் நெருக்­க­மான தொடர்­பு­களைப் பரா­ம­ரித்து வரு­பவர். உங்­க­ளு­டைய அபா­ர­மான வாக்­கு­வன்­மையைப் பயன்­ப­டுத்தி நீங்கள் தொடர்ச்­சி­யாக நிகழ்த்தி வந்த எழுச்­சி­யூட்டும் உரைகள் மூலம் (போர் இடம்­பெற்ற காலப் பிரிவின் போது) பாது­காப்புப் படை­யி­னரின் மனோ­தி­டத்தை நிலைக்கச் செய்­வ­தற்கும், தூண்­டு­வ­தற்கும் பெரும் பங்­க­ளிப்புச் செய்­தி­ருந்­தீர்கள் என்­பது முழு நாடும் அறிந்த விடயம்.

ஆனால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக கடந்த மே 9 ஆம் திகதி இரவு உங்கள் வீடு ஒரு வன்­முறைக் கும்­பலால் தாக்­கப்­பட்டு, உங்கள் பிள்­ளை­களின் பெறு­ம­தி­யான கல்வி உப­க­ர­ணங்கள் கொள்­ளை­யி­டப்­பட்ட பொழுது, அந்த கொடு­மையை பொலிசார் வெறு­மனே வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­த­தா­கவும், அந்த வன்­முறைக் கும்­ப­லி­ட­மி­ருந்து உங்கள் வீட்­டையும், பெறு­ம­தி­யான பொருட்­க­ளையும் பாது­காத்துக் கொள்­வ­தற்­கென கடைசி வரையில் இரா­ணுவம் அழைக்­கப்­ப­ட­வில்லை என்றும் கடும் விரக்தித் தொனியில் சொன்­னீர்கள்.

தோழர், மன்­னிக்க வேண்டும். இப்­ப­டி­யான உரைகள் நிகழ்த்­தப்­படும் சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்­டப்­படும் ஒரு கவிதை இருக்­கி­றது. அது புளித்துப் போன ஓர் உதா­ர­ண­மாக இருந்து வந்­தாலும் கூட, அதன் பொருத்­தப்­பாட்டைக் கருத்திற் கொண்டு இங்கு அதனை உங்­க­ளுக்கு நினை­வூட்ட வேண்­டிய நிர்ப்­பந்தம் எமக்கு ஏற்­ப­டு­கின்­றது:

‘முதலில் அவர்கள் சோச­லிஸ்­டு­களைத் தேடி வந்­தார்கள். நான் பேசாமல் இருந்தேன்; ஏனெனில், நான் ஒரு சோச­லிஸ்­டாக இருக்­க­வில்லை.

பின்னர் அவர்கள் தொழிற்­சங்கத் தலை­வர்­களைத் தேடி வந்­தார்கள். நான் பேசாமல் இருந்தேன்; ஏனெனில், எனக்கு எந்த ஒரு தொழிற்­சங்­கத்­து­டனும் தொடர்­பி­ருக்­க­வில்லை.
அதற்குப் பிற்­பாடு அவர்கள் யூதர்­களைத் தேடி வந்­தார்கள். நான் பேசாமல் இருந்தேன்; ஏனெனில், நான் யூத இனத்தைச் சேர்ந்­த­வ­னாக இருக்­க­வில்லை.
இறு­தி­யாக, அவர்கள் என்னைத் தேடி வந்­தார்கள்; அப்­பொ­ழுது எனக்­காகப் பேசு­வ­தற்கு யாருமே எஞ்­சி­யி­ருக்­க­வில்லை!

1930 களில் ஜேர்­ம­னியில் ஹிட்­லரால் தூண்­டப்­பட்ட இனத் துவேஷம் மற்றும் சிறு­பான்மை வெறுப்பு என்­ப­வற்றின் விளை­வாக இறு­தியில் பல இலட்­சக்­க­ணக்­கான யூதர்கள் கொல்­லப்­பட்­டார்கள். ஒட்­டு­மொத்த மனித குலத்தின் மனச்­சாட்­சி­யையும் உலுக்­கிய அந்த மாபெரும் துயர நிகழ்வு எடுத்து வந்த குற்­ற­வு­ணர்வில் கிறிஸ்­தவ மத­போ­தகர் ஒருவர் 1946 இல் எழு­திய கவிதை இது.

