கொள்கலன்களில் எரிபொருள் எடுத்துச்சென்ற விவசாயிகளை கைது செய்ய பொலிஸார் தீவிர முயற்சி
வவுனியாவில் சம்பவம்; ம.உ.ஆணைக்குழுவில் முறைப்பாடு
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் விவசாய தேவைகளுக்கென எரிபொருளை வைத்திருந்த விவசாயிகளை பொலிஸார் கைது செய்ய முயற்சிப்பதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அத்துடன் இது தொடர்பில் பிரதேச பள்ளிவாசல் நிர்வாகத்தினால் தேசிய பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 28 ஆம் திகதி வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளை கொள்கலன்களில் பெற்றுச் சென்றுள்ளனர். எரிபொருளின்றி விவசாய நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள, ட்ரக்டர் வாகனங்களை கொண்டு வந்து எரிபொருள் நிரப்ப முடியாது என்பதாலேயே இவ்வாறு கொள்கலன்களில் எரிபொருளைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
எனினும் இதனை சட்டவிரோதமான செயல் எனக் கூறி, மறுநாள் அதிகாலை இவ்வாறு எரிபொருளைப் பெற்றுச் சென்றவர்களின் வீடுகளுக்குச் சென்று பொலிசார் அவற்றை பலாத்காரமாக எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமது விவசாய தேவைகளுக்கென வைத்திருக்கும் எரிபொருளை சட்டவிரோதமானதாக கருத முடியாது என்றும் வாகனங்களில் எரிபொருளை வைத்திருந்தால் அவற்றை இரவு வேளையில் திருடிச் செல்வதாலேயே தாம் கொள்கலன்களில் வைத்திருப்பதாகவும் ட்ரக்டர்களைக் கொண்டு சென்று எரிபொருள் நிரப்ப முடியாது எனவும் விவசாயிகள் இதன்போது பொலிசாரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதன்போது அங்கு பொலிசாருக்கும் பொது மக்களுக்குமிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. இந் நிலையில் பொலிசார் கொண்டு செல்ல முற்பட்ட எரிபொருள் கலன்களை பொது மக்கள் மீண்டும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் அங்கிருந்து சென்ற பொலிசார் பின்னர் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் சட்டத்தரணிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.– Vidivelli