கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
மாற்றம் மட்டுமே மாறாததென்பர். இன்றைய அறப்போராட்டத்தின் அடிப்படைக் கோரிக்கையும் இலங்கையின் அரசியல், பொருளாதார அமைப்புகளில் மாற்றம் வேண்டும் என்பதே. கோத்தாவே போ, 225 தேவையில்லை என்பனவெல்லாம் அந்த அடிப்படை மாற்றத்தினை அடைவதற்கான பாதைகளே ஒழிய அவைகளே முக்கிய இலட்சியங்களல்ல. போராளிகளின் அடிப்படை இலட்சியத்துக்கு சமூகத்தின் சகல இனங்களின் புத்திஜீவிகளிடையேயும் அறிவாளிகளின் மத்தியிலும் ஊடக வட்டாரத்தின் சில பகுதிகளிலிருந்தும் பௌத்த சங்கத்தினர் சிலரின் மத்தியிலும் ஆதரவு பெருகியுள்ள போதிலும், கடந்த சில வாரங்களாக, அதிலும் குறிப்பாக முன்னைய பிரதமர் இராஜினாமா செய்ததிலிருந்து, நடைமுறையிலிருக்கும் அமைப்புகளையே பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்ஹவை பிரதமராகக்கொண்ட சர்வகட்சி அரசாங்கம் இந்த முயற்சிகளின் ஒரு பிரதிபலிப்பு என்பதே இக்கட்டுரையாளரின் கருத்து. ஏன் இந்த அமைப்புமாற்றம் தேவைப்படுகின்றது? அதன் எதிரிகளும் நண்பர்களும் யாவர்? என்பன பற்றிய சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
எழுபது வருடகால அமைப்பின் தீங்கு
1948 இல் சுதந்திரம் கிடைத்தபோது பிரித்தானியரின் நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் முறையையே 1947ஆம் ஆண்டின் சோல்பரி அரசியல் யாப்பின் மூலம் இலங்கை பெற்றுக் கொண்டது. அந்த அரசியல் யாப்பில் பல்லினங்கள் வாழும் இலங்கையிலே பெரும்பான்மை இனத்தின் பாரிய ஆதரவுடன் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் சிறுபான்மை இனங்களை நசுக்காமல் இருப்பதற்காக பல பாதுகாப்புகள் புகுத்தப்பட்டிருந்தன. அந்த யாப்பின் 29ஆவது சரத்தை வாசித்தால் அவை எவை என்பதை அறிந்துகொள்ளலாம். பிரித்தானியர் ஆண்டபோதே சமஷ்டி அரசியல் வேண்டுமென சிறுபான்மைத் தலைவர்கள் போராடி இருந்தால் ஒருவேளை அது சாத்தியமாகி இருக்கலாம்.
அப்போது இந்தியாவில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் இனக் கலவரங்கள் பிரித்தானியரை சமஷ்டி அரசியலுக்கு இணங்கச் செய்திருக்கலாம். ஆனால் சோல்பரி யாப்பு கொண்டிருந்த பாதுகாப்புகளை நம்பிய சிறுபான்மை தலைவர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டனர். அது அவர்கள் விட்ட தவறா அல்லது அவர்களின் நாட்டுப்பற்றா என்பது விவாதத்துக்குரிய ஒரு விடயம். ஆனால் அதன் பின்னர் நடந்ததென்ன? எதை சோல்பரித்திட்டம் தடுக்க விரும்பியதோ அதுவே பூதம்போல் வெளிப்பட்டு இற்றைவரை ஆட்சிசெய்து இலங்கையை ஒரு பிச்சைக்கார நாடாகவும் பிளவுபட்ட நாடாகவும் மாற்றியுள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதம்
சிங்கள பௌத்த பேரினவாதம் 1950களிலிருந்தே அரசியலில் நுழையத் தொடங்கி 1956ஆம் வருடத் தேர்தலில் அதன் பூரணபலத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சிக்குவந்த எல்லா அரசாங்கங்களுமே சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தழுவியே ஆட்சி செய்தன. இந்த நாட்டின் பல்லின சமூக, கலாசார அமைப்பினைச் சிதறடித்து ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே இனம், ஒரே மொழி என்பதையே நோக்காகக்கொண்டு எல்லா அரசாங்கங்களும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ செயற்பட்டு வந்துள்ளன. அந்தக் கொள்கையின் பூரண செயல்வடிவமே ராஜபக்சாக்களின் ஆட்சி. ஆகவே ஒவ்வொரு அரசாங்கத்தினதும் வெளிப்படையான அரசியல், பொருளாதார, சமூக மேம்பாட்டுக் கொள்கைகள் வேறுபட்டிருந்தாலும் அவற்றின் அடித்தளமாக சிங்கள பௌத்த பேரினவாதமே செயற்பட்டு வந்துள்ளதை மறுக்க முடியாது.
