நாட்டில் அடுத்து வரும் மாதங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அதற்கு முகங்கொடுப்பதற்குத் தயாராக இருக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் இரண்டு வேளை உணவு உட்கொள்கின்ற நிலைமை ஏற்படும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த நிலைமை ஏற்படக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். துரதிஷ்டவசமாக அந்த நிலை ஏலவே வந்துவிட்டது. மக்கள் இப்போது ஒரு வேளை உணவைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட திண்டாடி வருகிறார்கள். கொழும்பில் சமைப்பதற்கு விறகுகூட இல்லாத நிலையில், தனது வீட்டின் கட்டிலை உடைத்து அதனை விறகாகப் பயன்படுத்துகின்ற ஒரு சகோதரரின் காணொளி இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது. இதுவே நாட்டு மக்களின் இன்றைய நிலையாகும்.
இந்த நிலைமையிலிருந்து அரசாங்கம் நம்மை மீட்டெடுக்கும் என்ற எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்குவதாகவே பிரதமரின் இந்த உரை அமைந்துள்ளது. இந் நிலையில் பிரதமரின் இக் கருத்துக்களை விமர்சித்துக் கொண்டிருப்பதை விடுத்து, நாம் எதிர்நோக்கவுள்ள இந்தப் பஞ்சத்திற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதற்கான திட்டமிடல்களும் தயார்படுத்தல்களுமே இப்போதைக்கு அவசியமாகும்.
தற்போது இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் 57.4 வீதத்தினால் உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக பிள்ளைகளில் ஊட்டச்சத்துக்குறைபாட்டை ஏற்படுத்தும் என்றும் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இன்று ஒவ்வொரு வகுப்பறைகளிலும் பல மாணவர்கள் உணவு உட்கொள்ளாமலேயே பாடசாலைக்கு வருவதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்கம் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தும் உணவுத்திட்டமும் தற்போது செயலிழந்துள்ளது. எதிர்காலத்தில் அதுவும் நிறுத்தப்படும் ஆபத்தே நிலவுகிறது.
இவ்வாறான பின்னணியில் மக்களை வீட்டுத் தோட்டங்களைச் செய்யுமாறும் அவற்றின் மூலம் தங்களது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறும் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. அதேபோன்று பொது நிறுவனங்களின் காணிகள், மத தலங்களின் காணிகளிலும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு அவ்வப் பிரதேச மக்களின் பசியைப் போக்குவதற்கான திட்டங்களை முன்னெடுக்குமாறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறையளித்து அவர்களையும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுவது பற்றி அரசாங்கம் தீவிரமாக சிந்தித்து வருகிறது.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை சிலர் வேடிக்கையாகப் பார்ப்பதுடன் மாத்திரம் கடந்து போய்க் கொண்டிருக்கின்றனர். உண்மையில் நிலைமை மிகவும் பாரதூரமாகவே மாறிக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு வருடத்திற்கு 2.4 மில்லியன் மெற்றிக் தொன் அரசி தேவைப்படுகின்ற போதிலும் தற்போது நாட்டில் 1.6 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த பெரும்போக அறுவடை 2023 பெப்ரவரி மாதமே கிடைக்கும். அவ்வாறான நிலையில் இடைப்பட்ட காலப்பகுதியில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவும். அரிசி இருந்தாலும் அதற்குப் பாரிய விலை செலுத்த வேண்டி வரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனவேதான் ஆகக் குறைந்தது 2022 டிசம்பர் வரையான அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நாம் எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறோம் என்பதை ஒவ்வொரு குடும்பமும் திட்டமிட வேண்டியுள்ளது. தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்ட நிலையில், இறைவனைத் தவிர வேறு யாரும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை. அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இஸ்லாம் விவசாயத்தை ஊக்குவிக்கிறது. அதில் மிகுந்த அருள் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இந் நிலையில் பள்ளிவாசல்கள்தோறும் மஹல்லா ரீதியாக மக்களை வீட்டுத் தோட்டங்களின்பால் ஊக்குவிக்க வேண்டிய தேவையுள்ளது. அதேபோன்று பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு அவ்வப் பிரதேசத்திற்குத் தேவையான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் தேசிய சூறா சபை ஏற்கனவே வழிகாட்டல்களை வழங்கி வருகின்றமை பாராட்டுக்குரியதாகும்.
அடுத்து வரும் மாதங்களில் கையில் எவ்வளவு பணம் இருந்தும் பிரயோசனமிருக்காது. பொருட்களின் விலைகள் இப்போதிருப்பதை விடவும் பன்மடங்கு உயரப் போகின்றன. பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவும். மக்கள் எரிவாயு, எரிபொருளுக்கு மாத்திரமின்றி அரசி, மாவு, பாண், மரக்கறி போன்றவற்றுக்காகவும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை வரப்போகிறது. இதற்கு நாம் தயாராக வேண்டும். எனவேதான் எமது குடும்பம் பட்டினியில் வாடுவதைத் தடுக்க வேண்டுமானால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் திட்டமிட்ட வேண்டும். அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே வலியுறுத்துவதே எமது நோக்கமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு விரைவில் விடிவைத் தருவானாக.- Vidivelli