அதா­வது, தொடர்ச்­சி­யாக நாட்டில் அநி­யா­யங்கள் நடந்து கொண்­டி­ருக்கும் பொழுது, அவற்றைத் தடுக்க வேண்­டி­ய­வர்கள், தட்டிக் கேட்க வேண்­டி­ய­வர்கள் அவ்­வாறு செய்­யாது மௌனம் சாதித்தால் இறு­தியில் என்ன நடக்க முடியும் என்­ப­தனை அது சொல்­கி­றது.

‘இந்த அரா­ஜ­கத்தை அர­சாங்கம் தடுக்கத் தவ­றி­யது ஏன்’ என்­பதே நீங்கள் எழுப்பும் கேள்வி. மிகவும் நியா­ய­மான கேள்வி. அத்­துடன் இப்­ப­டி­யான ஒரு கேள்­வியை எழுப்­பு­வ­தற்கு மற்­ற­வர்­களைப் பார்க்­கிலும் உங்­க­ளுக்கு ஒரு தார்­மீக உரிமை இருக்­கி­றது.
முதலில் உங்கள் துய­ரத்தில் நாங்­களும் பங்­கேற்­கிறோம். இன்­னொ­ரு­வரின் வீடு­வா­சல்கள், சொத்­துக்கள் அழிக்­கப்­ப­டு­வதைப் பார்த்து எவ­ரா­வது சந்­தோ­சப்­பட்டால் அந்த நபர் கடும் மனச்­சி­தை­வையும், வக்­கிர புத்­தி­யையும் கொண்­டி­ருக்கும் ஒரு­வ­ரா­கவே இருக்க முடியும். நள்­ளி­ரவில் ஒரு வன்­முறைக் கும்பல் வந்து, தமது வீட்டை அடித்து உடைக்கும் பொழுது, அந்தக் குடும்­பத்தின் பெண்கள் மற்றும் பிள்­ளைகள் மீது அது எப்­ப­டி­யான பேர­திர்ச்­சி­யையும், அச்ச உணர்­வையும் ஏற்­ப­டுத்த முடியும் என்­ப­தனை எம்மால் ஊகிக்க முடியும்.

உங்கள் பாரா­ளு­மன்ற உரை 12 நிமி­டங்கள் அளவில் சுருக்­க­மா­ன­தாக இருந்து வந்த கார­ணத்­தி­னாலும், நீங்கள் அந்தச் சந்­தர்ப்­பத்தில் தீவி­ர­மாக உணர்ச்­சி­வ­சப்­பட்­டி­ருந்த கார­ணத்­தி­னாலும் இத­னுடன் சம்­பந்­தப்­பட்ட இன்னும் சில விட­யங்­களை கூற மறந்­தி­ருப்­பீர்கள் என நினைக்­கிறோம். அதா­வது, இதற்கு முன்­னரும் பல சந்­தர்ப்­பங்­களில் பொலீ­சாரும், இரா­ணு­வத்­தி­னரும் முற்­றாக முடக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் வன்­முறைக் கும்­பல்கள் எவ்­வித அச்­சமும் இல்­லாமல், சாவ­கா­ச­மாக வீதி­களில் இறங்கி, மக்­களின் வீடு வாசல்­க­ளையும், சொத்­துக்­க­ளையும், தொழில் நிலை­யங்­க­ளையும் அழித்து, அட்­ட­காசம் புரிந்­தி­ருக்­கி­றார்கள். ஒரு சில கொலை­க­ளையும் நிகழ்த்­தி­யி­ருக்­கி­றார்கள். அளுத்­கம (2014), கிந்தோட்டை (நவம்பர் 2017), அம்­பாறை (பெப்­ர­வரி 2018), திகன (மார்ச் 2018), மினு­வாங்­கொடை, குளி­யாப்­பிட்டி மற்றும் ஹெட்­டி­பொல (மே 2019) ஆகிய இடங்­களில் நிகழ்ந்த கொடூ­ரங்கள் இதற்­கான உதா­ர­ணங்கள்.

