(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் இவ்வருடம் ஹஜ் யாத்திரை இடம்பெறமாட்டாது என்ற தீர்மானம் பொருத்தமானதாகும் என்றாலும் தீர்மானம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தரப்பினரும் மார்க்க அறிஞர்களைக் கலந்துரையாடியிருக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவும்,பத்வா குழுவும் ஒன்று கூடி ஆராய்ந்ததன் பின்பு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் “நாட்டின் பொருளாதார நெருக்கடியினைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஆனால் மார்க்கம் தொடர்பான விடயங்களில் உலமாக்களுடன் ஆராயாமல் மேற்கொள்ளும் தீர்மானம் அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதாக அமையாது என்றார்.- Vidivelli