காதி நீதிமன்ற கட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
காதி நீதிபதிகள் போரம் புதிய நீதியமைச்சரிடம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
நாட்டில் காதிநீதிமன்ற கட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளமையாலும் காதி மேன்முறையீட்டு மன்றத்துக்கு மூன்று வருடங்களுக்கும் மேலாக செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாமையினாலும் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளது. புதிய நீதியமைச்சராகப் பதவியேற்றுள்ள நீங்கள் இவற்றுக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என காதிநீதிபதிகள் போரத்தின் துணைத்தலைவர் இப்ஹாம் யெஹ்யா நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காதிநீதிபதிகள் போரத்தின் துணைத்தலைவர் இப்ஹாம் யெஹ்யா இது தொடர்பில் நீதியமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்திலே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நீங்கள் நீதியமைச்சராக பதவியேற்றமை குறித்து நாம் மகிழ்கிறோம். முன்பு நீங்கள் நீதியமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் காதிநீதிபதிகளின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினீர்கள். அவர்களது கொடுப்பனவுகளை அதிகரித்தீர்கள். காதிநீதிமன்ற கட்டமைப்பில் நீண்ட காலமாக பிரச்சினைகள் நிலவுகின்றன. இவற்றை விரைவில் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
நாட்டில் 65 காதிநீதிமன்றங்கள் உள்ளன. 65 காதிநீதிபதிகளில் 20 பேர் பதவி இராஜினாமா, அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அல்லது பதவி காலாவதியாகி விட்டமை காரணமாக வெற்றிடம் நிலவுகின்றன. தற்போது நீண்ட காலமாக இந்த காதி நீதிமன்ற பிரிவுகளின் செயற்பாடுகள் அருகிலிருக்கும் காதிநீதிமன்றங்களால் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் காதிநீதிபதியொருவர் இரண்டு அல்லது மூன்று நீதிப்பிரிவுகளில் கடமை செய்ய வேண்டியுள்ளது. இது வேலைப்பளு மிக்கதாகும். இந்த 20 வெற்றிடங்களுக்கு நிரந்தரமாக காதிநீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கை நீதிச்சேவைஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவில்லை.
மேலும் 45 காதிநீதிபதிகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியுடன் காலாவதியாகிறது. இவற்றில் 25 காதி நீதிப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தாலும் நேர்முகப் பரீட்சை நடத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாமதங்களுக்கு காதிநீதிபதிகளே காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
காதிநீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எந்தப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம். பல நீதிப் பிரிவுகளில் காதி நீதிபதி வெற்றிடம் நிலவுவதால் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏனைய பகுதியிலுள்ள காதிநீதி மன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
காதிகள் மேன்முறையீட்டு மன்றுக்கு கடந்த 3 வருட காலமாக செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. அப்பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் மேன்முறையீட்டு வழக்குகள் அதிகம் தாமதமாகின்றன. இப்பதவிக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் அனுபவமுள்ள தகுதியான முஸ்லிம் ஒருவர் தாமதமின்றி நியமிக்கப்பட வேண்டும்.
அத்தோடு முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கும், காதி நீதிபதிகளுக்கும் பயன்படும் வகையில் ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட வேண்டும். இது பயனுள்ளதாக அமையும். இக்குழுவில் பதிவாளர் நாயகம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர், நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதிகள் பிரிவின் பிரதிநிதி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், வக்பு சபையின் தலைவர், காதி நீதிபதிகள் போரத்தின் பிரதிநிதிகள், திருமணப் பதிவாளர் ஒருவர் அங்கம் வகிக்கலாம்.
காதிநீதிமன்ற கட்டமைப்பை மீண்டும் செயற்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli