மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மத் நஷீட் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புபட்ட தரப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் ராஜபக் ஷ குடும்பத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நஷீட், அவர்களை மாலைதீவுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பதற்கு முனைவதாக மாலைதீவு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இலங்கையில் முக்கிய தரப்புகளுடன் சந்திப்பு
இந்த வார ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நஷீட், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கையின் நெருங்கிய நட்பு நாடான மாலைதீவின் சபாநாயகர் என்ற வகையில் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வதேச நாடுகளின் உதவிகளை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான விடயங்களை தான் ஒருங்கிணைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளமைக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகம்மத் நஷீதை நான் பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இச் சந்திப்பு தொடர்பில் நாமல் ராஜபக்ச எம்.பி. வெளியிட்டுள்ள குறிப்பில், “மாலைதீவும் இலங்கையும் நாடுகளாக மட்டுமல்ல, மக்களாகவும் ஒரு சிறந்த நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன. கடினமான காலங்களில் நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்திருக்கிறோம். எங்கள் சார்பாக சர்வதேச சமூகத்தை அணுகி நிவாரணத்தை ஒருங்கிணைத்து உதவ முன்வருவதற்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் முன்வந்து இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவது இதுவே முதல் தடவையாகும்.
தான் வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்கவுள்ளதாக நஷீட் குறிப்பிட்டுள்ள போதிலும் எவ்வாறான உதவிகளை அவர் கொண்டுவரவுள்ளார் என்பது பற்றிய எந்தவித விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனிடையே, இலங்கைக்கு நஷீட்டினால் எந்தவித உதவிகளையும் கொண்டுவர முடியாது என மாலைதீவின் அரசியல் பிரமுகர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மாலைதீவுக்கே உதவிகளைக் கொண்டுவர முடியாத நஷீட்டினால் எவ்வாறு இலங்கைக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, நஷீட் இலங்கைக்கு வந்திருப்பது, மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை மாலைதீவுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைப்பதற்கே என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை இலங்கை மற்றும் மாலைதீவு அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.
‘மோல்டீவ்ஸ் ஜேர்னல்’ எனும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் சிக்குப்பட்ட நிலையில் காணப்படும் மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக மாலைதீவிற்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் முகமட் நஷீட் ஈடுபட்டுள்ளார்.
மகிந்த உதவி கோரினார்
தனது பதவியை இராஜினாமாச் செய்த பின்னர் மகிந்த நஷீட்டின் உதவியை நாடினார். தொலைபேசி வழியாக உரையாடிய மஹிந்த, இலங்கையில் பதற்றநிலை தணியும்வரை மாலைதீவில் தானும் குடும்பத்தினரும் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டார் என மாலைதீவின் அரசாங்க அதிகாரியொருவர் மோல்டீவ்ஸ் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் சுற்றுலாத்துறை பெரும்கோடீஸ்வரர் சம்பா முகமட் மூசா என்பவரின் இடத்தில் மகிந்த ராஜபக்சவை தங்கவைக்க மாலைதீவு முதலில் திட்டமிட்டது. இருவருக்கும் நல்ல நெருக்கம் உள்ளது. எனினும் மூசா நம்பமுடியாதவர் என்பதால் நஷீட் அதனை நிராகரித்துள்ளார்.
இந்தியாவின் சோனு சிவ்டசானி என்பவருக்கு சொந்தமான ‘சொனேவா பியுசி’ என்ற இடத்தில் மகிந்த ராஜபக்ச சொந்த வீட்டை வாங்க முடியும் என்ற யோசனையை நஷீட் முன்வைத்துள்ளார்.
சோனு சிவ்டசானி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். 12 மில்லியன் டொலருக்கு மகிந்த ராஜபக்சவிற்கு தனது தனிப்பட்ட மாளிகையை விற்க அவர் சம்மதித்துள்ளார். மேலும் இன்னுமொரு மாளிகையையும் 3 மில்லியன் டொலருக்கு விற்க தீர்மானித்துள்ளார். அதனை மகிந்த ராஜபக்சவின் குடும்ப பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தவுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச குடும்பம் ஆறு அறைகள் கொண்ட மாளிகையை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது – 24000 சதுர அடி- இங்கு 18 பேர் தங்கலாம், இதுதவிர சகல ஆடம்பர வசதிகளும் உள்ளன.
சர்வதேச உதவியை ஒருங்கிணைப்பதே நஷீடின் ஆரம்ப உறுதிமொழியாக காணப்பட்டாலும், மகிந்தவை மாலைதீவிற்கு கொண்டுசெல்வது குறித்த அவரது பரப்புரை காரணமாக சர்வதேச உதவி ஒருங்கிணைப்பு பின்தள்ளப்பட்டுள்ளது.
ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இலங்கையிலிருந்து வெளியேற அனுமதிக்கவேண்டும் என நஷீட் தொடர்ந்தும் பரப்புரை செய்து வருகின்றார்.
சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்போது அவர் அமைதியையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்தார், இந்த சந்திப்புகளில் அவர் பழிவாங்குவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை நீதிமன்றம் ராஜபக்சவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளது. அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை காணப்படுகின்றது.
ராஜபக்ச பாதுகாப்பாக வெளியேறுவதற்காக பல்வேறு தரப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதே இலங்கையில் நஷீட்டின் பணி என மாலைதீவு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு பதிலாக நஷீட்டின் அரசியல் நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்க மகிந்த இணங்கியுள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றார் நஷீட்
மகிந்த ராஜபக்ச தனக்கு மாலைதீவில் அடைக்கலம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நஷீட் தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது தான் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு மகிந்த தனக்கும் தனது குடும்பத்தவர்களிற்கும் மாலைதீவில் அடைக்கலம் வழங்குமாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என வெளியான தகவல்கள் தவறானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மாலைதீவு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் மாலைதீவில் உள்ளன என தெரிவித்துள்ள அவர் மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவியை பெற்றுக்கொடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன், இலங்கையின் உள்விவகாரங்களை இலங்கை மக்கள் தீர்த்துக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவுடன் மகிந்த விவகாரம் குறித்து ஆராயவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்ச ஆகியோரின் கடவுச்சீட்டு பிரதிகளை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள மாலைதீவின் ஊடகவியலாளர் ஒருவர், இப் பிரதிகள் ஏன் நஷீட்டுக்கு வழங்கப்பட்டன எனக் கேள்வியெழுப்பியுள்ளார். எனினும் அவ்வாறு தான் எவருக்கும் கடவுச் சீட்டு பிரதிகளை வழங்கவில்லை எனவும் தனது கடவுச் சீட்டு தற்போது நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நாட்டுக்கு நன்மைகளைக் கொண்டு வரப் போகிறதா அல்லது அவர் தனது நெருங்கிய நண்பரான ராஜபக்ச குடும்பத்தை இலங்கையிலிருந்து மீட்டுச் செல்லத்தான் வந்தாரா என்பதை அடுத்து வரும் நாட்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.- Vidivelli