இவற்றைத் தூண்­டி­ய­வர்கள், வழி­காட்டிச் சென்­ற­வர்கள் மற்றும் நேர­டி­யாக தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்கள் யார் என்­பதைக் காட்டும் துல்­லி­ய­மான டிஜிட்டல் சான்­றுகள் மற்றும் CCTV பதி­வுகள் இருந்து வந்த போதிலும், எவரும் இது­வ­ரையில் அக்­குற்­றங்­க­ளுக்­காகத் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. மிக முக்­கி­ய­மாக, அந்த வன்­மு­றை­களின் போது தமது கட­மையைச் செய்யத் தவ­றிய பொலிஸ் அதி­கா­ரிகள் மீது எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. குறிப்­பாக, 2012 ஆம் ஆண்டின் பின்னர் தண்­டனை குறித்து துளியும் அச்­ச­மின்றி (Immunity) பகி­ரங்­க­மாக குற்­றங்­களை நிகழ்த்தும் ஒரு கலா­சாரம் எமது நாட்டில் வளர்ச்சி கண்டு வந்­தி­ருக்­கி­றது என்­பதை நீங்கள் நன்கு அறி­வீர்கள். அதன் இயல்­பான ஒரு நீட்­சி­யா­கவே மே 9 சம்­ப­வங்­களை நாங்கள் பார்க்­கிறோம்.
இது எமது ஒட்­டு­மொத்த அர­சியல் சமூ­கத்­தையும் பீடித்­தி­ருக்கும் ஒரு புற்­று­நோ­யாக இருந்து வரு­கின்­றது. அந்தப் புற்றை அறுவைச் சிகிச்சை செய்து முழு­மை­யாக அகற்­றாமல், அவ்­வப்­பொ­ழுது தோன்றும் சிறு சிறு காயங்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­பதால் மட்டும் எந்தப் பயனும் ஏற்­படப் போவ­தில்லை. அதா­வது, ஒட்­டு­மொத்த சித்­தி­ரத்­தையும் உதா­சீனம் செய்து தனி­யொரு சம்­ப­வத்தை மட்டும் (Missing the Wood for the Trees) சுட்­டிக்­காட்டி, ‘இந்த அரா­ஜகம் ஏன்’ என்று நீங்கள் ஆவேசக் குரல் எழுப்­பு­கி­றீர்கள்.

இப்­பொ­ழுது இன மத பேத­மில்­லாமல் நாட்டு மக்கள் அனை­வரும் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வன்­மு­றை­க­ளுக்கு இலக்­காகி, பெரும் இழப்­பு­களைச் சந்­தித்­தி­ருக்­கி­றார்கள். வர­லாற்றில் முதல் தட­வை­யாக தமது அணியைச் சேர்ந்த ஜனா­தி­பதி பத­வியில் இருக்கும் பொழுது, அர­சாங்கக் கட்­சியைச் சேர்ந்த முக்­கிய அர­சி­யல்­வா­தி­களின் வீடுகள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஓர் இருண்ட எதிர்­காலம் குறித்து ஒட்­டு­மொத்த இலங்கை மக்­க­ளுக்கும் விடுக்­கப்­பட்ட ஒரு பாரிய முன்­னெச்­ச­ரிக்­கை­யா­கவே இதனை நாங்கள் பார்க்­கிறோம்.

ஆகவே, மே 9 ஆம் திகதி பகல் கொழும்பு நக­ரிலும், இரவு நாடெங்­கிலும் நிகழ்ந்த சம்­ப­வங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்தி, சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் தண்­டிக்­கப்­பட வேண்­டு­மென்ற வேண்­டு­கோளை நாங்­களும் உங்­க­ளுடன் இணைந்து மீண்டும் வலி­யு­றுத்­து­கிறோம். அதே வேளையில், அதற்கு முன்னர் நாட்டில் இவ்­விதம் இடம்­பெற்­றி­ருக்கும் எண்­ணற்ற சம்­ப­வங்­களின் போது பாதிக்­கப்­பட்ட அனைத்து மக்­க­ளுக்கும் நீதியும், நிவா­ர­ணமும் வழங்­கப்­பட வேண்­டு­மென்ற வேண்­டு­கோ­ளையும் முன்­வைக்­கின்றோம்.

அடுத்து முக்­கி­ய­மான ஒரு கேள்­வியும் இங்கு இருக்­கின்­றது. பொலி­சாரும், இரா­ணு­வமும் ஜனா­தி­ப­தியின் கட்­ட­ளை­களை ஏற்றுச் செயற்­பட வேண்­டு­மென்­பது அர­சியல் யாப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் ஓர் ஏற்­பாடு. ஆனால், ஏதோ ஒரு கார­ணத்­தினால் உரிய நேரத்தில் அந்தக் கட்­ட­ளைகள் விடுக்­கப்­ப­டா­விட்டால் அல்­லது எத்­த­கைய கட்­ட­ளைகள் விடுக்­கப்­பட வேண்­டுமோ அதற்கு மாறான விதத்தில் கட்­ட­ளைகள் விடுக்­கப்­பட்டால் அல்­லது அர­சாங்­கத்தில் இரு அதி­கார மையங்கள் செயற்­படும் நிலை ஏற்­பட்டு, ஒன்­றுக்­கொன்று முர­ணான விதத்தில் கட்­ட­ளைகள் கிடைத்தால் பாது­காப்புத் துறை­யினர் எவ்­வாறு நடந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்கு வழி­காட்­டு­தலை வழங்கும் திட்­ட­வட்­ட­மான விதி­மு­றைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

