பயங்கரவாதத் தடைச்சட்டம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை அதிலிருந்து மீண்டு வரமுடியாத கரும்பக்கத்திற்குள் தள்ளுகின்றது
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா
(நா.தனுஜா)
பயங்கரவாதத் தடைச்சட்டமானது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாதளவிற்கு அவர்களை சட்டரீதியான கரும்பக்கத்திற்குள் தள்ளியிருக்கின்றது.
நான் ஒரு சட்டத்தரணியாகவும் பெருமளவான சட்ட உதவி மற்றும் அனைவரினதும் அவதானத்தைக்கொண்ட நபராக இருந்தபோதிலும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டமை மிகவும் கடினமான விடயமாகவே இருந்தது. இருப்பினும் அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள பலர் அதற்கு எதிராகப் போராடக்கூடிய சக்தியைக் கொண்டிராதவர்களாக இருப்பதாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
சிவில் சமூக அமைப்புக்களின் உலகளாவிய கூட்டணி என்ற அமைப்பிற்கு வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அந்நேர்காணலில் கூறியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
நான் கைதுசெய்யப்பட்டமையானது அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் நடத்தப்படும் முறையை விமர்சனத்திற்கு உட்படுத்துகின்ற தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம்கள் சிலரை அடக்குவதுடன், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் அவர்கள்மீது பழிசுமத்துவதற்கான முயற்சியின் ஓரங்கமாக இருக்கக்கூடும். இப்போது விடுதலையாகி இருப்பதென்பது மீண்டும் பிறந்ததைப்போன்று உணரச்செய்கின்றது. நான் எனது வாழ்க்கையை மெதுவாக மீளக்கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றேன். நான் சிறைப்படுத்தப்பட்டமை எனது குடும்பத்தாரின் அன்றாட வாழ்க்கைமீது மிக ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரினது வாழ்க்கையும் சுமார் இருவருடகாலமாக ஒரே இடத்தில் நின்றுவிட்டது.
ஆனால் பிணையில் விடுதலையாகி இருப்பதென்பது அத்தனை இலகுவான விடயமல்ல. நான் எப்போதும் எனது வழக்கு விசாரணைகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கரிசனையுடன் இருக்கின்றேன்.
அடுத்ததாகப் பயங்கரவாதத் தடைச்சட்டமானது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாதளவிற்கு அவர்களை சட்டரீதியான கரும்பக்கத்திற்குள் (இக்கட்டான சூழ்நிலைக்குள்) தள்ளியிருக்கின்றது. நான் ஒரு சட்டத்தரணியாகவும் பெருமளவான சட்ட உதவி மற்றும் அனைவரினதும் அவதானத்தைக்கொண்ட நபராக இருந்தபோதிலும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டமை மிகவும் கடினமான விடயமாகவே இருந்தது. இருப்பினும் அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள பலர் அதற்கு எதிராகப் போராடக்கூடிய சக்தியைக் கொண்டிராதவர்களாக உள்ளனர்.
அவர்கள் எம்மைத் தனிப்பட்ட ரீதியிலும், ஓர் சமூகமாகவும் அமைதிப்படுத்த முயற்சித்தார்கள். அந்தவகையில் நான் கைதுசெய்யப்பட்டமையானது உலகின் பல்வேறு நாடுகளிலும் சட்டத்தரணிகள் கைதுசெய்யப்படும் சம்பவங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்றே கூறவேண்டும். எம்மை நிறுத்துவதற்காகவும், அமைதிப்படுத்துவதற்காகவும், ஏனையோர் மத்தியில் அச்சத்தை விதைப்பதற்காகவும் அவர்கள் எம்மைக் கைதுசெய்தார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் எனக்குக் கிடைக்கப்பெற்ற ஆதரவிற்கும், என்னை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபரை இணங்கக் காரணமாக அமைந்த உள்ளக மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கும் நன்றியுடையவனாக இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.– Vidivelli