இந்தப் பேரினவாதத்தின் மிகப்பெரும் தீங்கு என்னவெனில் ஆட்சியிலிருப்பவர்கள் எக்குணம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் சூறையாடித் தமது சொந்த நலன்களையும் குடும்ப வளங்களையும் குவித்தாலும், அதற்காக அவர்கள் மற்ற இனங்களின் மனித உரிமைகளைப்பறித்து உயிர் கொலைகளையும் நடத்தி மற்றும் ஊழல்களிலும் ஈடுபட்டு, ஏன் நாட்டையே பிறருக்கு அடைமானம் வைத்தாலும், ஈற்றில் நடிப்பிலாவது அவர்கள் பௌத்த போர்வையைப் போற்றிக்கொண்டு பக்தர்களாகவும் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பவர்களாகவும் பௌத்த சங்கத்தினரை மதித்துக் கௌரவித்து அச்சங்கத்தினரின் நலன்களைப் பாதுகாப்பவர்களாகவும் இருந்தால் அவர்களின் குறைகளெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விடும். இத்தனைக்கும் இலக்கணமாக அமைந்தது ராஜபக்ச ஆட்சி.
ஒரு பக்கத்தில் பௌத்த மதத்தை அரசியல் பிரசாரத்தினுள் கொண்டுவந்து, அப்பாவி பௌத்த வாக்காளர்களை அதன் மகுடியில் மயங்கச்செய்து, தேர்தல்களை வென்று ஆட்சிக்கு வந்தபின் மறுபக்கத்தில் பௌத்தத்தின் காருண்யத்தையும் சாந்தி போதனையையும் ஆட்சித் தத்துவங்களையும் பௌத்தரின் ஏழ்மை வாழ்வையும் புறந்தள்ளும் அரசியல் தலைவர்களையே இப்பேரினவாதம் வளர்த்துள்ளதை யாராலும் மறுக்க முடியுமா?
அது ஒருபுறமிருக்க, பௌத்த சிங்கள ஆட்சியையே குறிக்கோளாகக் கொண்டு சிறுபான்மை இனங்களை அதிலும் தமிழினத்தை நசுக்க எடுத்த அரசியல் முயற்சிகள் ஈற்றில் ஓர் ஆயுதப் போராகமாறி சுமார் கால் நூற்றாண்டு காலமாக இழுபறிப்பட்டு ஈற்றில் ராஜபக்சாக்களின் ஆட்சியில் பாரிய கடனுக்கு ஆயுதங்களை வாங்கி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து ஆட்சியினர் வெற்றிகொண்டாடினர். அந்தக் கடன்சுமையே மேலும் மேலும் பெருகி இன்று இலங்கையின் பொருளாதாரத்தை வங்குறோத்தாக்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியுமா? அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனர்களின் கைக்குள் சிக்கியுள்ளதும் இந்தக்கடன் சுமையினாலேயே என்பதையும் மூடிமறைக்க முடியுமா? அரசன் இன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு இலங்கை அரசாங்கங்கள் ஒரு சிறந்த உதாரணம். கடன்பட்ட இலங்கை கலங்காமல் இருக்க முடியுமா? இத்தனை நடந்தும் பெரும்பான்மை இனம் பௌத்த பிரசார மகுடியில் மயங்கி தமிழ் எதிரிகளை ஒழித்துவிட்டோம் என்று வெற்றிக் கும்மாளம் கொட்டியது ஒரு புதுமையே. அந்தக் கும்மாளம் இன்று ஒப்பாரியாக மாறி உலகெங்கும் கேட்கிறது.
விழித்தெழுந்த சிங்கள பௌத்த இளைஞர்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட கோவிட் நோயும் அதனாலேற்பட்ட உலகப் பொருளாதார மந்தமும், உக்ரைன் நாட்டினை ரஷ்யா படைகொண்டு தாக்கியதும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை மேலும் பெருக்கலாயின. அதனிடையே ராஜபக்ச அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் எரிகின்ற நெருப்பிலே எண்ணெய்யை ஊற்றியதுபோல் அமைந்தது. அந்த நெருக்கடிகளை இங்கே பட்டியலிட்டால் கட்டுரை மிகவும் நீண்டு விடும். அவை எல்லாருக்கும் தெரிந்தவையே. எரிவாயுக்காக மணிக்கணக்கிலே நுகர்வோரின் நீண்ட வரிசையில் கொதிக்கும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் கால்கடுக்க நின்று மயங்கி விழுந்து மரணித்த அந்த உடல்கள் பொருளாதார நெருக்கடிகளைப்பற்றிய காவியங்களை எதிர்காலத்தில் பாடும். இந்தப் பொருளாதார நெருக்கடிகள் பௌத்த பேரினவாதத்தைப்போன்று சிறுபான்மை இனங்களை மட்டும் வாட்டவில்லை. பெரும்பான்மை இனத்தையும் சேர்த்தே வாட்டியது. அந்தச் சமத்துவத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் சர்வமக்களினதும் நலனையும்பேணி, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து, சட்டத்துக்குமுன் யாவரும் சமமே என்ற அடிப்படையில் குற்றவாளிகள் யாராய் இருந்தாலும் அவர்களின் குற்றங்களுக்குத் தண்டனைகளை உடனுக்குடன் வழங்கி, பௌத்தனின் போதனைகளுக்கமைய ஆட்சிசெய்திருந்தால் இயற்கை வளம்பெற்ற இந்தப் புண்ணிய பூமி அதன் புராதன மகிமையையும் புகழையும் இழந்திருக்குமா? அன்றொரு நாள் ஈழத்து உணவு காவிரிப்பூம் பட்டினத்தையே வாழச் செய்ததல்லவா? ஏன் இன்று அது தமிழகத்திடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தவேண்டும்? இந்தக் கேள்வியே புதிதாக வளர்ந்துள்ள பௌத்த இளைஞர் சமுதாயத்தை வாட்டத் தொடங்கியது. எவ்வாறு பௌத்தத்தின் பெயரை உச்சரித்துக்கொண்டு ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி நாட்டைச் சூறையாடியுள்ளனர் என்பதற்கு விடைதேடினர் விழிப்படைந்த அந்த இளவல்கள். அவர்களின் தேடலுக்குக் கிடைத்த விடையே அடிப்படை மாற்றம் வேண்டும் என்ற மகத்தான கோரிக்கை. அந்தக் கோரிக்கையால் உதித்ததே காலிமுகத்திடல் அறப்போராட்டம்.
