ஏறாவூர் வன்முறை சம்பவங்கள் : பிணையில் இரண்டு மாணவர்கள் விடுவிப்பு 13 பேருக்கு ஜூன் 08 வரை விளக்கமறியல்
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஏறாவூரில் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் 13 பேரை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கோட்டா கோ கம அமைதி ஆர்ப்பாட்டத்தின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொண்டதையடுத் ஏறாவூர் பகுதியில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 15 பேர் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2 மாணவர்கள் உட்பட 15 பேர் நேற்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான நஸீர் அஹமட்டின் காரியாலயம், அவரது உறவினரின் வீடு, ஹோட்டல்களுக்கு தீயிட்டுக் கொளுத்தியமை கொள்ளையயடித்தமை அத்துடன் 3 ஆடைத்தொழிற்சாலைகளை சேதப்படுத்தியமை தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்ஹவின் ஆலோசனைக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில், ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற விண்ணப்பித்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டி ருந்தது.
அதனடிப்படையில் அவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் வகையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli