(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அக்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகினார்கள். ஒழுக்காற்று விசாரணை கொழும்பிலுள்ள காரியாலயத்தில் இடம் பெற்றது.
கட்சியின் நிபந்தனைகளை மீறி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் 2022 ஆம் ஆண்டின் தேசிய வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஸாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மூவரும் தங்கள் சட்டத்தரணிகள் மூவருடன் ஒழுக்காற்று விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். என்றாலும் தாங்கள் சட்டத்தரணிகளுடன் ஆஜராவதாக ஏற்கனவே அவர்கள் கட்சியின் அரசியல் உயர் பீடத்துக்கோ, கட்சியின் செயலாளருக்கோ அறிவித்திருக்கவில்லை.
கட்சி குறிப்பிட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த 6 மாதகாலமாக பல தடவைகள் அழைத்தும் அவர்கள் விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை. காலதாமதம் ஏற்படுத்தியே வந்தனர். இ-றுதியில் கடந்த 23 ஆம் திகதி விசாரணைக்கு வந்தார்கள்.
அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வாசித்துக்காட்டப்பட்டது. குற்றப்பத்திரிகையும் அவர்களுக்கு கையளிக்கப்பட்டது. மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதற்கு கால அவகாசம் கோரினார்கள். அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கட்சியினால் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
எதிர்வரும் 31 ஆம் திகதி ஒழுக்காற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த 23 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனும் பிரசன்னமாகியிருந்தார் என கட்சியின் செயலாளார் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.- Vidivelli