அவர்கள் தேடுகின்ற மாற்றம் தனியே கோத்தாபய ராஜபக்ச வெளியேற வேண்டும், 225 நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் வீடு செல்லவேண்டும் என்பதல்ல. இந்த அரசியல் அமைப்பின் அடித்தளமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதம் முற்றாக நீக்கப்பட்டு உண்மையான ஜனநாயக ஆட்சி மலரவேண்டும் என்பதே. அந்த ஒரு கோரிக்கை நாட்டின் சகல இனங்களினதும் உயிர் நாடியைத் தொட்டுவிட்டது என்பதையே நாடெங்கிலும் பரவத்தொடங்கிய அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் எடுத்துக்காட்டின. காலிமுகத்திடல் சர்வ இனமக்களும் சமமாக வாழும் நவ இலங்கை என்ற ஒரு விருட்சம் வளர்வதற்கு நாட்டப்பட்ட ஒரு சிறு பூண்டு. அந்தத் தவப்பூண்டுக்குச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர் என்ற எந்தப் பேதமுமின்றி, ஆண்களும் பெண்களும் இளையோரும் முதியோரும் ஒன்றாக இணைந்து நீர் வார்ப்பதை ஒலி, ஒளிப் பதிவுகள் உலகெலாம் பரப்புவதை காணும்போதும் கேட்கும்போதும் நெஞ்சம் உருகுகின்றது. இந்த எழுச்சியைத் தோற்றுவித்த சிங்கள பௌத்த இளையோருக்கு நன்றி கூறுவதற்கும் வாழ்த்துக்கள் வழங்குவதற்கும் இக்கட்டுரையின் வார்த்தை வளம் போதாது.
எதிரிகளின் எதிர் போராட்டம்
இந்த மாற்றத்தால் பாதிக்கப்படவிருக்கும் பழமை விரும்பிகள் எதிர் போராட்டமொன்றை இப்போது ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒன்பதாம் திகதி அறப்போராளிகளுக்கு எதிராக முடக்கிவிடப்பட்ட வன்செயல்கள் உலகத்தின் வெறுப்பை ஆட்சியாளர்களுக்குத் தேடிக்கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. எனவே வன்முறையை இறுதி ஆயுதமாக வைத்துக்கொண்டு அன்பு முகமூடியொன்றை அணிந்து இந்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளது. இப்போராட்டத்தின் காவியத் தலைவனாக வெளிப்பட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. காலிமுகத்திடலை ஆயுதப்பலத்தினால் கலைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தாபய காவல் துறையினருக்குக் கட்டளை பிறப்பித்துள்ளார். அதனையே ஆமோதித்து தற்காலிகப் பிரதமர் விக்கிரமசிங்கவும் அறப்போராளிகளுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். ஆடு நனைகிறதென்று ஓநாய் கதறுவதைப்போல் இருக்கிறது இவர்களின் கபட நேசம். ஆனால் அறப்போராளிகளின் அடிப்படை மாற்றம் இத்தலைவர்களினதும் அவர்களின் ஆட்சிக்கும் ஆப்பு வைக்கும் என்பதை அவர்கள் நன்கறிவர். எனவேதான் வங்குறோத்தடைந்துள்ள பொருளாதாரத்தை உடனடியாகக் கட்டியெழுப்பவேண்டும் என்பதை வலியுறுத்தி அடிப்படை மாற்றத்துக்கு இதுவல்ல நல்ல நேரம் என்பதை கூறாமற்கூறி சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு பூச்சாண்டி அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். அதற்கு ஆதரவு வழங்க எத்தனையோ மந்திரிகள் எதிரணியிலிருந்து தாவிப் பாய்ந்துள்ளனர். இது ஒரு ஸ்திரமற்ற அரசாங்கம் என்பதை நாடு விரைவில் உணரும்.
