போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் குறித்து கிராமத்தவர்கள் கவனம் செலுத்த வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘சிறுமி ஆயிஷாவை கொடூரமாக கொலை செய்தவர்கள் அது யாராக இருந்தாலும் எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அத்தோடு இவ்வாறான கொடூர செயல்களைத் தடுப்பதற்கு குறிப்பாக போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் தொடர்பில் கிராமத்தவர்கள் உன்னிப்புடன் கவனம் செலுத்த வேண்டும்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் கிராமம் அட்டுலுகமவுக்கு விஜயம் செய்து, சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். பின்பு அங்கு குழுமியிருந்த கிராமத்தவர்கள் மத்தியில் பேசுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, அட்டுலுகம கிராமத்தில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ள சிறுமியின் கொலை தொடர்பில் முழு இலங்கை மக்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்கள் அது யாராக இருந்தாலும் எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் அனைவரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
நான் இப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இச்சம்பவம் தொடர்பில் கலந்துரையாடினேன். இச்சம்பவம் தொடர்பான பல தகவல்கள் தனக்குக் கிடைத்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார். அந்தத் தகவல்களின் அடிப்படையில் இன்னும் இரண்டொரு தினங்களில் இறுதி முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த மர்மக் கொலை தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கொலை தொடர்பில் விடயங்களை தேடிக் கண்டுபிடிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகள், சி.ஐ.டி. விசாரணைக் குழுவினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்களென நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறான கொடூர செயல்களைத் தடுப்பதற்கு குறிப்பாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் தொடர்பில் கிராமத்தவர்கள் உன்னிப்புடன் கவனம் செலுத்த வேண்டும். நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேசப்படுகிறது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை பொலிஸாரும் சிவில் சமூகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.- Vidivelli