அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் நீக்கம்
பாராளுமன்ற செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அறிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரப் அக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்ற செயலாளர் மற்றும் எஸ்.எம்.எம்.முஷர்ரப்புக்கும் கட்சியின் செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எம்.முஷர்ரப் கட்சியின் விதிமுறைகளை மீறியதனாலும் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டதனாலும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுபைர்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
கட்சி முஷர்ரப்புக்கு எதிராக மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கையினை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் உயர்பீடம் விசாரணை குழுவாக மாறி இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பூரண விசாரணையையடுத்தே அவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.– Vidivelli