அதன் உண்மையான நோக்கம் பழமையை அதாவது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அத்திவாரத்தை உடையாமல் காப்பாற்றுவதே. உதாரணமாக, அறப்போராளிகள் வேண்டுவதுபோன்று நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை முற்றாக நீக்கி அந்த அதிகாரங்களை முன்னர் இருந்தபடி நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்க யாப்பு ரீதியான மாற்றத்தைக் கொண்டுவருவதாக விக்கிரமசிங்க கூறியிருந்தார். ஆனால் இன்று நடந்ததென்ன? அவர் அறிமுகப்படுத்திய 21ஆவது யாப்புச்சட்டத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை முற்றாக நீக்காமல் அவருக்குத் தொடர்ந்தும் சில அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருக்க இடம்கொடுத்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் பாதுகாப்பு அமைச்சு இவரின் கைகளிலேதான் இருக்கும் என்று நம்ப இடமுண்டு. இது என்ன கண்துடைப்போ? ஜனாதிபதி கோத்தாபய பௌத்த சாசனத்தைக் காக்கவென்று வந்த ஒரு பாதுகாவலன். பௌத்த பேரினவாதத்தின் வெற்றியே அவரின் வெற்றியும், அவரின் தமையனின் மொட்டுக்கட்சியின் வெற்றியும். பேரினவாத்தின் காவலர்களோ காவியுடை காலாட்படை வீரர்கள். அந்த வீரர்களின் சாகசங்களை நாடே அறியும். அவர்களின் ஆதரவால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் அடிப்படை மாற்றத்தை விரும்புமா? அடிப்படை மாற்றம் ஏற்பட்டால் அவர்களின் மொட்டுக் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? அதேபோன்று அவர்களின் கட்சியில் வெற்றிபெற்ற அநேகரின் அரசியல் எதிர்காலம் அந்தோ கதியாகும்.
ரணிலின் தலைமையில் வெளிநாட்டு உதவிகளைப்பெற்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கஷ்டங்களிலே சிலவற்றையாவது குறைத்துவிட்டால் அதனை பழமையின் வெற்றியாக விளம்பரப்படுத்தி அறப்போராட்டத்தை முறியடித்து விடலாம் என்று கங்கணம் கட்டியுள்ளனர் சர்வகட்சி அரசாங்கத்தினர். ஆனால் இந்த அரசாங்கம் உறுதியற்றதொன்று. மக்களின் ஆதரவில்லாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நீண்டகாலத் திட்டங்களை இதனால் வகுக்க முடியாது. வெளிநாட்டு உதவிகளும் வெள்ளம்போல் வந்து குவியப்போவதில்லை. பணவீக்கம் உயரும். விலைவாசி அதிகரிக்கும். பற்றாக்குறை நீடிக்கும். பட்டினி மக்களை வீதிக்குக் கொண்டுவரும். ஆட்சியில் அமர்ந்துள்ள மாற்றத்தின் எதிரிகள் புறமுதுகு காட்டி ஓடும் நாள் வெகுதூரத்தில் இல்லை. பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற்று மக்களின் ஆதரவுடன் ஓர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.
மாற்றத்தின் நண்பர்கள்
அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளந்தலைமுறையைப் பற்றிய சில உண்மைகளை அறிந்து கொள்ளுதல் அவசியம். இந்தத் தலைமுறை உலகளாவிய ஒன்று. இன்று உலகெங்கும் நடைபெறும் மனித உரிமை, சுற்றுச்சூழல், பருவகால மாற்றம், பெண்ணுரிமை போன்ற மகத்தான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள் இளைய தலைமுறையினர். அவர்கள் வாழும் உலகும் இன்றைய முதியவர்கள் இளையோர்களாக வாழ்ந்த உலகும் தரத்தால் வேறுபட்டவை. தனது கையடக்கத் தொலைபேசியின் ஒரு பொத்தானை அமுக்கிவிட்டு உலக நடப்புகளை அறிந்துகொண்டு உலகமெங்கும் தொடர்பு கொள்ளும் சக்திகொண்ட ஒரு இளைய சமுதாயம் இது. அந்த விழிப்புற்ற, வீறுகொண்ட ஒரு உலக சமுதாயத்தின் பிரதிநிதிகளே அறப்போராளிகள். அவர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. பூகோளமயவாக்கம் படைத்துவிட்ட ஒருசில நற்படைப்புகளில் ஒன்றே இந்தச் சந்ததி. ஆண்களையும் பெண்களையும் சமமாக உள்ளடக்கிய இந்த இளம்படை இயங்குவதைக் காணக்கிடைத்ததே இன்றைய முதியவர்களின் நற்பாக்கியம் என்று கூறுவேன். வாழ்க இவர் சந்ததி. வளரட்டும் இவர் பணி.
