இஸ்ரேலுக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தை ஜெரூசலத்திற்கு நகர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்

0 656

ஆசிய நாட்டு அயல் நாடுகளுடன் பல தசாப்தகால கொள்கையில் விரிசலை ஏற்படுத்தக்கூடியதும், ஆசிய அயல் நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான ஆபத்துடைய டெல் அவிவில் அமைந்துள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றுவதா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கலந்துரையாடலில் ஈடுபட்டதாக குறித்த விடயத்துடன் தொடர்புடைய இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இங்கு அமைச்சரவை கூடியபோது இஸ்ரேலுக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தை ஜெரூசலத்திற்கு நகர்த்துவது தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்ட போதிலும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் அதிகாரம் வழங்கப்படாததால் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவர் இதனை தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய புனித நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் தீர்மானத்திற்கு ஒருங்கிசைவாக அவுஸ்திரேலிய தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெரூசலத்திற்கு மாற்றுவதற்கு தான் விரும்புவதாக கடந்த ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் அமெரிக்கா தனது புதிய தூதரகத்தை ஜெரூசலத்தில் திறந்து வைத்தது. இந்த நடவடிக்கை இஸ்ரேலுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பலஸ்தீனர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, பரவலாக அரபு நாடுகள் மற்றும் மேற்கின் நட்பு நாடுகள் மத்தியில் மனக் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதற்கு சிரேஷ்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் ஆதரவாக இருந்தாலும் தூதரகத்தை மாற்றுவது தொடர்பில் உடன்பாடற்றவர்களாகக் காணப்படுகின்றனர் என ‘தி அவுஸ்திரேலியன்’ செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் இவ்வாரம் அறிவிக்கப்படுமென ‘தி அவுஸ்திரேலியன்’ குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதன் மூலம் அவுஸ்திரேலியப் பிரதமர் மொறிசன் தனக்கு ஆதரவான பழமைவாத பின் ஆசன உறுப்பினர்களை மகிழ்ச்சிப்படுத்த எதிர்பார்க்கின்றார் . ஆனால், உலகின் மிகப்பெரும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அண்டை நாடான இந்தேனேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் வெறுப்பை சந்திக்கும் செயலாக இது இருக்கும்.

பலஸ்தீனம் சம்பந்தப்பட்ட விவகாரம் இந்தோனோசியாவில் மிகக் கூருணர்வுமிக்க விடயமாகும். இஸ்ரேல் தொடர்பில் அவுஸ்திரேலியா தனது திட்டங்களை உறுதிப்படுத்ததாத வரை இந்தோனோசியா அவுஸ்திரேலியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு மறுத்து வருகின்றது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையேயான மிகப் பெரும் முட்டுக்கட்டையாக ஜெரூசலத்தின் அந்தஸ்து காணப்படுகின்றது.

1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட கிழக்குப் பிரதேசம் உள்ளடங்கலாக முழு நகரத்தையும் இஸ்ரேல் அதன் தலைநகராகக் கருதுகின்ற அதேவேளை பலஸ்தீனர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் காஸா பள்ளத்தாக்கை சர்வதேசத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் உருவாக்க எதிர்பார்க்கும்  சுதந்திர தேசத்தின் தலைநகராக கிழக்கு ஜெரூசலத்தை கருதுகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.