நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை கானல் நீராகவே உள்ளது. சமகால தேசிய அரசியல் நகர்வுகளை நோக்குமிடத்து, கிட்டிய எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான விடயங்கள் எதுவும் நடக்கப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதியாகிறது.
ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவிக்கு மேலதிகமாக நிதியமைச்சராகவும் நேற்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமராகப் பதவியேற்றிருந்தார். இதனையடுத்து, சர்வதேச நாடுகளுடன் உள்ள உறவுகளைப் பயன்படுத்தி இலங்கைக்குத் தேவையான உதவிகளை ரணில் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் மேலோங்கியது. அவர் பதவியேற்றதைத் தொடர்ந்து ஒரு சில உதவிகள் நாட்டை வந்தடைந்ததும் உண்மைதான். இந்தியா வழங்கும் 200 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவியும் நாளை இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ரணில் எதிர்பார்த்த வகையில் வெளிநாட்டு உதவிகள் இலங்கைக்கு கிடைக்கப் பெறவில்லை. கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை உதவிகளை வழங்குவது பற்றிச் சிந்திக்க முடியாது என பல நாடுகள் கைவிரித்துவிட்டதாக அறிய முடிகிறது. மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஜனாதிபதியை பதவி விலகக் கோரி போராடி வருகின்ற நிலையில், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிய பின்னரே உதவிகள் குறித்துச் சிந்திக்கலாம் என அந்நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே, நாட்டின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதையே அவதானிக்க முடிகிறது. மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சகல பொருட்களினதும் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன. பணவீக்கம் விரைவில் 40 வீதமாக அதிகரிக்கும் என்பதை மத்திய வங்கி ஆளுநரும் பிரதமரும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட் கிழமை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைமைகள் குறித்த அச்சத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளன.
“சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அதனுடனான செயற்திட்டம் வெற்றியளிக்குமேயானால், அடுத்த வருடமளவில் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடையும் என்று எதிர்பார்க்கமுடியும். இருப்பினும் பணவீக்கமானது 30 – முதல் 40 சதவீதமாகவே தொடர்ந்து காணப்படும். அதனை மத்திய வங்கியினால் குறைக்க முடியாது. இதன் விளைவாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைய நேரும் என்பதுடன், மேலும் பலர் வறுமைக்குத் தள்ளப்படுவர்.
இறக்குமதிகள் மூலமான செலவினங்கள் ஏற்றுமதிகள் மூலமான வருமானத்தை விடவும் உயர்வாகக் காணப்படுகின்றது. எரிபொருள், எரிவாயு உள்ளடங்கலாக நாளாந்தம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான காரியமாக மாறியிருக்கின்றது” என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே உலக வங்கியும் இலங்கைக்கு தற்போது உதவிகளை வழங்க முடியாதுள்ளதாக அறிவித்துள்ளது. உரியவாறான நுண்பாகப் பொருளாதாரக் கொள்கைச் செயற்திட்டமொன்று உருவாக்கப்படும் வரையில் இலங்கைக்கு புதிய நிதியுதவிகளை வழங்குவதற்குத் தாம் திட்டமிடவில்லை என்று உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து இலங்கை அதன் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் என்பதற்கான சாத்தியங்களையும் இப்போதைக்கு காண முடியவில்லை. உலக நாடுகளும் உதவி நிறுவனங்களும் கையைவிரித்துவிட்டன. இந் நிலையில் மிகவும் இருள் சூழ்ந்த எதிர்காலமே நம்மை முன்னோக்கியுள்ளது. ஆகஸ்ட் மாதமளவில் உணவுப் பற்றாக்குறை உச்சத்தைத் தொடும் என பிரதமர் எச்சரித்துள்ளார். அவ்வாறானதொரு நிலை வந்தால் இலங்கை பட்டினிச்சாவையே எதிர்கொள்ள வேண்டி வரும்.
இவ்வாறான நெருக்கடியை நாம் எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சிகள் என எல்லோரும் அவரவரது அரசியல் நோக்கங்களை முன்னிறுத்தியே செயற்பட்டு வருகின்றனர். கோட்டா கோ கம போராட்டமும் சோபையிழந்து வருவது போல் தெரிகிறது. உலகின் மிக மோசமானதொரு பின்தங்கிய நாடு என்ற பெயரை இலங்கை விரைவில் பெறப் போவது மாத்திரமே இப்போதைக்கு உறுதியாகத் தெரிகிறது.– Vidivelli