அட்டுளுகமவில் சிறுமி பாத்திமா ஆயிஷா கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2022.05.30 ஆம் திகதி வெளியான திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம். இது குற்றவாளியை இனங்காண்பதற்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
கொடதெனியாவின் சேயா சதெவ்மி தொடர்பான சோகக் கதை படிப்படியாக நினைவிலிருந்தும் தூரமாகிக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு 7 வருடங்களுக்கு முன்பு ஆறுவயதான சேயா நித்திரை கொள்ளும் கட்டிலில் இருந்து களவாக தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இன்று அவள் உயிருடன் இருந்திருந்தால் 13 வயது யுவதியாக இருந்திருப்பாள்.
சேயா மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்டமை தொடர்பில் கொண்டையா எனும் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கொண்டையா தொங்கவிடப்பட்டு பொலிஸாரினால் உண்மையை வரவழைப்பதற்காக அடிக்கப்பட்டபோது தான் சேயா மீது பலாத்காரம் பிரயோகித்து அதன்பின்பு கொலை செய்ததாக ஏற்றுக்கொண்டார்.
ஆனால் உண்மை இதுவல்ல. உண்மையான கதை என்னவென்றால் சேயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது கொண்டையா அல்ல. கொண்டையாவின் மூத்த சகோதரர் சமன் ஜயலத் ஆவார். இந்தச் சம்பவத்தை எவரிடமும் தெரிவிக்கக்கூடாது என சகோதரன் சமன் ஜயலத் கொண்டையாவிடம் உறுதி மொழி பெற்றுக்கொண்டார். கொண்டையா எவ்வளவுக்கு மடையன் என்றால் பொலிஸாரின் அடிகளுக்குப் பயந்து சிறுமியை தானே பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டான். இலங்கை பொலிஸ் மதிநுட்பம் மிக்கது என்று கூறப்பட்டாலும் எதனையும் முறையாக செய்து கொள்ள முடியாத ஒன்றாகும். இப்போது முறையாக வழக்கொன்றினைக் கூட அவர்களாக தாக்கல் செய்ய முடியாதுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்றின் முன்னிலையில் அவமானத்துக்கு உள்ளாகிறார்கள்.
ஏதாவதொரு குற்றச் செயல் தொடர்பான விசாரணையை விரைவில் முடிவுறுத்துவதற்கான தேவை பொலிஸாருக்கு ஏற்பட்டால் அவர்கள் பாதையில் செல்லும் ஏவராவது ஒரு மனிதனை கைது செய்து கொண்டு வருகிறார்கள். அம்மனிதனை எலும்புகள் உடையும் வகையில் தாக்கி அவனிடமிருந்து பொய் வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இது தொடர்பாக உவமானக் கதையொன்றைக் கூறலாம்.
ஒரு நாள் மனிதரொருவர் காட்டுக்குச் சென்ற போது கரடியொன்றினால் கொலை செய்யப்பட்டு உண்ணப்பட்டார். கரடியைப் பிடித்துக்கொண்டு வந்து வாக்கு மூலமொன்றினைப் பதிவு செய்தபின் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் காட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து ஒரு முயலை கைது செய்து கொண்டு வந்தனர். அந்த முயலை பலவாறு தாக்கி தான் அந்த மனிதனை கொலை செய்து சாப்பிட்டதாக ஏற்றுக்கொள்ளுமாறு பலவந்தப்படுத்தினர். முயலும் தான் மனிதனைக் கொன்று சாப்பிட்டதாக வாக்கு மூலம் வழங்கியது. கொண்டையாவுக்கும் நடந்தது இதுதான்.
கொண்டையாவுக்கு அறிவிருந்தால் பொலிஸாருக்கு எதிராக வழக்கொன்றினைத் தாக்கல் செய்து நஷ்டஈடு பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். சமன் ஜயலத் தூக்குத் தண்டனைக்குள்ளாகி மரண தண்டனை அமுலில் இல்லாததால் சிறைச்சாலையில் இருக்கிறார். பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் புரியும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது கட்டாயமாக்கப்படவேண்டுமென நாம் இதற்கு முன்பும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தோம்.
மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவர்களை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் புதிய கயிறு ஒன்று பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டது. சிலவேளை அந்தக்கயிறு தற்போது உபயோகிக்க முடியாத அளவுக்கு பழுதடைந்திருக்கலாம்.
கடந்த 27 ஆம் திகதி பண்டாரகம அட்டுலுகமயில் கோழி இறைச்சி வாங்குவதற்கு கடைக்குச் சென்ற பாத்திமா ஆயிஷா எனும் 9 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. இது பற்றி பெற்றோர் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்தனர். அடுத்த நாள் காலையில் சிறுமியின் சடலம் வீட்டுக்கு அண்மித்த சதுப்பு நிலப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.
அட்டுலுகம அல்கஸ்ஸாலி வித்தியாலயத்தின் மாணவியான ஆயிஷா சுறுசுறுப்பான சிறுமியாவார். இவ்வாறான சிறுமியொருவரை கோழியிறைச்சி வாங்குவதற்காக கடைக்கு அனுப்பிய அவளது தாயையும் தந்தையையும் சவுக்கால் அடிக்க வேண்டும் என நாம் முதலில் தெரிவிக்க விரும்புகிறோம்.
அடுத்து இந்த சம்பவத்தின் குற்ற நிலைமையை நாம் நோக்குவோம். பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டு அல்லது மேற்கொள்ளப்படாது சிறிய பிள்ளையொன்று கொலை செய்யப்படும் போது அந்தச் சிறுவனது அல்லது சிறுமியினது சடலம் அவர்களது வீட்டுக்கு அண்மித்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்படுவதே உலக குற்றச் செயல் வரலாறாகும்.
இவ்வாறல்லாத சந்தர்ப்பம் மிகவும் குறைவாகும். இவ்வாறல்லாத சந்தர்ப்பங்களில் காணாமற்போகும் சிறுவன், சிறுமிகளின் சடலங்கள் ஒருபோதும் கிடைக்கப் பெறுவதில்லை. கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் அவளது வீட்டுக்கருகில் கண்டு பிடிக்கப்பட்டால் அந்தக் கொலையைச் செய்தவர் அருகில் வசிக்கும் ஒருவராக இருப்பதற்கு 75 வீதமான வாய்ப்பு உள்ளது.
ஆயிஷா சென்ற பாதையை மோப்பமிட்டுச் சென்ற பொலிஸ் நாய் கோழிக்கடைக்கருகில் நின்றது. சிறுமி ஆயிஷா இறப்பதற்கு முன்னைய இரவு அணிந்திருந்த ஆடையையே பொலிஸ் நாய் மோப்பமிட்டது. ஆயிஷா காணாமற்போன பின்பு முகநூல் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. சிறுமி ஆயிஷா புறக்கோட்டை பஸ் நிலையத்தில் பெண் ஒருவருடன் இருப்பதாகவே அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பொலிஸ் விசாரணைகள் ஒரு வகையில் குழப்பமடைய முடியும். இந்தப்பதிவினையேற்றியவர் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட வராக இருந்தால் சிறுமியின் வீட்டுக்கருகில் சோதனைகளை மேற்கொள்ளாது பொலிஸாரை புறக்கோட்டை பஸ்நிலையத்துக்கு அனுப்பி வைப்பது குற்றவாளியின் இலக்காக இருக்கலாம்.
சேயா சதெவ்மியின் கொலையுடன் கொண்டையாவை தொடர்புபடுத்தி கொடதெனிய பொலிஸார் ஆடிய நாடகத்துக்கு சமமாக அட்டுலுகம பொலிஸார் நாடகமாடாவிட்டால் பாத்திமா ஆயிஷாவின் கொலை தொடர்பில் உண்மையான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.- Vidivelli