நாட்டில் பாரிய வன்­முறைச் சம்­ப­வங்கள் வெடிக்கும் பொழுது, கொலைகள் நிகழ்ந்து கொண்­டி­ருக்கும் பொழுது, மக்கள் சொத்­துக்கள் அழிக்­கப்­படும் பொழுது அவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்­கென கட்­ட­ளைகள் வரும் வரையில் பொலிசார் பார்த்துக் கொண்­டி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. உட­ன­டி­யாக அவர்கள் செயற்­பட முடியும். அதற்­கான முழு­மை­யான அதி­கா­ரமும், பொறுப்பும் அவர்­க­ளுக்கு இருக்­கின்­றது. ஆனால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இலங்­கையில் கடந்த பல வருட கால­மாக இது இடம்­பெ­றவே இல்லை.

ஆகவே, இனிமேல் இத்­த­கைய சம்­ப­வங்கள் ஏற்­படும் பொழுது அவற்றைத் தடுக்கத் தவ­றினால் அந்­தந்தப் பிர­தே­சங்­களைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிகள், பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான டிஐஜி போன்ற உயர்­மட்ட அதி­கா­ரிகள் மற்றும் இறு­தியில் பொலிஸ் மா அதிபர் ஆகி­யோரை அவற்­றுக்கு நேர­டி­யாகப் பொறுப்புக் கூற வைப்­ப­தற்கும், அவர்கள் கடமை தவ­றி­யி­ருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை நடத்தி, தண்­ட­னை­களை வழங்­கு­வ­தற்கும் உட­ன­டி­யாக ஒரு சுயா­தீ­ன­மான பொறி­முறை உரு­வாக்­கப்­பட வேண்டும். அந்தக் கோரிக்­கையை உங்­களைப் போன்ற வலு­வான அர­சி­யல்­வா­திகள் இன்­றைய அர­சிடம் முன்­வைக்க வேண்டும். அதை விடுத்து மே 9 சம்­ப­வங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு மட்டும் தண்­டனை வழங்க வேண்­டு­மென நீங்கள் கோரிக்கை விடுப்­பதன் மூலம் இலங்­கையைப் பீடித்­தி­ருக்கும் இந்தப் புற்­று­நோயை ஒரு போதும் அகற்ற முடி­யா­தி­ருக்கும் என்­பதே எமது தாழ்­மை­யான அபிப்­பி­ரா­ய­மாகும்.
அந்தப் பொறி­முறை உரு­வாக்­கப்­ப­டாத வரையில்; இனி­மேலும் இத்­த­கைய அரா­ஜகச் செயல்கள் இலங்­கையில் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். மே 9 ஆம் திகதி இரவு கிட்டத்தட்ட 35 இற்கும் மேற்பட்ட அரசாங்கக் கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட அந்தச் சம்பவங்கள், பிறிதொரு நாளிரவு இதே விதத்தில் பொலிஸ் முடக்கப்பட்டிருக்கும் பொழுது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது பாய முடியும்; மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகவும் பலவீனமான ஒரு மதச் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட முடியும். அந்த ஆபத்து எப்பொழுதும் எம்மை எதிர்நோக்கியிருக்கின்றது.

ஆகவே, பேச்சு வன்மையும், மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய ஆளுமைப் பண்புகளையும் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற தலைவர்கள் இந்த பொறிமுறைக்காக உடனடியாக குரலெழுப்ப வேண்டும் என நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறான ஒரு கோரிக்கையை நீங்கள் அரச தரப்பிடம் முன்வைத்தால் மட்டுமே மே 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையைப் போன்ற ஓர் உரையை நிகழ்த்துவதற்கான தார்மீக உரிமையை நீங்கள் கொண்டுள்ளீர்கள் என்ற விடயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
நன்றி, வணக்கம்!

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.