முஸ்லிம் தனியார் சட்ட திருத்த முன்மொழிவுகள்: நல்ல விடயங்கள் அமுல்படுத்தப்படும்
புதிய நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கூறுகிறார்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள நல்ல விடயங்கள் அமுல் நடத்தப்படும். நான் அமைச்சுப்பொறுப்பினை ஏற்று சில தினங்களே கடந்துள்ளன. இச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை நான் முதலில் படித்துப்பார்க்க வேண்டும்.
அதன்பின்பே தீர்மானங்கள் மேற்கொள்ளவேண்டும் என நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; ‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஏற்கனவே அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த காலங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன.இவற்றினை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
இதே வேளை கடந்த 21.02.2022 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அப்போதைய நீதியமைச்சர் அலிசப்ரியினால் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரம் அமைச்சர்கள் சிலரின் பலத்த எதிர்பார்ப்பினையடுத்து நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் செய்வதில்லை எனத் தெரிவித்தார்.
காதிநீதிமன்ற முறையை இல்லாதொழிக்காது குடும்ப சமரசம் (Family Conciliate) என்ற பெயரில் அதனை இயங்கச் செய்யவேண்டும். முஸ்லிம் ஆண்களுக்கு பலதார மணம் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படவேண்டும். குடும்ப சமரசத்துக்கென ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட வேண்டும். அங்கு தீர்க்க முடியாத பிரச்சினைகள் மாவட்ட நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்பதே குறிப்பிட்ட அமைச்சரவைப்பத்திரத்தில் உள்ளடங்கியிருந்தன.
அப்போதைய அமைச்சர்கள் சரத் விரசேகர, விமல் வீரசங்க, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவைப்பத்திரத்தை கடுமையாக எதிர்த்தனாலே முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரியின் அப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் 2021 மார்ச் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை உபகுழு முன் வைத்த பிரேரணைக்கு அமைவாக முஸ்லிம் ஆண்களின் பலதார மணத்தை தடை செய்வதற்கும், காதி நீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்வதற்கும் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இத்திருத்தங்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவியதால் முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரி சில திருத்தங்களுக்கான அமைச்சரவைப்பத்திரத்தை கடந்த பெப்ரவரி மாதம் சமர்ப்பித்தார். இவ்வமைச்சரவைப்பத்திரமே எதிர்ப்புக்குள்ளாகி நிராகரிக்கப்பட்டது.– Vidivelli