மின்ஸார் இப்றாஹீம்
சாதனைகள் பல கண்டு வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், சட்டத்துறையில் பிரவேசித்து கடந்த 2022 மே 23 ஆம் திகதியுடன் ஐம்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.
சட்டத்துறையில் பொன்விழா காணும் சட்டத்தரணி ஸுஹைர், 1972 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி அன்றைய பிரதம நீதியரசர் எச்.என்.ஜி பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் சி.பி. வல்கம்பாய ஆகியோர் முன்னிலையில் சட்டத்தரணியாகச் சத்தியப் பிரமாணம் செய்து உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தின் சட்டத்தரணியாகத் தனது சட்டச் சேவையை ஆரம்பித்தார்.
கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வாவினால் வரையப்பட்டு நாட்டின் உயர் சட்டமாக நிலைபெற்ற இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த முதலாவது குடியரசு சட்ட யாப்பின் கீழ் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட முதல் தொகுதியினராக உபாலி குணரத்னவும் எம்.எம். ஸுஹைரும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். சட்டத்தரணி ஸுஹைர், 1968 –- 1970 வரையான காலப்பகுதியின் இலங்கை சட்டக்கல்லூரி பழைய மாணவராக விளங்குகிறார். அப்போது காலஞ்சென்ற ஆசான் ஆர். கே. டபிள்யூ. குணசேகர சட்டக்கல்லூரியின் புகழ்பூத்த அதிபராக கடமையாற்றிமை குறிப்பிடத்தக்கதாகும்.
சட்டக் கல்லூரிக்கான பிரவேசத்தைப் பெற்றுக்கொண்ட போதே ஆசிய அறக்கட்டளை நிறுவனம் வழங்கும் புலமைப் பரிசிலையும் சட்டத்தரணி ஸுஹைர் பெற்றுக் கொண்டார். அந்த உதவித்தொகை 1968 முதல் 1970 வரையிலான காலப்பகுதியில் அவரது சட்டக் கல்வியை நிறைவு செய்வதற்கு போதுமான முழுச் செலவையும் உள்ளடக்கியிருந்தது. அவர் 1970 இல் சட்டக் கல்லூரி மாணவர் சங்கத்தின் ஆசிரியராகவும், சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மாணவர் மஜ்லிஸ் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டத்தரணி ஸுஹைர், இலங்கையின் பிரதம நீதியரசராகப் பணியாற்றிய வழக்கறிஞர் எஸ். சர்வானந்தா மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசரான வழக்கறிஞர் மெல்கம் பெரேரா ஆகியோரின் கீழ் பயிலுநராக பயிற்சி பெற்றவராவார்.
அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச வழக்கறிஞராக 1973 இல் இணைந்து கொண்டார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தூண்டுகோலாக அமைந்தது அவருடைய வாதாட்டத் திறமையேயாகும். ஒருமுறை சட்டத்தரணி ஸுஹைர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றவியல் மேன்முறையீட்டை அழகான முறையில் வாதாடியதை அவதானித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி பத்மநாதன் இராமநாதன், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து பணியாற்றுமாறு ஊக்குவித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு இவர் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். சிரேஷ்ட சட்டத்தரணி பி. இராமநாதன் பிற்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்று ஒய்வு பெற்றவர் என்பது தெரிந்ததே.
சட்டத்தரணி ஸுஹைர் பத்து வருடங்கள் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாகவும் சிரேஷ்ட அரச சட்டத்தணியாகவும் உயர்வு பெற்று கடமையாற்றினார். அதில் முதல் ஐந்து வருடங்கள் சிவில் வழக்குகள் தொடர்பிலும், இரண்டாவது ஐந்து வருடங்கள் குற்றவியல் வழக்குகள் தொடர்பிலும் சேவையாற்றினார். இவர் இலஞ்ச ஊழல் தொடர்பான வழக்குகள், கொலை வழக்குகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு வழக்குகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்காடுபவராக திகழ்ந்தார். அத்தோடு குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளிலும் இவர் அரச தரப்பில் ஆஜரானார். சட்டத்துறையில் ஆற்றிய சேவையின் அடிப்படையில் இவருக்கு 1981இல் சிரேஷ்ட அரச வழக்கறிஞர் பதவி உயர்வு கிடைக்கப்பெற்றது. இருந்தும் கூட 1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பதவியை இராஜிநாமா செய்த இவர், சுயாதீனமாகப் பணியாற்றும் சட்டத்தரணியாக சேவையாற்றத் தொடங்கினார்.
சட்டத்துறையில், குறிப்பாக கிரிமினல் வழக்குகள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் உள்ள சட்ட ஆவணங்களை வடிவமைப்பதிலும் கையாள்வதிலும் அவர் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.
இதற்கு மேலதிகமாக சமூக நலன்களை முன்னிலைப்படுத்தி அன்றைய முஸ்லிம் தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த ‘கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் ஒப் ஸ்ரீ லங்கா’ என்ற அமைப்பின் ஊடான பணிகளிலும் ஈடுபட்டார். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர் ஜயவர்தன தலைமையில் 1984 இல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இவர் பங்குபற்றினார். அத்தோடு சமூக மேம்பாட்டுக்கு உழைக்கும் வகையில் அன்றைய 17 முஸ்லிம் இளைஞர் அமைப்புகளை ஒன்றிணைத்து ‘பாமிஸ்’ என்ற தொண்டர் அமைப்பின் மூலம் தேசிய மட்டத்தில் பல்வேறு சேவைகளையும் முன்னெடுத்தார். இதன் ஊடாக முஸ்லிம்களின் குரலை ஒலிக்கச் செய்தார்.
இவ்வாறு சட்டத்துறையிலும் சமூக, அரசியல் துறைகளிலும் சேவையாற்றிக் கொண்டிருந்த சட்டத்தரணி ஸுஹைர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப்பினால் முன்மொழியப்பட்ட தேசியப் பட்டியல் மூலம் 1994 முதல் 2000 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். இவர் பல பாராளுமன்றக் குழுக்களிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஆட்சிக்காலமாகும்.
இவர் 2001 இல் ஜனாதிபதி சட்டத்தரணியானார். தற்போதும் உச்ச நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்குகளை எடுத்து நடத்துவதோடு நாட்டில் உள்ள ஏனைய நீதிமன்றங்களிலும் குற்றவியல் வழக்குகள், அடிப்படை உரிமை வழக்குகளையும் முன்னெடுத்து வழக்காடுவதில் செயற்பட்டு வருகிறார். சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு தொடர்ந்து கச்சிதமாக எழுதுவதிலும் விசேட திறன் கொண்ட வழக்கறிஞராக இவர் திகழ்கிறார்.
அதேநேரம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, 2001 ஜூலை 23 அன்று ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் எஸ். சர்வானந்தா தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.எஸ். சஹபந்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் ஆகியோரை உள்ளடக்கி, ‘1981–-1984 காலப் பகுதியில் இடம்பெற்ற இன வன்முறை தொடர்பான உண்மையை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு’வை நியமித்தார். மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவானது 1983 ஜூலையில் இடம்பெற்ற சிங்கள- தமிழ் கலவரம், யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கான பதியப்பட்ட சான்றுகள் (31.5.1981), யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தல்கள் (4.06.1981), ஜூலை கலவரத்துடன் தொடராக இடம்பெற்று வந்த இனக்கலவரங்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் (ஜூலை 25,26, 1983) என பல்கோணங்களில் விசாரணகளை மேற்கொண்டு அவை பற்றிய அறிக்கை இல III, 2003 ஆவணமாக (செசனல் பேப்பர்) அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. இந்த ஆணைக்குழுவிற்கு உதவியாக அரச சட்டத்தரணியும் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசருமான ஏ.எச்.எம்.டி நவாஸும் எஸ்.எம்.ஜே. சேனாரத்னவும் பணியாற்றினர்.
அதன் பின்னர் 2004 இல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (எஸ்.எல்.ஆர்.சி) தலைவராக நியமனம் பெற்ற சட்டத்தரணி ஸுஹைர் 2006 வரையும் அப்பதவியில் கடமையாற்றினார். இதே காலகட்டத்தில் கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஆளுனர்கள் சபை தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
இவ்வாறான சூழலில் 2006 இல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், ஈரானுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியை அடிப்படையாகக் கொண்டு இவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக 2007 டிசம்பர் முதல் இலங்கைக்கு ஈரான் சலுகை அடிப்படையில் பெற்றோலியத்தை வழங்க ஆரம்பித்தது. அதாவது பெற்றோலியத்தைப் பெற்று பயன்படுத்திய பின்னர் ஒவ்வொரு நான்கு மாத காலத்திற்கு பின்னரும் அதன் பெறுமதியை மாத்திரம் செலுத்த வேண்டும். இங்கு வட்டியோ வேறு எதுவும் கட்டணமாகவோ அறவிடப்படவில்லை. அதேநேரம் இந்த நான்கு மாத சலுகைக் காலம் நிறைவடையும் போது அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் மூன்று மாதகால சலுகை சிறிய மேலதிக கட்டணத்துடன் வழங்கப்பட்டு வந்தது. இதன் பயனாக அக் காலப்பகுதியில் 675 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (10 பில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேல்) இலங்கையில் கையிருப்பில் இருந்து வந்தது.
ஆனாலும் 2012 இல் நாட்டில் (இலங்கையில்) எழுந்த முஸ்லிம் எதிர்ப்பு பதற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அவர் தூதுவர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தாயகம் திரும்பினார். அதனைத் தொடர்ந்து தேசிய சூரா சபையில் உப தலைவராக இணைந்து முஸ்லிம்களின் நலன்களில் ஈடுபாடு காட்டினார். தேசத்திற்காகவும் சமூகத்திற்காகவும் அயராது தொண்டாற்றி வரும் சட்டத்தரணி ஸுஹைர், வெலிகம அரபா மத்திய கல்லூரி (1952-–1957), கொழும்பு 9 சென்ட் ஜோன்ஸ் கல்லூரி (1957-–1962) மற்றும் கொழும்பு சாஹிரா கல்லூரி (1963-–1965) ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.
பொன் விழா காணும் சட்டத்தரணி ஸுஹைர் அன்று போல் இன்றும் சட்டத்துறையில் தனது அளப்பரிய சேவையை தெடர்ந்து ஆற்றிவருகிறார்.- Vidivelli