இலங்கையின் மொத்த வாக்காளர் பட்டியலில் சுமார் மூன்றிலிரண்டு பகுதியினர் 40 வயதுக்குக் குறைந்தவர்கள். ஆகவே அதில் பெரும்பான்மையினர் இத்தலைமுறையினர். அதுமட்டுமல்ல, மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் சற்று அதிகமானவர்கள் பெண்களே. எனவே இளந்தலைமுறைக்குள் சரிபாதியாவது பெண்கள். இன்றைய பெண்கள் விட்டில் பறவைகளல்ல பொற்கூண்டுக்குள் பறப்பதற்கு. அறப்போராட்டத்தில் அவர்கள் குதித்திருப்பது ஒரு வகையில் அவர்களது உரிமைப் போராட்டத்தையும் பிரதிபலிக்கிறது. அந்தப் போராட்டத்தில் முஸ்லிம் பெண்களைக் காணும்போது பெருமையாக இருக்கிறது.
ஆனால் இவர்களுக்கும் இவர்களின் போராட்டத்துக்கும் அரசியல் ரீதியான நண்பர்கள் யார்? இதுவரை அறப்போராளிகள் எந்தவிதமான அரசியல் சாயத்தையும் பூசிக்கொள்ளாமல் நடுநிலையில் நின்று எல்லா அரசியல் ஆதரவாளர்களையும் அணைத்தது அவர்களின் அரசியல் முதிர்ச்சியை உணர்த்துகிறது. எனினும் இன்று அவர்களின் போராட்டத்தை நசுக்க எதிரிகள் கூட்டமொன்று நட்பு வேடம் பூண்டு சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில் வெளிப்பட்டுள்ளது. எனவே மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையின் உண்மையான அரசியல் நேசர்களை இனங்காணும் கடமை எழுந்துள்ளது.
அரசியலிலும் பொருளாதார அமைப்பிலும் அடிப்படை மாற்றமின்றேல் இந்த நாட்டுக்கு நீண்டகால சுபீட்சம் இல்லை என்பதில் மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி, சோஷலிச முன்னணி ஆகியவை ஏகோபித்த கருத்துடையனவாக உள்ளன. ஆனால் அவர்களுக்குள்ளே ஒரு பெரும் குறைபாடுண்டு. முற்போக்குக் கொள்கைகளைக்கொண்ட இடதுசாரிகளிடையே தத்துவ ரீதியான வேறுபாடுகள் ஒரு தீராத நோய். முட்டையிலே மயிர் பிடுங்க நினைத்து தம்மைத்தாமே பலவீனப்படுத்திக்கொண்டு ஆளும் சந்தர்ப்பங்களை இழப்பது இவர்களது ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது. இது ஒரு நாட்சென்ற கதை. ஆனால் இன்று இலங்கை இருக்கும் நிலையில் இம்முன்னணிகள் சொற்சிலம்பு ஆடிக்கொண்டிருப்பது மன்னிக்க முடியாததொன்று. இவர்களுக்கு இளைய தலைமுறையினருடன் உறவு உண்டென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த உறவு அரசியல் அடிப்படையில் வளர்ச்சி பெற வேண்டுமானால் இந்த மூன்று அணியினரும் ஏகோபித்த ஒரு செயல் திட்டத்துடன் இளந்தலைமுறையினரை அணுகி அவர்களின் பலத்துடன் மக்களின் ஆதரவை நல்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம். நடைபெறுமா?
“உங்களை நீங்களே மாற்றும்வரை இறைவனும் உங்களைத் தொடான்” (அல்-குர்ஆன்)
–Vidivelli