ஏ.ஆர்.ஏ.பரீல்
நாடு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு திணறிக் கொண்டிருக்கிறது. அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியாதநிலையில் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
எரிபொருள், எரிவாயு, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு நிலவிவரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளார்கள். எரிபொருள் நிலையங்களில் மக்கள் நாட் கணக்கில் வரிசைகளில் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இவற்றுக்கான தீர்வுகளுக்கு முஸ்லிம்கள் எவ்வாறு பங்களிப்பு செய்ய முடியும். அவர்களின் அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் இடம் வினவினோம். அவரது கருத்து வருமாறு :
“முஸ்லிம்கள் ஆன்மிக ரீதியில் தர்மத்தின் ஊடாக பொருளாதார ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக நாட்டின் அரசியல் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக எமக்கு கிடைக்கும். எமது முயற்சிகள் மூலம் சிறந்த எதிர்காலத்தை நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்க நாமனைவரும் பங்குதாரர்கள் ஆகுவோம். பிரச்சினைக்கு தீர்வு வழங்குபவர்களாக மாறுவோம்.
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு ஆன்மிக ரீதியாக நாம் முகங்கொடுக்கவேண்டும். சோதனைகள் அல்லாஹ்வின் அனுமதியில்லாது வந்தடையாது என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இந்நிலையில் யாருக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை அதிகமாக இருக்குமோ அல்லாஹ் அவர்களுக்கு வழிகாட்டுவான்.
இந்தப் பிரச்சினைகளுக்கு யார் காரணமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த பதிலை அல்லாஹ் வழங்குவான். யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த பதில் வழங்கப்படும். அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடைபெறாது. எனவே அல்லாஹ்வின் மீது நாம் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இச்சூழலில் நாம் துஆ செய்ய வேண்டும். குறிப்பாக பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
பாவமன்னிப்பு மூலம் அல்லாஹ் எமது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறான். பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்கு அல்லாஹ் தீர்வுகளை வழங்குகிறான். அந்த அடிப்படையில் நபிகள் நாயகத்தின் மீது நாம் அதிகமாக ஸலவாத்து சொல்ல வேண்டும்.
இந்தப் பிரச்சினைகளை அல்லாஹ் மூலமே தீர்த்து வைக்க முடியும். அத்தோடு பொருளாதார பிரச்சினைகளுக்கு நாம் எவ்வாறு முகங்கொடுக்க முடியும்? எமது பொருளாதாரத்தை நாம் சரியாக கட்டமைத்துக் கொள்ள வேண்டும். செலவுகளை இயன்றளவு குறைக்க வேண்டும். சிக்கனமாக செலவு செய்யவேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். எந்தெந்தவகையில் நேர்மையாக பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக விவசாயத்தில் நாம் கூடியளவு கவனம் செலுத்த வேண்டும். கால் நடை வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடவேண்டும்.
ஜனநாயக ரீதியாக அரசியலில் தொடர்புபட வேண்டும். அரசியல்வாதிகளின் மோசடிகள் காரணமாக நாம் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அரசியல் மாற்றத்தில் ஜனநாயக முறையில் நாம் ஒவ்வொருவரும் பங்குதாரராக வேண்டும். நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் எங்களுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளது. நாம் தூய்மையாக, கட்சிசார்பற்ற முறையில் நேர்மையான அரசியல் மாற்றம் வரவேண்டுமெனவும், எதிர்காலத்தில் நல்லவோர் அரசியல் யாப்பு உருவாகவேண்டும் என்பதற்காக உழைக்க வேண்டும்.
சிறார்களுக்கு அவர்களது கல்விக்காக தர்மத்தின் ஊடாக உதவிகள் செய்ய வேண்டும்.
ஆன்மிக ரீதியாக, தர்மத்தின் ஊடாக பொருளாதார ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக நாம் இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
எமது முயற்சிகள் மூலம் சிறந்த எதிர்காலத்தை நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்க நாமனைவரும் பங்குதாரர்கள் ஆவோம். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குபவர்களாக மாறுவோம் என்றார்.- Vidivelli