வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடக் கூடாது

0 417

ஏ.ஆர்.ஏ.பரீல்

ஆட்­சி­யா­ளர்­களின் தவ­றான கொள்­கைகள் மற்றும் முறை­யான பொரு­ளா­தார முகா­மைத்­து­வ­மின்மை கார­ண­மாக நாடு இன்று பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளது. எரி­வாயு, எரி­பொருள் மற்றும் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் தட்­டுப்­பாடு கார­ண­மாக மக்கள் இன்­னல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் வர்த்­த­கர்கள் பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்டும் என மனி­த­வள மற்றும் வேலை­வாய்ப்பு திணைக்­க­ளத்தின் மேல­திக பணிப்­பாளர் நாயகம் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் விடி­வெள்­ளி­யுடன் கருத்து பரி­மா­றிக்­கொள்­கையில் தெரி­வித்­த­தா­வது; ‘எமது முஸ்லிம் வர்த்­த­கர்கள் இச்­சூழ்­நி­லையில் அத்­தி­யா­வ­சிய பொருட்­களை பதுக்­காமல் நியா­ய­மான விலையில் இன­ பே­த­மில்­லாமல் மக்­க­ளுக்கு விற்­பனை செய்ய வேண்டும். இத­னையே எமது மார்க்­கமும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களை பதுக்கி வைத்து தட்­டுப்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி அதனை கூடு­த­லான விலைக்கு விற்று அந்­தப்­ப­ணத்தை ஸதக்கா கொடுப்­பதும் பாவ­மான காரி­ய­மாகும். இவ்­வா­றான ஸதக்கா இறை­வனால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது.
நியா­ய­மான விலைக்கு பொருட்­களை விற்று அந்த இலா­பத்தில் ஸதக்கா கொடுப்­பதே நன்­மை­யாக அமையும். நாடு எதிர்­நோக்­கி­யுள்ள நெருக்­கடி நிலை­மையில் கொள்ளை இலாபம் பெறு­வது பாவ­மாகும். இவ்­வி­ட­யத்தில் முஸ்லிம் வர்த்­த­கர்கள் முன்­மா­தி­ரி­யாக இருக்­க­வேண்டும். இதுவே இறை­வனின் அருட்­கொ­டை­யாக அமையும்.

அத்­தோடு முஸ்­லிம்கள் விவ­சா­யத்­திலும் நாட்டம் கொள்ள வேண்டும். விவ­சாயம் பெரிய தர்­ம­மாகும். நவீன முறை­களைக் கையாண்டு உணவுப் பொருட்­களை உற்­பத்தி செய்­யலாம். கிரா­மப்­பு­றங்­க­ளிலும் நகர்­ப்பு­றங்­க­ளிலும் விவ­சா­யத்தில் ஈடு­ப­ட­மு­டியும். நகர்­ப்பு­றங்­களில் வசிப்­ப­வர்கள் விவ­சாய நிலம் இல்­லா­விட்டால் தங்கள் வீட்டின் மாடி­களில் உரப் பைக­ளிலும், பிளாஸ்டிக் உப­க­ர­ணங்­க­ளிலும் தங்­க­ளுக்குத் தேவை­யான விவ­சாய உற்­பத்­தி­களை மேற்­கொள்­ளலாம்.

இலங்கை நிர்­வாக சேவை சங்கம் பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் கிராம அதி­கா­ரி­களின் ஊடாக விவ­சா­யத்தை ஊக்­கு­விக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. நாட்டில் தட்­டுப்­பாடு நிலவும் விவ­சாய உண­வுப்­பொ­ருட்­களை உற்­பத்தி செய்­வ­தற்கு விவ­சாய மற்றும் பிர­தேச செய­லக அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உல­மா­ சபை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் வக்­பு­சபை பள்­ளி­வா­சல்கள் ஊடாக முஸ்­லிம்­களை விவ­சா­யத்தில் ஊக்­கு­விக்க முடியும். ஆலோ­ச­னை­களை வழங்க முடியும். ஏனைய மதத்­த­வர்­க­ளையும் இத்­து­றையில் இணைத்துக் கொள்­ளலாம்.

அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் தீர்­வுகள் கிட்ட வேண்­டு­மென்றால் உல­மாக்­களும் புத்­தி­ஜீ­வி­களும் முஸ்­லிம்­களைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இன்று மக்கள் தங்கள் சுய­ந­லன்­க­ளுக்­கா­கவே அர­சியல் செய்­கி­றார்கள். பாரா­ளு­மன்­றத்­துக்கு தகு­தி­யற்­ற­வர்­களைத் தெரிவு செய்­கி­றார்கள். பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பப்­ப­டு­ப­வர்­க­ளுக்குத் தங்கள் கடமை என்­ன­வென்று தெரி­ய­வில்லை.

தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் தொடர்பில் உலமா சபையும், புத்தி ஜீவி­களும் ஆராய்ந்து அவர்­களில் தகு­தி­யா­ன­வர்கள் பற்றி மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும். ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளுக்கும் இத்­தெ­ளி­வு­களை வழங்க வேண்டும். அவர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­ட­வேண்டும்.

உள்­ளூ­ராட்­சி­சபை, மாகா­ண­சபை மற்றும் பாரா­ளு­மன்­றத்­துக்கு தகு­தி­யற்­ற­வர்­களே பிர­தி­நி­தி­க­ளாக தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள். இந்­நி­லைமை மாற வேண்டும். இவ்­வி­ட­யத்தில் எல்லா சமூ­கத்­தி­னரும் பிழை­வி­டு­கி­றார்கள். எனவே வாக்­கா­ளர்­கள் மீதுள்ள பொறுப்பு தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

தகு­தி­யா­னவர்­களை பிர­தி­நி­தி­க­ளாக பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்பிவிட்டு விமர்சிப்பதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை. பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் எங்கு போகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமலிருக்கிறது. எதிர்­கா­லத்தில் அர­சி­யலில் மாற்­றங்கள் நிக­ழ­வேண்­டு­மென்றால் கிராம, நகர மட்­டத்தில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று விழிப்­பு­ணர்வு உரு­வாக்­கப்­ப­ட ­வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.